22.8.07

மனதில் நிறைந்த மாமனிதர்கள் 2

ஏ.முஹம்மது இக்பால் சார்

இத் தொடரைப் படித்துக் கொண்டிருப்பவர்கள் மிகுந்த ஆச்சரியத்துடன், எங்கே இன்னும் இக்பால் சார் பெயர் வரக் காணோமே! என ஏங்குவது நமக்குப் புரிகிறது. இந்த உயர்ந்த மனிதருக்காக தனியொரு வலைப் பதிவு தொடங்கினால் கூடத் தகும்.

நமக்கு அறிவுக் கண் திறந்த நமது ஆசிரியப் பெருந்தகைகளில் யாரையும் வேறுபடுத்திப் பார்க்க நமது மனம் இடம் கொடுக்க வில்லை தான், இருந்தாலும் என்ன செய்ய? ஒரு பெற்றோர் தமது குழந்தைகள் அனைவர் மீதும் சரிசமமாகப் பாசம் காட்ட வேண்டும் என்பது நியாயமாக இருந்த போதிலும் கூட ஒரு குழந்தை மீது அவர்களையும் அறியாமல் அதீதப் பாசம் ஏற்படுவது இயற்கை. எங்கள் இக்பால் சார் மீது நாங்கள் கொண்டிருக்கும் பாசம் அப்படிப்பட்டது தான்.

1970 ஆண்டு எம்முடன் ஓரிண்டலில் 6 ஆம் வகுப்கு மட்டுமே பயின்று விட்டு அதன் பிறகு வேறு பள்ளிக் கூடத்திற்கு மாற்றலாகிப் போய்விட்ட ஒரு நண்பரை 35 வருடங்களுக்குப்பின் எதிர்பராமல் சந்திக்க நேரிட்டது. அவர் என்னிடம் இக்பால் சார் எப்படி இருக்கிறார்கள்? என விசாரித்தார். இந்த ஒரு ஆசிரியரின் பெயர் மட்டுமே நினைவில் இருப்பதாகவும் சொன்னார்.

ஆறாம் வகுப்பு மாணவர் முதல் இறுதி வகுப்பு மாணவர் வரை, மிகக் குறுகிய காலம் மட்டுமே பள்ளியில் பயின்ற மாணவர் உட்பட அனைவர் மனதிலும் நீங்கா இடம் பெற்ற இந்த ஆசானைப் பற்றி நிறைய எழுதிக் கொண்டே போகலாம்.

பிரதமரை எனக்குத் தெரியும், ஆனால் பிரதமருக்கு என்னைத் தெரியாதே! என்று வேடிக்கையாகச் சொல்வதுண்டு. எங்கள் இக்பால் சாரைப் பற்றிக் கூறும் போது இந்த வாசகம் பொய்த்துப் போகும்.

சில ஆண்டுகளுக்கு முன் ஓரியண்டலில் நடை பெற்ற 'முன்னாள் மாணவர் சந்திப்பு' நிகழ்ச்சியின் போது அந்த நிகழ்ச்சிக்கு இக்பால் சார் வந்து கலந்துக் கொள்ள இயலாத சூழ்நிலையில், வந்திருந்த பல முன்னாள் மாணவர்கள் நிகழ்ச்சி முடிந்த மாலைப் பொழுதில் ஆக்கூரிலிருந்து அப்படியே பொறையாருக்குப் பயணமானோம். ஆம் எங்கள் இதயம் நிறைந்த இக்பால் சார் அவர்களின் இல்லத்திலேயே சென்று அவர்களைச் சந்தித்தோம்.

அனைவரையும் வரவேற்று உபசரித்த அப் பெருந்தகை ஒவ்வொரு மாணவரின் பெயரையும் ஊரையும் சொல்லி விசாரித்தது எங்களை வியப்பில் ஆழ்த்தியது. அவர்களில் சிலர் 20 ஆண்டுகள் கழித்தும் சிலர் 25 ஆண்டுகள் கழித்தும் சிலர் 30 ஆண்டுகள் கழித்தும் முதன் முறையாக இக்பால் சார் அவர்களை இப்போது தான் சந்திக்கின்றனர். அப்படியே அசந்து போனோம்.

இதை விட ஆச்சரியத்திற்குரிய விஷயம் என்ன தெரியுமா? வந்திருந்த மாணவர்களில் சிலர் தம் மகன்களையும் அழைத்து வந்திருந்தனர். எல்லோரும் கூடியிருந்த அக்கூட்டத்தில் சில சிறுவர்களைக் குறிப்பிட்டு நீ இன்னாருடைய மகன் தானே? எனக்கேட்டார்கள். அருகிலிருந்த அச்சிறுவர்களின் தந்தைகளிடம், 'நீ முதன் முதல் ஆறாம் வகுப்பில் வந்து சேர்ந்த போது இப்படித் தான் இருந்தாய்' என்றார்கள்.

இப்போது சொல்லுங்கள்! எங்கள் ஒவ்வொருவரையும் நினைவில் வைத்திருந்த இப்பெரு மேதையை நாங்கள் ஒவ்வொருவரும் நினைவில் வைத்திருப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லையே!

மாணவரின் குடும்பப் பிரச்சினைகள் முதற் கொண்டு அக்கரையுடன் விசாரித்து அதற்கேற்ற தீர்வு சொல்வார்;. ஒவ்வொரு மாணவர் மீதும் தனிப்பட்ட கவனம் செலுத்துவார்;. அதனாலேயே அனைத்து மாணவர்களுக்கும் இந்த ஆசிரியரை மிகவும் பிடிக்கும்.

சில ஆசிரியர்களைப் போல் தம் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யாமல், நியாயமானவற்றில் மிகுந்த கண்டிப்புடன் இருப்பார். தவறு செய்பவர்களைத் தண்டித்தாலும் அத் தண்டனை நியாயமானதாக இருக்கும்.எனவேதான் இக்பால் சாரைக் கண்டால் யாருக்கும் பயம் வராது. இக்பால் சாரிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதற்காகவே மாணவர்கள் மிகவும் கவனமாக இருப்பர்.

பெற்றோரைப் பிரிந்து வெகு தொலைவிலிருந்து வந்து விடுதியில் தங்கிப் படிக்கும் சிறுவர்களாகிய நாங்கள் கவலையுடன் கண்ணீருகுக்கும் தருணங்களில் அன்னையாக தந்தையாக அன்புடன் அரவணைத்து ஆறுதல் சொன்னவர்.

குடும்பத்தைப் பிரிந்து வந்து நிராதரவாக நின்ற சின்னஞ்சிறு பிஞ்சு நெஞ்;சங்களில் பதிந்து போன அந்த அன்பும் அரவணைப்பும் ஆறுதலும், என்றென்றைக்கும் நினைவில் நிற்கும். வையகத்தில் நாங்கள் வாழுகின்ற காலமெல்லாம் இந்த நல்லாசிரியரின் நினைவு எங்கள் இதயத்தில் நிறைந்து நிற்கும்.

தற்போது ஓய்வு பெற்று, சொந்த ஊரில் வசித்து வருகிறார். தம்மிடம் கல்வி கற்று உயர்ந்த மாணவர்கள் பலரின் இதயங்களிலும் தான்.

அப்துல் கனி சார்

விடுதி மாணவர் சேர்க்கையில் முக்கியப் பங்காற்றியவர். இலவச விடுதி உணவு வழங்கும் பொறுப்பும் சிறப்பு விடுதி பொறுப்பும் பல ஆண்டுகள் இவரிடம் தான் இருந்தது. இவர் பேசுகின்ற விதமே தனி, மிகவும் ரசிக்கும்படியாக இருக்கும். அடுக்கு மொழி பேசுவதில் அனைவரின் மனம் கவர்ந்தவர்.

'விண்ணையும் மண்ணையும் படைத்து, அதில் உன்னையும் என்னையும் படைத்து, பக்கத்திலே தென்னையும் படைத்து' பொதுக் கூட்டங்களில் பேசும் போது இவ்விதம் வார்த்தைகளை அடுக்கிக் கொண்டே போவார். பாடம் நடத்தும் போது கூட இப்படி வார்த்தைகளால் ஜாலம் புரிவார்.

கரும் பலகையில் இவர் பாடம் எழுதிக் கொண்டிருக்கும்போது வகுப்பின் ஒரு பக்கத்தில் அமர்ந்திருக்கும் மாணவர்கள் 'மறைக்கிறது' எனச் சொன்னால் அப்படியே மறு பக்கம் நின்று இடது கையால் எழுதுவார். இரு கைளாலும் கரும்பலகையில் எழுதும் எழுத்துக்களில் எந்த வித்தியாசமும் இருக்காது.

மறக்க முடியாத ஆசிரியர்கள் எனச் சிலரைப் பட்டியலிட்டால் கண்டிப்பாக அந்தப் பட்டியலில் பெருமேதை கனி சாரின் பெயரும் இடம் பெரும்.

தம் வாழ்நாள் முழுதும் நம் ஓரியண்டலில் கல்விச் சேவையாற்றிய இப் பெருமேதை ஓய்வு பெற்ற சில தினங்களிலேயே இறையடி சேர்ந்து விட்டார். எல்லாம் வல்ல அல்லாஹ் இம் மாமனிதரின் பாவங்களை மன்னித்து நல்லோர்களின் கூட்டத்தில் சேர்ப்பானாக ஆமீன்.


முஹம்மது கவுஸ் சார்

சீர்காழி அருகே உள்ள 'திருமுல்லை வாசல்' என்னும் ஊர் எண்ணற்ற மாணவர்களை மட்டுமல்ல ஈடற்ற ஓர் ஆசிரியரையும் எங்களுக்குத் தந்தது. ஆம் கவுஸ் சார் என்னும் கண்ணியமிக்க ஆசிரியர் தான் அவர்கள். இக்பால் சாருக்கு ஓர் ரசிகர் மன்றக் கூட்டம் இருப்பது போல், இந்த கவுஸ் சாருக்கும் ஒரு பெரும் ரசிகர் மன்றக் கூட்டமே இருக்கிறது.

நாங்கள் படித்துக் கொண்டிருந்த காலத்தில் மாணவர்கள் மத்தியில் இந்த ஆசிரியருக்கு இருந்த பேரும் புகழும், நமக்கு ஒரு பாடத்திற்காவது இந்த கவுஸ் சார் அவர்களை நியமித்திருக்கக் கூடாதா? என்று எங்களை ஏங்க வைத்திருக்கிறது.

பாடத்தைத் தெளிவாகப் புரியவைப்பதிலும், பக்குவமாக மாணவர்களை வழிநடத்துவதிலும், கவுஸ் சாருக்கு நிகர் கவுஸ் சார் தான். கடைசி பெஞ்சில் அமர்ந்திருக்கும் கடைசி மாணவன் கூட கவுஸ் சார் பாடம் நடத்தும் போது தன் தூக்கத்தை தொலைத்து விட்டு பாடத்தைக் கவனிப்பான்.

பள்ளிக் கூட வகுப்பறையில் பாடம் நடத்தும் போது, கல்லூரியில் பேராசிரியர் விரிவுரை நடத்துவது போலிருக்கும். உயர் வகுப்பில் நாங்கள் உட்கார்ந்திருந்தாலும், எங்களையும் அறியாமல் எங்கள் செவிகள் கீழ் வகுப்பில் கவுஸ் சார் பாடம் நடத்துவதை கேட்டுக் கொண்டிருக்கும்.

ஏராளமான மாணவர்களின் இதயங்களில் இடம் பிடித்த இந்த கவுஸ் சார் அவர்கள் ஏனோ தெரியவில்லை இடையிலேயே நம் பள்ளியை விட்டு விலகி வடகால் என்னும் ஊருக்குச் சென்று விட்டார்கள். நம் பள்ளி ஒரு மிகச் சிறந்த அறிவு ஜீவியை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாமல் விட்டு விட்டது.

பள்ளிக்குப் பல ஆசிரியர்கள் கிடைத்திருப்பார்கள். ஆனால் எங்கள் சமகால மாணவர்களுக்குக் கிடைத்த ஒரு ஞானப் பொக்கிஷம் பிற்கால மாணவர்களுக்குக் கிடைக்காமல் போனதில் எங்களுக்குச் சற்று வருத்தம் தான்.

'மனதில் நிறைந்த மாமனிதர்கள்' பட்டியல் தொடரும் இன்ஷா அல்லாஹ்.......

0 comments: