27.12.08

ஆராய்ச்சியாளர்களாகும் அண்ணா பல்கலை. மாணவர்கள்!

ஆராய்ச்சியாளர்களாகும் அண்ணா பல்கலை. மாணவர்கள்!
கோவை, டிச. 25: வரும் 2010-ம் ஆண்டு முதல் அண்ணா பல்கலை.யில் பயிலும் மாணவர்கள் அனைவரும் "ஆய்வாளர்கள்' என்றே அழைக்கப்படுவர்.
மாறிவரும் வர்த்தக சூழலில் சர்வதேச நிதி நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளில் கோவை, திருப்பூரை சேர்ந்த நிறுவனங்கள் சிக்கித் தவிக்கின்றன. வர்த்தகத்தில் எதிர்நோக்கும் பிரச்னையை சமாளிக்க தொழில் துறையினருக்கு வல்லுநர்களின் ஆலோசனை தேவைப்படுகிறது. இத்தகைய ஆலோசனையை வழங்கும் அரும்பணியை கோவை அண்ணா பல்கலை.யில் பயிலும் மாணவர்கள் செய்து வருகின்றனர்.
இதற்காக பல தொழில் நிறுவனங்களுடன் ஏற்கனவே புரிந்துணர்வு ஒப்பந்தங்களை அண்ணா பல்கலை. செய்துள்ளது. மேலும், பல நிறுவனங்களுடன் இத்தகைய ஒப்பந்தங்களை ஏற்படுத்தும் முயற்சியிலும் அண்ணா பல்கலை. ஈடுபட்டுள்ளது.
இதுகுறித்து அண்ணா பல்கலை. துணைவேந்தர் ஆர்.ராதாகிருஷ்ணன் கூறியது: வரும் 2009-ம் ஆண்டு மார்ச் மாதம், தொழில் துறையினருக்கு ஆலோசனை வழங்கும் மையம் அண்ணா பல்கலை. வளாகத்திலேயே அமைக்கப்படும். இந்த மையத்தில் இளநிலை, முதுநிலை, ஆராய்ச்சி மாணவர்கள் உறுப்பினர்களாக இருப்பர். அண்ணா பல்கலை.யை அணுகும் நிறுவனங்களுக்கு வர்த்தகத்தை மேம்படுத்துவதை குறித்தும், மாறிவரும் சூழலை சமாளிப்பது குறித்தும் மாணவர்கள் ஆலோசனை வழங்குவர். தொழில் துறையினருக்கு அறிவு பூர்வமான ஆலோசனைகளை வழங்கும் அனைத்து மாணவர்களும் ஆராய்ச்சியாளர்களாகவே கருதப்படுவர்.
இத் திட்டத்தின் ஒரு பகுதியாக அனைத்து மாணவர்களுக்கு இ-மெயில் முகவரி அளிக்கப்பட்டுள்ளது. பாடத் திட்டம் உள்பட பல்கலை. தெரிவிக்கும் அனைத்து தகவலும் இ-மெயில் மூலமே அனுப்பப்படும்.
அண்ணா பல்கலை.யின் கீழ் செயல்படும் அனைத்து நிறுவனங்களும் கணினி வலை மூலம் இணைக்கப்படும். தொழில் துறை நிபுணர்களின் உரையை விடியோ கான்பிரன்ஸ் மூலம் மற்ற கல்லூரி மாணவர்களும் நேரடியாக பார்க்கத் தேவையான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
நானோ தொழில் நுட்பம், எலக்ட்ரானிக் கழிவு மேலாண்மை, திடக் கழிவு மேலாண்மை, மரபு சாரா எரிசக்தி ஆகிய துறைகளில் ஆராய்ச்சி செய்ய புதிய மையங்கள் ஏற்படுத்தப்படும் என்றார்.
நன்றி்: இந்தியன் முஸ்லிம் அசோசியேஷன் துபாய்

0 comments: