9.2.10

ஒரு பொறியியல் கல்லூரியில் இருந்து மற்றொரு.............

ஒரு பொறியியல் கல்லூரியில் இருந்து மற்றொரு பொறியியல் கல்லூரிக்கு மாற்றம் பெற என்ன செய்ய வேண்டும்?
தமிழ்நாடு அரசின் தொழில் நுட்பக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பொறியியல் கல்லூரியில் கல்வி பயின்று வரும் மாணவர்கள் சில கட்டுப்பாடுகளுடன் ஒரு பொறியியல் கல்லூரியில் இருந்து மற்றொரு பொறியியல் கல்லூரிக்கு மாற்றம் செய்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி,

1. அரசு மற்றும் அரசு உதவி பெற்று வரும் பொறியியல் கல்லூரிகளில் பயின்று வரும் மாணவர்கள் தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெற்று வரும் பொறியியல் கல்லூரிகளுக்குள் அவர்கள் படித்து வரும் அதே பிரிவின் கீழ் இடம் மாற்றம் பெற்றுக் கொள்ள முடியும். மாற்றம் செய்து கொள்ள விரும்பும் கல்லூரிக்கு அரசு அங்கீகரித்துள்ள இடத்திற்கு அதிகமாகாத நிலையில் மாற்றத்திற்கான அனுமதி வழங்கப்படுகிறது.

2. இதேபோல் சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளில் பயின்று வரும் மாணவர்கள் தமிழ்நாட்டில் உள்ள மற்ற சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளுக்குள் அவர்கள் படித்து வரும் அதே பிரிவின் கீழ் இடம் மாற்றம் பெற்றுக் கொள்ள முடியும். மாற்றம் செய்து கொள்ள விரும்பும் கல்லூரிக்கு அரசு அங்கீகரித்துள்ள இடத்திற்கு அதிகமாகாத நிலையில் இரு கல்லூரி முதல்வர்களின் ஒப்புதலுடன் மாற்றத்திற்கான அனுமதி வழங்கப்படுகிறது.

மேற்காணும் இட மாற்றத்திற்கான அனுமதி ஒரே பல்கலைக் கழகத்தின் கீழ் இணைத்துக் கொண்டுள்ள கல்லூரிகளுக்கு மட்டும் பொருந்தும். பிற பல்கலைக் கழகத்தின் கீழ் இணைக்கப்பட்ட கல்லூரிகளுக்கு மாற்றம் செய்து கொள்ள விரும்பினால் படித்து வரும் கல்லூரியில் நடந்த பல்கலைக்கழகத் தேர்வில் அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும்.

ஒரு பொறியியல் கல்லூரியில் இருந்து மற்றொரு பொறியியல் கல்லூரிக்கு மாற்றம் செய்து கொள்ள விரும்பும் மாணவர்கள் மே மற்றும் நவம்பர் மாதத்தில் தமிழ்நாடு அரசின் தொழில் நுட்பக் கல்வி இயக்ககத்தில் அல்லது இந்த இயக்கத்திற்கான இணைய தளத்தில் மாற்றம் செய்து கொள்வதற்கான விண்ணப்பப் படிவத்தைப் பெற்று, பூர்த்தி செய்து, அந்தப் படிவத்தில் தற்போது பயின்று வரும் பொறியியல் கல்லூரி முதல்வர் மற்றும் மாற்றம் செய்து கொள்ள விரும்பும் பொறியியல் கல்லூரி முதல்வர் ஒப்புதலைப் பெற்று சென்னையிலுள்ள தொழில் நுட்பக் கல்வி இயக்கக ஆணையாளருக்கு விண்ணப்பிக்க வேண்டும். அந்த விண்ணப்பப் படிவத்தில் இருக்கும் விபரங்கள் அனைத்தும் சரியாக இருக்கும் பொழுது இட மாற்றத்திற்கான அனுமதி வழங்கப்படுகிறது.

இந்திய அரசின் பல்கலைக்கழக மானியக் குழுவால் தரம் உயர்த்தப்பட்ட பொறியியல் கல்லூரிகளில் அதாவது, பல்கலைக் கழகமாக அங்கீகரிக்கப்பட்டவற்றில் பயின்று வரும் மாணவர்கள் இடம் மாற்றம் செய்து கொள்ள வாய்ப்புகள் இல்லை.

நன்றி-லெப்பைகுடிகாடு.காம்

0 comments: