16.12.08

என் அன்பிற்கினிய ஆசான்

இக்கட்டுரை நம் பள்ளி தொடர்புடையதல்ல என்றாலும் நம் பள்ளியைப் போன்று புகழ் பெற்ற கிரஸன்ட் பள்ளி தொடர்புடையது. அப்பள்ளியின் முன்னாள் மாணவர் அப்துல் கையூம் அவர்கள் தமது அன்பிற்கின ஆசானை அன்புடன் நினைவு கூர்ந்துள்ளார். நம் பள்ளி முன்னாள் மாணவர்களும் இது போல் நமது ஆசான்களை நினைவு கூரலாமே!

Crescent Residential School - First Batch

“அருளன்பு பண்பில் அளவற்ற உந்தன்
திருநாமம் போற்றி துவக்குகின்றேன் அல்லாஹ்”

திருவிதாங்கோடு ஈந்த தீந்தமிழ்ப் பாவலனை என் ஆசான் என்று கூறிக்கொள்வதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. காட்டாற்று வெள்ளமென பெருக்கெடுத்து வரும் அவரது கன்னித்தமிழை நாள் முழுவதும் கேட்டுக் கொண்டே இருக்கலாம். “தமிழுக்கு அமுதென்று பேர்” என்ற பாவேந்தனின் பாடலை மெய்ப்பிக்கும் வகையில் அவரது தீந்தமிழ்ப்பேச்சில் தேன்பாகு போன்ற ஒரு இனிமை கலந்திருக்கும்.

இன்று ஒரு மாபெரும் கல்வி நிறுவனமாக கிளைகள் படர்ந்து வண்டலூரில் இயங்கி வரும் கிரசென்ட் பள்ளியின் வரலாற்றுப் பின்னணியை இங்கே நினைவு கூறுவது அவசியம்.
1969-ஆம் ஆண்டு என்னையும் சேர்த்து 19 மாணவர்களின் எண்ணிக்கையுடன் துவங்கப்பட்ட பள்ளி அது. பிறைப்பள்ளியிலிருந்து புறப்பட்ட முதல் அணிவகுப்பு நாங்கள். சென்னை சேத்துப்பட்டு பகுதியில் ஹாரிங்டன் சாலையில் “நமாஸி வில்லா” என்ற வாடகை வீட்டில்தான் இந்த சுடர்மிகு விடியல் துவங்கியது. ‘காயிதே ஆஸம்’ முஹம்மது அலி ஜின்னா, அல்லாமா இக்பால் போன்ற பெருந்தலைவர்கள் தங்கிச் சென்ற ஒரு பணக்கார குடும்பத்தின் இல்லம் அது.

பேராசிரியர் இறையருட் கவிமணி கா.அப்துல் கபூர் என்ற ஒரு மாமனிதரை எங்கள் பள்ளிக்கு முதல்வராக பெற்றது நாங்கள் செய்த அரும்பெரும் பேறு என்றுதான் கூற வேண்டும். அந்த இல்லத்தில் ஒரு பகுதியில்தான் பேராசிரியரின் குடித்தனம். தன் அன்புத்துணைவியார் மற்றும் அருமை மைந்தன் ஜமால் முகம்மதுடன் வசித்து வந்தனர். அந்த அம்மையாரின் கைப்பக்குவத்தில் தயாராகும் அறுசுவை பண்டங்களை பலமுறை சுவைபார்த்த பாக்கியம் என் நாவுக்குண்டு.

ஆறாம் வகுப்பு முதல் மெட்ரிக் வரை - ஆறு ஆண்டுகள் - அந்த மனிதருள் மாணிக்கத்தின் அரவணைப்பில் நாங்கள் வளர்ந்தோம். அது ஒரு குருகுல வாசம் போன்ற அமைப்பு. இருபத்து நான்கு மணிநேரமும் ஒரு தமிழ்க்கடலின் அருகாமையில் இருந்துக்கொண்டு தமிழ்ச்சுவையை பருகிய அனுபவங்களை எழுத்தினில் வடிக்க இயலாது. அரிய மார்க்க ஞானங்களை அவரிடமிருந்து நாங்கள் பெற முடிந்தது.

ஒருமுறை “கவிஞராக” என்ற ஒரு நூலை எனக்கு அவர்கள் பரிசளித்து மரபுக்கவிதை எழுத ஊக்குவித்தார்கள். கவிதை வரிகளைக் கொடுத்து ‘நேரசை’ ‘நிறையசை’ பிரிப்பது எவ்வாறு, ‘தேமா’, ‘புளிமா’ எங்ஙனம் கண்டறிவது என்று பயிற்சி அளிப்பார்கள்.

பேராசிரியரின் சந்தம் கமழும் பேச்சும், எழுத்தும் என்னுள் தமிழார்வத்தை மென்மேலும் தூண்டி விட்டது. கவிஞர் கண்ணதாசனின் தலைமையில் கவியரங்கம் ஒன்றினை எங்கள் பள்ளியில் ஏற்பாடு செய்திருந்தனர். ‘அழுகை’ என்ற தலைப்பில் “மலையழுதால் நதியாகும்; மனமழுதால் கவியாகும்” என்று தொடங்கி “ஈன்ற பொழுதில் தாயழுத கண்ணீரே நாமாகும்” என்று முடிவுறும் என் கவிதையை கவியரசும், பேராசிரியரும் வெகுவாக ரசித்து பாராட்டினார்கள்.

அதே பள்ளியில் தமிழாசிரியராக இருந்து எங்களை ஊக்குவித்த மற்றொரு ஆசான் புலவர் நாஞ்சில் ஷா அவர்கள். ‘நபிகள் நாயகம் பிள்ளைத் தமிழ்’ என்ற நூலை வழங்கியவர். நாஞ்சில் ஷாவின் மாண்பினை கவியரசு கண்ணதாசன் இவ்வாறு புகழ்ந்தார்.

“நாஞ்சில் ஷா காட்டுகின்ற
நல்ல நபி நாயகத்தை
வாஞ்சையுடன் பார்த்தபின்னர்
மற்றவற்றைக் கற்பதற்குக்
கடைகடையாய் ஏறிக்
கால்வலிக்க நான் நடந்தேன்;

எத்தனையோ அற்புதங்கள்
எத்தனையோ அதிசயங்கள்
அன்னை ஆமினா
அளித்தமகன் வாழ்க்கையிலே!”

இவ்விரண்டு நாஞ்சில் நாட்டு நற்றமிழ் நாவலர்களின் நாவாற்றலில் நான் நனைந்து மகிழ்ந்த நாட்களை நினைவு கூறுகையில் என் நெஞ்சமெலாம் தேனாய் இனிக்கும்.

கல்லூரி முதல்வர் பதவியை துறந்து விட்டு எங்களைப் போன்ற பிஞ்சு மாணவர்களுக்கு பாடம் நடத்த வந்த பேராசிரியரை “பிழைக்கத் தெரியாத மனிதர்” என்றே பலரும் விமர்சித்தனர். அதை அவர் ஒரு பதவி இறக்கமாகவே கருதவில்லை. அதற்கு மாறாக எதிர்கால நட்சத்திரங்களை உருவாக்கும் முயற்சியில் முனைப்பாகச் செயல்பட்டார்.

“உயர்ந்த மலையின் உச்சிப் பனியாய்
அமர்ந்த பதவியை அர்ப்பணித்து விட்டுப்
பள்ளம் நோக்கிப் பாய்ந்த வெள்ளம்
இறையருட் கவிமணி உள்ளம் !

அதனாலேதான் ..
கல்லூரி முதல்வர் பதவியைத் துறந்து
அரும்பு நிலாக்களை அரவணைப்பதற்கென
பிறைப்பள்ளியின் முதல்வர் பொறுப்பை
நிறைவுடன் ஏற்று நடத்திக் காட்டினார்.”

பேராசிரியரின் மனோபாவத்தை அறிந்து மனதாரப் புகழ்ந்த அவரது ஆத்மார்த்த ரசிகர் கபூர்தாசனின் வரிகள் இவை. இதனை எழுதிய கவிஞருக்கும் பேராசிரியருக்கும் ஏற்பட்ட ஒரு தெய்வீக நட்பை இங்கே விவரித்தே ஆக வேண்டும். இலக்கிய ஏட்டில் பதிவு செய்யப்பட வேண்டிய சுவையான நிகழ்வு இது. கபிலர் பிசிராந்தையாருக்கிடையே இருந்த நட்புக்கும், ஒளவையார் அதியமானுக்கிடையே இருந்த நட்புக்கும் இணையானது இந்த இலக்கிய பிணைப்பு,

பள்ளி அரையாண்டு விடுமுறையின்போது நான் என் சொந்த ஊர் நாகூர் புறப்பட்டுக் கொண்டிருந்தேன். அப்பொழுது பேராசிரியர் என்னை அழைத்தார்கள். அவர்கள் வசம் கத்தை கத்தையாக கடிதங்கள் இருந்தன. பேராசிரியரின் கவிநடையில் காதல் ஏற்பட்டு மனதைப் பறிகொடுத்த ஒரு ரசிகரின் மடல்கள் அது. பேராசிரியரின் சொல்வண்ணத்தில் சொக்கிப்போய் மதுவுண்ட வண்டாய் ரீங்காரமிடும் கவிநயம் சிந்தும் காதல் கடிதங்கள் அவை. நாளடைவில் இந்த இலக்கியக் காதல் முற்றிப்போய் தன் இயற்பெயரை மாற்றி “கபூர் தாசன்” என்று மாற்றி கொண்டார் அந்த ரசிகர்.

“தம்பி! நீ உன் ஊருக்கு அருகாமையிலிருக்கும் காரைக்காலுக்குச் சென்று இந்த முகவரியில் இருக்கும் நபரைச் சென்று சந்தித்து வா!” என்று என்னை பணித்தார்கள். நான் நேரில் சென்று விசாரித்தபோது அந்த வாசகரின் இயற்பெயர் செ.மு.வாப்பு மரைக்காயர் என்று தெரிய வந்தது. நான் கபூர் சாகிப்பிடமிருந்து வந்திருக்கும் மாணவன் என்று என்னை அறிமுகம் செய்தபோது அவர் முகத்தில் ஏற்பட்ட பூரிப்பை பார்க்க வேண்டுமே! தன் ஆத்மார்த்த நாயகனிடமிருந்து வந்த தூதுவனாக என்னைக் கண்ட மாத்திரத்திலேயே உணர்ச்சிவசப்பட்டுப் போனார். பேராசிரியரின் உடல்நலம் குறித்து விசாரித்து அவரது சொல்லாற்றலைப் புகழ்ந்து மணிக்கணக்காக பேச ஆரம்பித்து விட்டார். பாரதிக்கு ஒரு தாசன் பாரதிதாசனைப் போன்று, அந்த பாரதிதாசனுக்கும் ஒரு தாசன் சுப்பு ரத்தின தாசன் (சுரதா) போன்று இந்த கபூர்தாசனின் குருபக்தி கண்டு வியந்துப் போனேன்.

பிறைப்பள்ளியில் எங்களுக்கு தமிழ் பாட வகுப்பு முதல்வரே நடத்துவார். தமிழ் வகுப்பு என்றாலே எங்களது உற்சாகம் பன்மடங்காகும். அந்த கம்பீரத் தோற்றம், அடுக்குத் தொடரில் அதறும் தொனி, அடலேறு போன்ற ஒரு மிடுக்கு, கடல் மடை திறந்தாற்போல் ஊற்றெடுக்கும் அந்த அருந்தமிழ் நடை, கேட்போரை கிறுகிறுக்க வைக்கும்.

“அடையா நெடுங்கதவும் அஞ்சலென்ற சொல்லும்
உடையான் சடையன்” - என்று சடையப்ப வள்ளலைப் புகழும்போதும்

“உமறு குமுறிடில் அண்ட முகடும் படீரென்னும்
உள்ளச்சம் வையும் பிள்ளாய்” - என்ற உமறுப் புலவரின் உரையை அழுத்தம் திருத்தமாக எடுத்துரைக்கும் போதும் சிங்கத்தின் கர்ஜனையை கேட்பது போலிருக்கும்.

தபலா அதிர்வு போலத்
தாளம் பிசகாக் கதியில்
சபையில் ஒலிக்கும் பேச்சில் – கபூர்
சந்தனம் கமழச் செய்வார் - என்று பொருத்தமாகப் பாடுவார் கவிஞர் ஈரோடு தமிழன்பன்

“செந்தமிழுக்கு ஒரு சேதுப்பிள்ளை” என்பதைப்போல் “அழகுத் தமிழுக்கு ஓர் அப்துல் கபூர்” என்று பேராசிரியரின் பெருமையை பறைசாற்றுவோர் உண்டு. பேராசிரியரைப் பற்றி குறிப்பிடுகையில் கவிஞர் மு.மேத்தா இப்படிக் கூறுவார் :

“திகழும் அவர் கவிதையில் தேமா, புளிமா!
ஆனால் அப்துல் கபூரோ
ஆமா எவர்க்கும் போடாத அரிமா!

எங்கள் முதல்வர் எழுதி நாங்கள் தினமும் இறைவணக்கப் பாடலாக பாடிக் கொண்டிருந்த “ஹஸ்பி ரப்பி ஜல்லல்லாஹ்” என்ற பாடலை இசைத்தட்டாக வெளியிடும் நாட்டம் வந்தது. நாகூர் ஹனீபா அவர்கள் ஐந்து மாணவர்களைத் அவர்களுடன் சேர்ந்து சேரிசை (‘கோரஸ்’) பாட தேர்ந்தெடுத்தார்கள். அந்த ஐந்து மாணவர்களில் நானும் ஒருவன் என்பது எனக்கு பெருமையைச் சேர்த்தது. “ஹிஸ் மாஸ்டர்ஸ் வாய்ஸ்” பதிவரங்கத்தில் ஐந்து மணிநேரத்துக்கும் மேலாக ஒலிப்பதிவு நடந்துக் கொண்டிருந்தது.

“இம்மை வாழ்வின் சோதனையில்
இதயப் பொறுமை தந்திடுவாய் !
வெம்மை நெருப்பை விட்டெம்மை
விலக்கித் தடுத்துக் காத்திடுவாய் !
செம்மை பொழியும் சுவனத்தின்
செழிக்கும் இன்பம் ஈந்திடுவாய் !
எம்மை நல்லோர் நற்குழுவில்
என்றும் சேர்ப்பாய் இனியோனே !”

என்று அந்த வெண்கலக் குரலோன் இசைமுரசு இசைக்க நாங்களும் சேர்ந்து பாடினோம். இவ்வரிகளின் கருத்தாழத்தை செவிமடுத்த இந்து மதத்தைச் சார்ந்த இசையமைப்பாளரின் கண்கள் பனித்து விட்டன. “எத்தனை சக்தி வாய்ந்த வார்த்தைகள் இவைகள்?” என்று செயலிழந்துப் போனார்.

தமிழக கல்லூரி வரலாற்றிலேயே முதன் முதலாக ஒரு தமிழ்ப் பேராசிரியர் கல்லூரி பேராசிரியராக பணி ஏற்றது கபூர் சாகிப்தான். உருது மொழியில் நடைபெறும் “முஷாயிரா” போன்று தமிழ்மொழியில் “கவியரங்கம்” என்ற பெயரில் இன்று நாடெங்கும் நடைபெறும் வழக்கத்தை வாணியம்பாடியில் முதன் முதலில் அறிமுகம் செய்த பெருமையும் அவர்களைத்தான் சாரும்.

தமிழில் உரை அலங்காரத்திற்கும், நடை அலங்காரத்திற்கும் புகழ் பெற்றவர் அறிஞர் அண்ணா. பேராசிரியர் எழுதிய ‘இலக்கியம் ஈந்த தமிழ்’ என்ற நூலின் முதற்கட்டுரையை அதில் காணப்பட்ட செந்தமிழ் நடைக்குவேண்டி தன் “திராவிட நாடு” பத்திரிக்கையில் வெளியிட்டு பாராட்டி மகிழ்ந்தார்.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருந்தபோது நாவலர் இரா. நெடுஞ்செழியன், பேராசிரியர் க. அன்பழகன், மதியழகன் ஆகியோருடன் ஏற்பட்ட நெருக்கம் பிற்காலத்தில் ‘எங்கும் தமிழ்; எதிலும் தமிழ்’ என்று தமிழ் மறுமலர்ச்சி பூண்டபோது அவர்களை நாடறிந்த நற்றமிழ் பேச்சாளராக தமிழ்கூறும் நல்லுலகத்திற்கு அடையாளம் காண்பித்தது. கழகத் தலைவர்களில் ஒருவரான சாதிக்பாட்சா பேராசிரியரின் மாணவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

இறையருட் கவிமணி அவர்கள் பன்மொழியில் புலமை பெற்றிருந்தார்கள். தமிழ், மலையாளம், அரபி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் அவர்கள் அடைந்திருந்த திறன் அளவிடற்கரியது. தக்கலையில் இஸ்லாமிய ஆராய்ச்சி நிலையம் நிறுவி இறுதி மூச்சுவரை இலக்கியத் தொண்டாற்றி வந்தார்கள்.

பலகாலம் முன்பு ஒரு நோன்பு பெருநாளின்போது அவர்கள் எனக்கு அனுப்பியிருந்த மடலொன்றை இன்றும் பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறேன். உள்நாட்டு அஞ்சலில், மூன்றே மூன்று வரிகளில் கச்சிதமாக தட்டெச்சு செய்யப்பட்ட வாழ்த்து அது:

ஈகைத் திருநாள்
இன்பம் தருக;
இறையருள் பொழிக !

அந்த காவிய நாயகனின் நினைவுகள் அலைமோதும் போதெல்லாம் இந்த அஞ்சல் வாசகத்தை மீண்டும் மீண்டும் படித்துப் பார்ப்பேன். நிறைவான வாழ்வை வாழ்ந்து இறைவனடிச் சேர்ந்த ஆசானின் நினைவுகளில் என் கண்கள் குளமாகிப் போகும்.

- அப்துல் கையூம்
நன்றி: abdulqaiyum.wordpress.com


2 comments:

அப்துல் கையூம் said...

தங்களது வலைப்பதிவில் எனது கட்டுரையை கண்டு மனம் நெகிழ்ந்துப் போனேன். மிக்க நன்றி.

எனது ஆசானின் நினவாக ஒரு வலைப்பதிவு தொடங்கி இருக்கின்றேன்.

இதோ அதன் சுட்டி:

http://gafoorsahib.blogspot.com

பிறைநதிபுரத்தான் said...

பதிவுகளை படிப்பதற்கு இடைஞ்சலாக - எழுத்துக்களின் நிறம் இருக்கிறது..தயவு செய்து தெளிவாக தெரிவதற்கேற்றவாறு எழுத்தின் நிறத்தை மாற்றுங்களேன்..