7.8.08

தனியார் பள்ளிகளை மிரள வைக்கும் அரசு பள்ளி!

மதுரை: சுற்றி வளர்ந்த சீமைக் கருவேல மரங்கள், வற்றிய கண்மாய், வறுமைக்கு சாட்சியாய் சட்டையில்லாத மனிதர்கள் என இன்னும் பாமர கிராமமாக விளங்குகிறது பனையூர்!.
மதுரையிலிருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில், திருப்பரங்குன்றம் ஒன்றியத்தில் உள்ள இக் கிராமத்தை தற்போது தலைநிமிர வைத்துள்ளது இங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி.
282 பேர் பயிலும் இப் பள்ளியில் 143 பேர் மாணவியர். இவர்களில் 6, 7, 8-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர் கல்வி கற்கும் முறை, தனியார் பள்ளிகளையே பிரமிக்க வைக்கிறது.கம்ப்யூட்டர், சி.டி., டி.வி.டி. பிளேயர் மற்றும் வண்ணத் தொலைக்காட்சி என மிக நவீன முறையிலே இப் பள்ளிக் குழந்தைகள் பாடம் பயிலுகின்றனர்.
இந்த நவீன சாதனங்கள் அனைத்தும் இப் பள்ளியின் கல்விக் குழு மற்றும் கிராமப் பொது மக்களால் வழங்கப்பட்டவை.அனைவருக்கும் கல்வித் திட்டத்தில் இக் கல்விக் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. கல்விக் குழுவைச் சேர்ந்த 20 பேரும், இப் பள்ளிக்கு ஒவ்வொரு சாதனத்தை வழங்கியுள்ளனர்.மேலும் அனைவருக்கும் கல்வித் திட்டத்தில் பாடங்களுக்கான சி.டி.க்கள் வழங்கப்பட்டுள்ளன.
பரத நாட்டிய ஆத்திச் சூடி!:
ஒன்றாம் வகுப்பு குழந்தைகளுக்கான ஆத்திச்சூடி பாடம் பரத நாட்டியத்துடன் இடம் பெற்றுள்ளது. இது சி.டி. மூலம் கற்றுத் தரப்படுகிறது.
8-ம் வகுப்பு தமிழ் பாடத்திற்கான திருவிளையாடல் மனப்பாடப் பகுதி, 'திருவிளையாடல்' புராண சினிமாக் காட்சியிலிருந்து எடுத்து டி.வி. மூலம் கற்றுத் தரப்படுகிறது!பாடம் சம்பந்தப்பட்ட சி.டி.க்களை கம்ப்யூட்டரில் செலுத்தி மாணவர்களே பார்த்து படித்துக் கொள்ளும் பயிற்சியைப் பெற்றுள்ளனர்.ஆங்கில மொழிப் பயிற்சிக்கு டி.வி.டி. பிளேயர் மற்றும் தொலைக்காட்சியைப் பயன்படுத்துகின்றனர்.
பொதிகையின் சேவை!:
பொதிகை சானலில் திங்கள், வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு 'காண்போம்... கற்போம்' நிகழ்ச்சியைத் தவறாமல் சம்பந்தப்பட்ட மாணவர்கள் பார்த்து ஆசிரியர்கள் மூலம் விளக்கம் பெறுகின்றனர்.
கடந்த ஆண்டு இப் பள்ளி மாணவியருக்கு சாம்பிராணி, பினாயில் தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் பகுதி நேரமாக சாம்பிராணி, பினாயில் விற்று தங்களுக்கான ஆடை உள்ளிட்டவற்றை வாங்கியதாக மாணவியர் தெரிவித்தனர்.
நவீன முறையில் பாடம் கற்பிப்பதால், மதுரை உள்ளிட்ட வேறு இடங்களில் படிக்கச் சென்ற தனது குழந்தைகளை மீண்டும் பனையூர் பள்ளியிலேயே சேர்த்துள்ளதாகக் கூறுகிறார் இக் கிராமத்தைச் சேர்ந்த வேல்முருகன்.
பள்ளித் தலைமை ஆசிரியர் உதவியுடன் பள்ளிக்கென தனி இணையதளத்தை மாணவ, மாணவியரே தொடங்கியுள்ளனர். மதுரை மாவட்டத்தில் இதுபோல வேறு எந்த அரசு தொடக்கப் பள்ளிக்கும் தனி இணையதளம் கிடையாது என பெருமிதப்படுகிறார் பள்ளித் தலைமை ஆசிரியர் ஏ. ரமேஷ்பாபு.
பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு உதவும் இப் பகுதி மகளிர் சுயஉதவிக் குழுவினர், வகுப்பறைகளுக்கு மின் விசிறி வசதியும் செய்து தந்துள்ளனர்.பள்ளி வளாகத்தில் ரூ. 25,000 செலவில் தற்போது கலையரங்க மேடை, பள்ளி நுழைவு வாயில், பீரோ என பொதுமக்களின் பங்களிப்புடன் அமைக்கப்பட்டுள்ளது.
அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைவரும் சேர்ந்து இப் பள்ளி வளர்ச்சிக்குப் பாடுபடுவதாக கிராமத்தினர் கூறினர்.பள்ளிக்கு சுற்றுச் சுவர், விளையாட்டு மைதானம் இல்லாதது பெருங்குறையாக உள்ளதாகக் கூறும் அவர்கள், சமுதாயக் கூடத்தில் விசேஷ நாள்களில் ஒலிபெருக்கி பாடுவதால் மாணவர்கள் படிப்பதற்குச் சிரமமாக உள்ளதாக வருத்தப்படுகின்றனர்.
இப் பள்ளியில் இப்போது தலைமை ஆசிரியர் உள்பட 7 ஆசிரியர்கள் உள்ள நிலையில், கூடுதலாக 2 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டால் கிராமக் குழந்தைகளது கல்வித் தரத்தை மேலும் உயர்த்த முடியும் என்கிறார்கள் பள்ளி ஆசிரியர்கள்.
நன்றி: தட்ஸ்தமிழ்

0 comments: