27.8.07

மனதில் நிறைந்த மாமனிதர்கள் 3

அப்துல் காதிர் மரைக்காயர் உமரி

1971 ஆம் ஆண்டில் நம் பள்ளியில் அரபி ஆசிரியராகப் பொறுப்பேற்று தம் சேவைக்காலம் முழுதும் நம் பள்ளியிலேயே கழித்து இப்போது ஓய்வும் பெற்று விட்டார்கள்.

மாணவர்களுக்கு மத்தியிலும் சரி சக ஆசிரியர்களுக்கு மத்தியிலும் சரி இறுதி வரை நல்ல பெயரும் புகழும் பெற்று திகழ்ந்தவர். அனைத்து மாணவர்களிடமும் அன்பாகப் பழகுவார்.
மிக நீண்ட காலம் ஹாஸ்டல் வார்டனாகவும் பணியாற்றியவர்.

மாணவர்கள் பேச்சுப் பயிற்சியில் சிறந்து விளங்க மன்பவுல் பயான் மாணவர் மன்றத்தில் அதிக கவனம் செலுத்தியவர். இவரது முயற்சியில் சர் செய்யத் அஹமது கான் படிப்பகம் என்னும் பெயரில் மாலை நேரப் படிப்பகம் உருவானது. மாணவர்கள் இஸ்லாமிய வார மாதப் பத்திரிகைகளைப் படிக்க அருமையான ஏற்பாட்டைச் செய்தவர். வார்டன் பொறுப்பிலிருந்து இவர் விலகிய பின்னர் அந்தப் படிப்பகம் நின்று போனது.

பள்ளியின் முன்னேற்றத்தில் அதிக அக்கரைச் செலுத்தியவர். சிறந்த பண்பாளர். மாணவர்கள் மத்தியில் பாரபட்சம் காட்டாதவர். மறக்க முடியாத ஆசிரியர்களில் இவருக்கும் இடமுண்டு.

ராமசுப்பிரமணியம் சார்

அறிவியலையும் ஆங்கில இலக்கணத்தையும் அழகாகப் போதிப்பதில் அசகாய சூரர். இவர் பள்ளியில் வந்து சேர்ந்தது முதல் மிக நீண்ட காலம் வரை ஒரு நாள் அணிந்த சட்டையை மறுநாள் அணிய நாங்கள் பார்த்ததே இல்லை. வருடம் முழுதும் கவனமாக நாங்கள் கவனித்தும் ஒவ்வொரு நாளும் புத்தம் புதிய சட்டை தான்.

மாணவர்களை மிகவும் மரியாதையுடன் நடத்துவார். மாணவர்களும் இவர் மீது அதிகப் பாசம் கொண்டிருப்பார்கள்.

கலிய பெருமாள் சார்

விளையாட்டு ஆசிரியர் என்றாலும் கூட மாணவர்கள் மிகவும் பயப்படுவார்கள். விளையாட்டில் அதிக ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு இவரை மிகவும் பிடிக்கும். இவருக்கும் அவர்களைப் பிடிக்கும். தவறு செய்யும் மாணவர்களுக்கு இவர் கொடுக்கும் டக் வாக் (வாத்து நடை) தண்டனை மிகவும் பிரசித்தம். இரண்டு கைகளையும் இடுப்பில் வைத்துக் கொண்டு உட்கார்ந்தபடி தாவித் தாவி ஓட வேண்டும். கொஞ்ச தூரம் ஓடிப்பார்த்தால் தான் உங்களுக்குத் தெரியும்.

ஆரம்பத்திலிருந்தே மாணவர்களுக்கு மத்தியில் இவர் மீது பயம் ஏற்பட்டு விட்டதே தவிற மற்றபடி மனதால் மிகவும் நல்லவர். இவரது காலத்தில் ஆக்கூர் ஓரியண்டல் மாணவர்கள் பேட்மின்டன் விளையாட்டில் மாவட்ட அளவில் விளையாடி பள்ளிக்குப் பெருமை சேர்த்திருக்க்pன்றனர்.

ராஜாஜி சார்

கணித ஆசிரியராக இருந்த இவர் கொஞ்சம் அதிக கண்டிப்புடன் இருப்பார். மாணவர்கள் இவருக்கு மிகவும் அஞ்சுவார்கள்.

பேட்மின்டன் போட்டிகளில் மாணவர்கள் வெளியூர் பள்ளிக் கூடங்களுக்குச் சென்று விளையாடி வெற்றி பெறும் அளவுக்கு மாணவர்களுக்கு அதிகப் பயிற்சி கொடுத்தவர். மாணவர்களுடன் சரிசமமாகச் Nசுர்ந்து பேட்மின்டன் விளையாடுவார்.

தலைமை ஆசிரியர் அறையிலிருந்து அறிவிக்கும் அறிவிப்பை அனைத்து வகுப்பு மாணவர்களும் கேட்கும்படி பள்ளியில் முதன் முதல் ஸ்பீக்கர் வைத்து அறிவிப்பு செய்யும் ஏற்பாட்டைச் செய்தவர்.

இடையிலேயே ஓரியண்டலை விட்டு விலகி வேறு பள்ளிக் கூடத்திற்கு சென்று விட்டார்.

ராமசாமி சார்

மிகவும் அமைதியானவர். மாணவர்களிடம் கடிந்து பேசமாட்டார். சில வகுப்புகளுக்குத் தமிழ்ப் பாடமும் நடத்துவார். தமிழ்ப்பாடமும் நடத்துவதாலோ என்னவோ தமிழாசிரியர்களுக்கு மட்டுமே உரித்தான கனிவும் காருண்யமும் இவரிடம் இருக்கும். எங்களுக்கு 6 மற்றும் 7 ஆம் வகுப்புகளுக்கு மட்டுமே பாடம் நடத்தியிருந்தாலும் பள்ளி இறுதி வகுப்பு படிக்கும் வரை எங்கள் மீது அன்பு செலுத்தியவர். அரைக்கை சட்டை தான் அணிந்தாலும் அதையும் கூட கொஞ்சம் மடித்து விடுவது இவரது ஸ்டைல்.

ஆபிரகாம் லிங்கன் அய்யா

நாங்கள் பள்ளி இறுதி ஆண்டு படித்த சமயம் எங்கள் தமிழய்யா சிவசங்கரன் சார் அவர்கள் முனைவர் பட்டம் பெற பல்கலைக் கழகம் சென்று விட்ட போது, அவர்களுக்கு பதிலாகப் புதிய தமிழாசிரியராக வந்து சேர்ந்தவர் தான் ஆபிரகாம் லிங்கன் அய்யா அவர்கள்.

தமிழாசிரியர்களுக்கே உரித்தான அன்பும் அரவணைப்பும் இவரிடமும் இருக்கும். புதிய ஆசிரியர் என்ற போதிலும் கூட மிகவும் அன்னியோன்யமாகப் பழகுவார். மாணவர்களை மிகவும் மரியாதையுடன் நடத்துவார். எந்த ஒரு மாணரையும் ஒருமையில் விளித்ததில்லை. மரியாதைப் பன்மையில் தான் விளிப்பார்.

பள்ளி இறுதித் தேர்வில் தமிழ்ப்பாடத்தில் நாங்கள் அதிக மதிப் பெண்கள் பெற்று புதிதாக வந்து சேர்ந்த இந்தத் தமிழய்யாவின் பெயரை காப்பாற்றினோம்.

அஹ்சன் ஹஜ்ரத்

அரபி ஆசிரியராக இருந்தவர். வந்து சேர்ந்த புதிதில் 'புது ஹஜ்ரத்' என அழைக்கப்பட்டு மிக நீண்ட காலம் அப்பெயரே நிலைத்தது. சில ஆண்டுகள் விடுதி வார்டானாகவும் இருந்தார்.

மாணவர்கள் காலையிலும் மாலையிலும் வெளியில் சென்று வருவதற்கு தொன்று தொட்டு இருந்து வந்த சுதந்திரம் இவர் வார்டனாக இருந்த போது,பறிக்கப்பட்டது.


உணவுக் கூடத்தில் மாணவர்கள் வரிசையில் நின்று உணவு வாங்கும்போது இறுதி வகுப்பு மாணவர்கள் மட்டும் வரிசையில் நிற்காமல் நேராகச் சென்று வாங்கிக் கொள்ளும் சிறப்புச் சலுகை கூட இவர் காலத்தில் தான் பறிக்கப்பட்டது


மனதில் நிறைந்த மாமனிதர்கள் பட்டியல் தொடரும்.....
இன்ஷா அல்லாஹ்.

0 comments: