1.3.10

+ 2 தேர்வு இன்று தொடக்கம்

சென்னை: இன்று (மார்ச் 1) தமிழ்கத்தில் +2 தேர்வுகள் தொடங்குகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 6.89 லட்சம் மாணவ, மாணவியர் இந்த தேர்வை எழுதவுள்ளனர்.

இதுகுறித்து அரசு தேர்வுத் துறை இயக்குநர் வசுந்தராதேவி வெளியிட்ட செஉதி அறிக்கையில்:

"மார்ச் 1-ம் தேதி தொடங்கும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 5,233 மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 6.89 லட்சம் மாணவ, மாணவியர் பங்கேற்கின்றனர்.

இவர்களில் 3,22,381 பேர் மாணவர்கள். 3,67,306 பேர் மாணவிகள்.

கடந்த ஆண்டைக் காட்டிலும் கூடுதலாக 42,055 மாணவ, மாணவியர் இந்த ஆண்டு தேர்வெழுத உள்ளனர். மாணவர்களைவிட 44,925 மாணவிகள் கூடுதலாகத் தேர்வெழுதுகின்றனர்.

கடந்த ஆண்டைவிட மாணவர்கள் எண்ணிக்கை 17,481 அதிகம்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முழுவதுமாக மேல்நிலைப் பள்ளி பொதுத் தேர்வுக்கு மொத்தம் 1,809 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சென்னையில் 48,730 பேர்...: சென்னையில் 436 மேல்நிலைப் பள்ளிகளில் இருந்து மொத்தம் 48,730 மாணவ, மாணவியர் 136 தேர்வு மையங்களில் தேர்வெழுதுகின்றனர்.

இவர்களில் 22,312 பேர் மாணவர்கள். 26,418 பேர் மாணவிகள்.

சென்னைக்கு மட்டும் முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் தலைமையில் 50 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

புதுச்சேரியில் அமைக்கப்பட்டுள்ள 30 தேர்வு மையங்களில் 87 பள்ளிகளைச் சேர்ந்த 12,588 பேர் தேர்வெழுதுகின்றனர்.

பள்ளி மாணவர்கள் தவிர 53,564 தனித்தேர்வர்கள் தேர்வெழுத பதிவு செய்துள்ளனர்.

பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாற்றுத்திறன் குறைபாடுடைய மாணவர்கள், பார்வையற்றோர், காதுகேளாதோர், வாய் பேசாதோர் மற்றும் இதர உடல் ஊனமுற்றோருக்காக மாணவர் சொல்வதை எழுதும் ஒரு சிறப்பு ஆசிரியர் நியமிக்கப்படுவார்.

ஒரு மொழிப் பாடம் தவிர்த்து மற்றும் தேர்வில் கூடுதலாக ஒரு மணி நேரம் சலுகை வழங்கப்படும்.

வினாத்தாள் கட்டு காப்பு மையங்களில் 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு போடப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட தேர்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் கல்வித் துறை அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுவர்.

இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் தேர்வுகளின் போது அனைத்து தேர்வு மையங்களிலும் அதே மாவட்டத்தைச் சேர்ந்த வேறு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், முதன்மைக் கண்காணிப்பாளராக இருந்து தேர்வினை நடத்தும் முறை இவ்வாண்டும் செயல்படுத்தப்படுகிறது.

எக்காரணம் கொண்டும் பொதுத் தேர்வு மையங்களில், தேர்வு முடியும் வரை அப்பள்ளியைச் சேர்ந்த தாளாளர்களோ, ஆசிரியர்களோ, அடிப்படைப் பணியாளர்களோ தேர்வு நடக்கும் வளாகத்தில் இருக்கக் கூடாது என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

காப்பி அடித்தால் 2 ஆண்டு தேர்வெழுத முடியாது: துண்டுத்தாள் வைத்திருத்தல், துண்டுத்தாள்களை பார்த்து எழுத முயற்சித்தல், பிற மாணவர்களைப் பார்த்து எழுதுதல், தேர்வு அதிகாரிகளிடம் முறைகேடாக நடந்து கொள்ளுதல், தேர்வுத்தாள் மாற்றம் செய்தல், ஆள்மாறாட்டம் செய்தல் போன்றவை கடுங்குற்றமாகும்.

தேர்வறையில் தடை செய்யப்பட்ட துண்டுச்சீட்டு வைத்திருந்தாலோ, அச்சிடப்பட்ட புத்தகத்தை வைத்திருந்தாலோ ஓராண்டு தேர்வெழுத தடை விதிக்கப்படும். துண்டுச்சீட்டு பார்த்து எழுதுதல், பிற மாணவர்களின் விடைத்தாள்களை பார்த்து எழுதுதல் போன்ற ஒழுங்கீனங்களில் ஈடுபடும் மாணவர்கள் 2 ஆண்டுகள் தேர்வு எழுத தடை விதிக்கப்படும்.

2009-ம் ஆண்டு மேல்நிலைத் தேர்வில் ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபட்டதாக தண்டனைப் பெற்றவர்களின் எண்ணிக்கை 290 ஆகும்.

வினாத்தாளை மாணவர் 10 நிமிடம் படித்து பார்க்கவும், அதைத் தொடர்ந்து விடைத்தாள் முகப்பு பக்கத்தில் பிழையின்றி தேர்வெண் உள்ளிட்ட முக்கிய விவரங்களை எழுத 5 நிமிடமும் கால அவகாசம் வழங்கப்படுகிறது."

இவ்வாறு அந்த செய்தி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

0 comments: