19.8.07

மனதில் நிறைந்த மாமனிதர்கள் 1

நமது ஆக்கூர் ஓரியண்டலின் வரலாற்று ஏடுகளைச் சற்று புரட்டிப் பார்த்தால் பள்ளியின் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்ட மாமனிதர்கள் நம் மனக் கண் முன்னே காட்சி தருகின்றனர். நம் மனதில் நிறைந்த மாமனிதர்கள் சிலரை அன்புடன் இங்கே நினைவு கூர்கிறோம்.

V.Aமுஹம்மது சாதிக் ஹஜ்ரத்

பெரிய ஹஜ்ரத் என்று மாணவர்களாலும், சாதிக் மௌலானா என்று பெரியோர்களாலும் அன்புடன் அழைக்கப்பட்ட இந்தப் பெருந்தகை ஓரியண்டலின் அரபி ஆசிரியராகவும் அத்துடன் ஆரம்ப கால வரலாற்றில் பள்ளியின் தாளாளராகவும் அதன் பின் சில ஆண்டுகள் விடுதிக் காப்பாளராகவும், பணியாற்றி யிருக்கிறார்கள். மிகவும் கண்டிப்பு நிறைந்த இந்த ஹஜ்ரத் அவர்களைக் கண்டால் பெரும் பெரும் மாணவர்கள் கூட அஞ்சி நடுங்குவார்கள். மாணவர்கள் மீது அதிக அக்கறையும் கவனிப்பும் செலுத்தும் இந்த அரபி ஆசிரியரை மாணவர்கள் மட்டுமின்றி சக ஆசிரியர்களும் கூட மிகவும் மதிப்பார்கள்.

பூர்வீகம் கேரளாவாக இருந்தும் இவர்கள் பேச்சில் சிறிதும் மலையாள வாடை வீசாது. பலருக்கு இவர் கேரளாவைச் சேர்ந்தவர் என்பதே தெரியாது. பாகவி உமரி அப்ஸலுல் உலமா என்று பல்வேறு பட்டங்களைப் பெற்ற இவர் அரபி மொழியை அவ்வளவு அழகாகப் போதிப்பார். 1970 களின் துவக்கத்தில் ஓய்வு பெற்று விட்ட பிறகு முதுமையிலும் கூட பல ஆண்டுகள் திருச்சி அன்வாருல் உலூம் அரபிக் கல்லூரியில் தம் கல்விச் சேவையைத் தொடர்ந்தார்கள். ஓரியண்டல் வரலாற்றில் மட்டுமல்ல மாணவர்கள் மனதிலும் இவர்களுக்கு ஒரு தனி இடம் உண்டு.


V.முருகேசன் சார் (அய்யா)

பொதுவாகவே தமிழாசிரியரைத் தான் எல்லாப் பள்ளிக் கூடங்களிலும் அய்யா என்பார்கள். ஆனால் நம் பள்ளியில் மட்டும் இந்த வி எம் சார் அவர்களை அய்யா என்றழைக்கும் வழக்கம் தொன்று தொட்டு இருந்து வந்துள்ளது.

தமிழகத்தில் நம் பள்ளி மிகவும் பிரபல்யம் அடைந்திருந்த கால கட்;டத்தில் பள்ளியின் தலைமை ஆசிரியராக மிக நீண்ட காலம் பொறுப்பு வகித்த இந்தப் பெருந்தகையின் நடையழகே தனி. பள்ளியின் காலைப் பிரார்த்தணைக் கூட்டத்திற்கு தலைமை ஆசிரியரை பள்ளி மாணவர் தலைவர் அழைத்து வரும்போது இவர் நடந்து வரும் கம்பீர நடை வேறு யாருக்கும் வராது. கிட்டத்தட்ட 500 மாணவர்கள் கூடியிருக்கும் கூட்டமும் அப்படியே நிசப்தம்.

கல்வியை முடித்துச் சென்ற மாணவர்கள் மிக உயர்ந்த நிலையை அடைந்த பின்னர் மறுபடியும் நம் பள்ளியைக் காண வந்தால் இந்த அய்யாவைக் காணும் போது மட்டும் கூனிக் குறுகி நிற்பார்கள். அந்த அளவுக்கு இவர் மீது மரியாதை மாணவர்களுக்கு எப்போதும் இருக்கும். இது பயத்தினால் ஏற்படும் மரியாதை அல்ல. அந்த கம்பீர தோற்றத்தைக் கண்டு ஏற்படும் மரியாதை.

மிகச் சிறந்த நிர்வாகத் திறன், கண்டிப்பு, ஆகியவற்றுக்குப் பெயர் பெற்ற இந்தப் பெருந்தகை இப்போது ஓய்வு பெற்று விட்டாலும் பள்ளியின் பொன் விழாக் கொண்டடாத்தின் போது நடை பெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு வந்திருந்து கௌரவித்ததை நன்றியுடன் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.


A.R.கலிய பெருமாள் சார்

A.R.K சார் என்று மிகுந்த மரியாதையுடன் எல்லோராலும் அழைக்கப்பட்ட ஏ ஆர் கலிய பெருமாள் சார் அவர்கள் மிக நீண்ட காலம் துணைத் தலைமை ஆசிரியராக இருந்து, அய்யா அவர்கள் ஓய்வு பெற்ற பிறகு தலைமை ஆசிரியராகப் பதவி உயர்வு பெற்றவர்.

அய்யாவுக்கு அடுத்து மாணவர்கள் அஞ்சி நடுங்கியது இந்த ஏ ஆர் கே சாருக்குத் தான். 9 ஆம் வகுப்பு முதல் 11 ஆம் வகுப்பு வரை உள்ள உயர் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே பாடம் நடத்துவார்கள். ஆங்கில இலக்கணத்தை இவரைப் போல் வேறு யாரும் அவ்வளவு தெளிவாக நடத்த முடியாது. டைரக்ட் இன்டைரக்ட் ஸ்பீச் பாடத்தை இவர் நடத்த ஆரம்பித்தால் ஆங்கில இலக்கணம் இவரிடம் அடிபணிந்து போகும்.

நாங்கள் பயின்ற காலத்தில் ஒரு நாள் கூட இவர் விடுப்பு எடுத்ததாக எவ்வளவு நினைவு படுத்திப் பார்த்தும் நினைவுக்கு வரவில்லை. ஒரு நாள் கூட வீண் பேச்சு பேசிப் பார்த்ததில்லை. எப்போதும் பாடம் பாடம் பாடம் தான். மாணவர்கள் பள்ளி இறுதி ஆண்டுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற வேண்டும். அதன் மூலம் மாணவனும் எதிர் காலத்தில் சிறக்க வேண்டும். பள்ளிக்கும் நல்ல பெயர் கிடைக்க வேண்டும் என்பதில் கண்ணும் இருந்து அதற்காகவே காலமெல்லாம் பாடு பட்டவர்.

சில ஆண்டுகள் தலைமை ஆசிரியராக இருந்து இப்போது ஓய்வு பெற்று விட்டார்கள்.

C. சிவசங்கரன் சார்

தமிழுக்கு அமுதென்று பேர், அந்த அமுதுக்கு சி. எஸ் என்று பேர். பொதுவாகவே மாணவர்கள் கல்வியில் போதிய கவனம் செலுத்தவில்லை என்றால் ஆசிரியர்களுக்கு கோபம் வரும். மாணவர்களின் எதிர் கால நலனைக் கருத்திற் கொண்டால் இதனைக் குறை கூற முடியாது. ஆனால் இந்த முகத்தில் கோபம் என்பதையே நாங்கள் கண்டதில்லை. ஆசிரியர் என்றாலே கையில் பிரம்பு வைத்திருக்கும் காட்சி தான் மாணவர்களின் மனக் கண் முன்னே தோன்றும். ஆனால் கையில் பிரம்புடன் எங்கள் தமிழ் ஆசிரியராகிய இந்த சி.எஸ் சார் அவர்களை நாங்கள் கனவில் கூட கண்டதில்லை.

ஓரிண்டலில் பயின்ற மாணவர்கள் அனைவரையும் அழைத்து பள்ளி வாழ்க்கையில் ஒரு அடி கூட உங்களை அடிக்காத ஆசிரியர் யார்? என்று வாக்கெடுப்பு நடத்தினால் சிந்தாமல் சிதறாமல் ஒட்டு மொத்த வாக்குகளும் அப்படியே எங்கள் தமிழாசிரியர் சி எஸ் சார் அவர்களுக்குத் தான் விழும்.

செந்தமிழின் இலக்கணமும் இலக்கியமும் கற்பித்து எங்கள் சிந்தைக் குளிர வைத்த இந்தச் செந்தமிழ் ஆசான் முனைவர் பட்டம் பெற்றச் செய்தியைச் செய்தித்தாள்களில் படித்த போது எங்கள் உள்ளமெல்லாம் குளிர்ந்தது. தலைமை ஆசிரியராகப் பதவி உயர்வுப் பெற்று பொறுப்பேற்ற பின்னர் நடைபெற்ற 'முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி' ஓரியண்டல் வரலாற்றில் ஒரு திருப்பு முணையை ஏற்படுத்தியது எனலாம்.

அந்த விழாவில் கலந்து கொள்ளும் அரிய வாய்ப்பு எமக்குக் கிடைத்தது. விழாவைத் தொடங்கி வைத்த தலைமை ஆசிரியர் திரு சிவசங்கரன் சார் அவர்கள் தம் உரையை இப்படித் தொடங்கினார்,

'அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனு மாகிய இறைவனின் திருப் பெயரால் ஆரம்பம் செய்கின்றேன்'
ஆகா! என்ன அற்புதமான வார்த்தைப் பிரயோகம்! இந்த அற்புதமான வார்த்தைப் பிரயோகத்துக்காகவே தமிழ் கூறு நல் உலகு,இவருக்கு இன்னொரு முனைவர் பட்டம் தரலாம்.
சில ஆண்டுகள் ஓரியண்டலின் தலைமை ஆசிரியராக சீரியப் பணி புரிந்த இந்தத் தமிழய்யா இப்போது ஓய்வு பெற்று விட்டார்கள்.

F.அப்துல் ஹமீது ஆமிர் உமரி ஹஜ்ரத்

பெரிய ஹஜ்ரத்(சாதிக் ஹஜ்ரத்) ஓய்வு பெற்ற பிறகு இவர்கள் தான் பெரிய ஹஜ்ரத். ஏகத்துவக் கொள்கையை அப்போதே எங்களுக்கு உணர்த்தியவர் என்றாலும் இன்னும் சற்று உரத்த குரலில் முழங்கி யிருக்கலாமோ?

அரபி மொழியைப் போதிப்பதிலும், ஆணித்தரமாகப் பேசுவதிலும், அடக்கி ஆள்வதிலும் வல்லவர். வார்டன் ஹஜ்ரத் இல்லாத சனிக்கிழமை ஸ்டடி நேரத்தில் அங்கும் இங்கும் அலைந்து சற்று ஆசுவாசப் படுத்திக் கொண்டிருப்பவர்கள் அப்துல் ஹமீத் ஹஜ்ரத் வெளிக் கதவைத் திறந்தால் போதும் அவ்வளவு பேரும் கப்சிப்.

மாணவர்களை நல்வழிப்படுத்த சில ஆசிரியர்கள் கடுமையாக நடந்திருக்கலாம்.நம் பிள்ளைகளை நல்வழிப்படுத்த நாம் சில சமயம் கடுமையாக நடந்துக் கொள்வதில்லையா? இப்போது நமக்குப் புரிகிறது, ஆனால் அப்போது அதைப் புரிந்துக் கொள்ளும் பக்குவம் நமக்கு இருக்கவில்லை.
படிப்பிலும் ஒழுக்கத்திலும் சிறந்து விளங்கிய மாணவர்கள் இவரைக் கண்டு அஞ்ச மாட்டார்கள். மற்ற மாணவர்களுக்கு இவர் ஒரு சிம்ம சொப்பணம்.

ஓரியண்டலில் நீண்ட காலம் சேவை புரிந்த இவர்கள், 1977 ஆம் ஆண்டு இங்கிருந்து விலகி தாம் பயின்ற உமராபாத் அரபிக் கல்லூரிpல் தம் கல்விச் சேவையைத் தொடர்ந்தார்கள். தற்சமயம் தமது சொந்த ஊராகிய குமரி மாவட்டம் கோட்டாரில் ஓய்வெடுக்கிறார்கள்.

M.ராமானுஜம் சார்

தரங்கம்பாடியிலிருந்து வரும் இந்த வானம்பாடி எட்டாம் வகுப்பின் வகுப்பாசிரியராக இருந்தாலும், அனைத்து வகுப்பு மாணவர்களும் அஞ்சி நடுங்குவார்கள். தமிழ்ப்பாடமாகட்டும் ஆங்கிலம் மற்றும் அறிவியல் பாடங்களாகட்டும், சிங்கமென கர்ஜிப்பார்.

இலக்கிய மன்றக் கூட்டங்களில் இவர் பேசும் போது வார்த்தைகள் இவர் வாயில் நர்த்தனமாடும். மிகச் சிறந்த பேச்சாளர், எழில் மிகு எழுத்தாளர், கவின்மிகு கவிஞர், ஆற்றல் மிகு அறிஞர்.

மாவட்ட அளவிலானப் பேச்சுப் போட்டிக்கு முத்துப்பேட்டை அப்துல் ரஹ்மான் அவர்களை மிக அருமையாகப் பயிற்சி கொடுத்து அனுப்பி வைத்துப் பள்ளிக்குப் பெருமை சேர்த்தார்.
ஓரியண்டலிலிருந்து விலகி பூம்புகார் அருகில் ஒரு அரசு உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து தம் கல்விப் பணியைத் தொடர்ந்தார்.

மாமனிதர்கள் பட்டியல் தொடரும் (இறைவன் நாடினால்)

0 comments: