8.11.08

10, 12ம் வகுப்பு தேர்வு: மேலும் 5 நிமிடங்கள்

சென்னை: பத்தாவது மற்றும் பிளஸ்டூ பொதுத் தேர்வுகளின்போது, வினாத்தாளை மாணவ, மாணவியர் படிக்கும் நேர அளவு 10 நிமிடத்திலிருந்து 15 நிமிடமாக அதிகரி்கப்பட்டுள்ளது.
அனைவருக்கும் கல்வி இயக்கம் (எஸ்.எஸ்.ஏ.) சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலம் பேசும் பயிற்சிக்கான சி.டி. வழங்கும் விழா, ஆசிரியர்களுக்கு பயிற்சி கையேடு வழங்கும் விழா, அரசு பள்ளிகளுக்கு கம்ப்யூட்டர் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழாக்கள் சென்னை எழும்பூரில் அரசு அருங்காட்சியக கலையரங்கில் நடந்தது.
விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்துகொண்டு அரசு பள்ளிகளுக்கு கம்ப்யூட்டர்களையும், ஆங்கில பயிற்சிக்கான சி.டி.க்களையும் வழங்கினார்.
நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், உலகத்தோடு தொடர்புகொள்வதற்கு ஆங்கில மொழி அவசியம்.மாணவர்கள் ஆங்கில மொழியில் புலமை பெற வேண்டும். இதற்காக அரசு மேல்நிலைப் பள்ளிகளில் உயர்நிலைப் பள்ளிகளில் ஆங்கில மொழி பயிற்சிக்கூடங்கள் கொண்டுவரப்படுகின்றன. அரசு ஆரம்ப பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு 10 ஆயிரம் கம்ப்யூட்டர்கள் வழங்க முடிவு செய்யப்பட்டு இதுவரை 7 ஆயிரம் கம்ப்யூட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு 1,150 பள்ளிகளுக்கு 3 ஆயிரத்து 450 கம்ப்யூட்டர்கள் வழங்கப்பட உள்ளன.
தற்போது நுழைவுத்தேர்வு இல்லாததால் அதிக மார்க் பெறும் கிராமப்புற மாணவர்கள் எளிதாக என்ஜினீயரிங் உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்புகளில் சேருகிறார்கள். ஆனால், ஆங்கில அறிவு குறைவு காரணமாக முதல் செமஸ்டரில் தடுமாறுகிறார்கள். இந்த குறைப்பாட்டைப் போக்கும் வகையில் ஆங்கில பயிற்சி அளிக்கும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆங்கில புலமையும், கம்ப்யூட்டர் அறிவும் இருந்தால் பிளஸ்-2 முடிக்கும் மாணவர்களுக்கு உலகில் எந்த மூலையிலாவது வேலை கிடைப்பது உறுதி.
இந்த ஆண்டிற்குள் அனைத்து அரசு ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளுக்கும் கம்ப்யூட்டர்கள் வழங்கப்பட்டு விடும். தற்போது எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கேள்வித்தாளை படிக்க 10 நிமிடம் கூடுதல் நேரம் கொடுக்கப்படுகிறது. இந்த ஆண்டிலிருந்து வினாத்தாள் படிக்க கூடுதலாக 5 நிமிடம் கொடுக்கப்பட்டு 15 நிமிடமாக அதிகரிக்கப்படும். பிளஸ்-2 செய்முறை தேர்வு, தேர்வு நடைமுறை எதிலும் எவ்வித மாற்றமும்செய்யப்படவில்லை என்றார் தங்கம் தென்னரசு.
நன்றி: ThatsTamil

0 comments: