27.8.07

மனதில் நிறைந்த மாமனிதர்கள் 4

மறக்க முடியாத மாமனிதர்கள் வரிசையில் ஆசிரியர்களைப் பற்றி மட்டுமே இது வரை கண்டோம். பாடம் நடத்திய ஆசிரியர்கள் மட்டுமல்ல நம் காலத்தில் நம் மனதில் இடம் பெற்ற இன்னும் சில பெருந்தகைகளும் இருந்தனர். அவர்களைப் பற்றியும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். அப்போது தான் இத் தொடர் முழுமை பெறும்.

சுல்தான் சார்

பள்ளி அலுவலகத்தின் தலைமை எழுத்தர். மிகவும் இனியவர். வகுப்பறைகளுக்கு அப்பாற்பட்டவர் எனினும் மாணவர்களின் இதயங்களுக்கு இப்பாற்பட்டவர். மிக நீண்ட காலம் பணியாற்றிவர். கையெழுத்து கண்களில் ஒற்றிக் கொள்ளலாம். அலுவலகத்தின் தலையாய பணிகள் அனைத்தும் இவர் தலை மீது தான். தம் பணியை இடை நிறுத்தம் செய்து கொண்டு பிராண்ஸ் சென்று விட்டதாக அறிந்தோம். எங்கிருந்தாலும் வாழ்க.

சம்பந்தம் சார்

அப்போது அலுவலகத்தின் துணை எழுத்தர். அதன் பிறகு இவர் தான் தலைமை எழுத்தர். பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களிலேயே மிகவும் சிறிய வயதுடையவர் (அப்போது). மாணவர்களுக்கு மத்தியில் நல்ல பெயர் உண்டு. அலுவலகத்தில் எதுவும் உதவி நாடிச் சென்றால் அக்கரையுடன் செய்து கொடுப்பார். நற்குணம் கொண்ட நல்ல அலுவலர்.

இப்ராஹீம் பாய் (பியூன்)

பள்ளி வரலாற்றில் மிக நீண்ட காலம் பியூனாகப் பணியாற்றிய ஒரு நல்ல மனிதர். இவரைத் 'தொப்பி' என்று மாணவர்கள் அழைப்பார்கள். இது இவரைப் பழிக்கும் விதமான பட்டப் பெயர் அல்ல. பஜ்ர் தொழுகைக்கு மாணவர்களை எழுப்பும் போது உருது மொழியில் 'சொப் பீ உட்டோ' (அனைவரும் எழுந்திருங்கள்) என்று சொல்வார். நாளடைவில் அதுவே இவரது பெயராயிற்று. இது இவரை அவமதிக்கும் பெயர் அல்ல என்பதாலேயே இங்கு குறிப்பிட்டோம்.

பள்ளி வளாகக் கதவுகள் பூட்டப்பட்டு மாணவர்கள் வெளியில் செல்ல முடியாத கொடுமை நடந்த காலகட்டத்தில் பள்ளியின் உள்ளே இவர் வைத்திருக்கும் கடை தான் எங்களுக்கு சூப்பர் மார்க்கட்.
இறையடி சேர்ந்து விட்ட இந்த நல்ல மனிதரை நல்லோர்கள் கூட்டத்தில் அல்லாஹ் சேர்ப்பானாக!

பிள்ளை (வாட்ச் மேன்)

எப்போது நம் பள்ளியில் வாட்ச் மேனாகச் சேர்ந்தாரோ தொரியாது, ஆனால் இவரது இயலாத முதுமையிலும் கூட இவரை கனிவுடன் நடத்தியது நம் பள்ளி நிர்வாகம். அந்த அளவுக்கு பள்ளியுடன் பிண்ணிப் பிணைந்தது இவர் வாழ்க்கை.
ஆரம்பக் காலத்தில் விடுதிக்கு உணவுப் பொருட்களைக் கொண்டு வந்து சேர்ப்பதில் அரும்பாடுபட்டவர்.
பள்ளி வகுப்பறைகளிலாகட்டும், விடுதி அறைகளிலாகட்டும், இரவு நேரங்களில் அதிக நேரம் மின் விளக்குகள் எறிந்தால் 'கரண்ட் என்ன தண்ணியிலா ஓடுகிறது?' என்று உரிமையுடன் அதட்டுவார். இவரது அதட்டலுக்கு பயந்தே சீக்கிரம் விளக்குகளை அணைத்து விடுவோம்.

சமையற்காரர்கள்

1. ஹாஜியார் (ஹஜ் குழுவுக்கு சமையற்காரராகச் சென்று ஹஜ் செய்தவர் என்று சொல்வார்கள். ஹாஜியார் என்ற பெயரில் தான் பிரபலம்)
2. ஜலீல் பாய்
3. பஷீர் பாய்
4. அமானுல்லா
5. கலியமூர்த்தி
பல வருடங்கள் எங்களுக்கு உணவு சமைத்து அதைப் பக்குவமாகப் பரிமாரி எங்கள் பசி தீர்த்த (கவனிக்க! பரிமாரிய என்ற வார்த்தைக்கு முன் தான் பக்குவமாக என்னும் வார்த்தையைச் சேர்த்திருக்கிறோம்) இந்த நல்ல மனிதர்களும் மறக்க முடியாத மனிதர்களில் உள்ளவர்கள் தாம்.

இத் தொடரில் இரு முக்கியமானவர்ளையும் குறிப்பிட்டாக வேண்டும்.

தினமும் காலையிலும் மாலையிலும் சுடச்சுட மல்லிகைப்பூ போன்ற இட்லியுடன் மணக்கும் சட்னி சாம்பாரும் தந்து பள்ளி உணவு போதாத போது குறைந்த செலவில் (நாலணாவுக்கு நான்கு இட்லிகள்) எங்கள் பசி தீர்;த்து எங்கள் மனதில் இடம் பெற்ற இட்லிப்பாட்டி,

வெகு தொலைவிலிருந்து தினமும் நம் பள்ளிக்கு வந்து 5 காசுக்கு அருமையான தயிர் தந்து உண்ணுகின்ற உணவை கொஞ்சம் சுவையாக உண்ணவைத்த தயிர் பாட்டி

ஆகிய இரு மகராசிகளும் நம் மனதில் நிறைந்தவர்களில் உள்ளவர்கள் தாம்.
இந்த நல்லவர்களை நாம் நன்றியுடன் என்றென்றும் நினைவில் வைத்திருப்போம்.


நாம் பயின்ற காலகட்டத்தில் நமக்குப் பயிற்றுவித்த ஆசிரியர்களைப் பற்றி மட்டுமே நினைவில் உள்ளவரை தொகுத்திருக்கிறோம். இவர்களில் விடுபட்ட ஆசிரியர்கள் இருப்பின் நண்பர்கள் யாராவது அத்தகைய ஆசான்களை நினைவு கூர்ந்து எழுதினால் இதன் தொடர்ச்சியாக வெளியிடுகிறோம்.
எழுதப்பட்டுள்ள தகவல்களில் மாற்றங்கள், மற்றும் தவிர்க்கவேண்டியவை, சேர்க்க வேண்டியவை ஆகியவற்றை தயவு செய்து நண்பர்கள் தெரிவித்தால் நன்றியுடன் ஏற்றுக் கொள்கிறோம். திருத்திக் கொள்கிறோம்.
நாம் பயின்ற 1970 முதல் 1976 காலகட்டம் வரையிலான ஆசிரியர்களைப் பற்றி மட்டுமே இத் தொடரில் நினைவு கூர்ந்திருக்கிறோம். அதற்குப் பின் வந்து சேர்ந்த ஆசிரியர்கள், தற்சமயம் கல்விச்சேவைப் புரிந்து கொண்டிருக்கும் கண்ணியத்திற்குரிய ஆசிரியப் பெருந்தகைகள் குறித்து சமீப காலத்தில் வெளியேறிய மாணவர்களிடமிருந்து ஆக்கங்களை எதிர்பார்க்கிறோம். இதன் தொடர்ச்சியாக நன்றியுடன் வெளியிடுவோம். இன்ஷா அல்லாஹ்.

0 comments: