13.8.08

பாடப்புத்தகங்கள் இணையத்தில்

தமிழ்நாடு பாடநூல் கழகம் மூலம் ஆசிரியர் பட்டயப் பயிற்சி, மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்களுக்கான புத்தகங்கள் முதல் முறையாக இணையதளத்தில் வெளியிடப்படுகின்றன.
தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் மூலம் மாநில பாட திட்டத்தின் கீழ் பயிலும், ஒன்று முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான பாட நூல்கள் இப்போது அச்சிட்டு இலவசமாக வழங்கப்படுகின்றன.
மாறிவரும் நவீன காலத்துக்கு ஏற்ற வகையில் புத்தகத்தில் உள்ள பாடங்களை எந்த ஊரிலும், யார் வேண்டுமானாலும் படித்துக்கொள்ள வசதியாக, அவற்றை இணையதளத்தில் பதிவு செய்யும் முறை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கியது.
மொத்தம் உள்ள 529 பாடங்களில் இதுவரை 348 பாடங்கள் தமிழ்நாடு பாடநூல் கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
இணையதளம்:
textbooksonline.tn.nic.in
பாடநூல் தொலைந்துபோனாலோ, குறிப்பிட்ட பக்கங்கள் கிழிந்து போனாலோ அவற்றை மாணவர்கள் இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
பாடநூல் கழகம் இலவசமாக வழங்கும் மாநில பாடதிட்ட புத்தகங்களைத் தவிர, மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன் பள்ளி மாணவர்களுக்கான 10-ம் வகுப்பு பாட புத்தகங்கள் மட்டும் இப்போது அச்சிடப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.
இலவசமாக வழங்கப்படும் புத்தகங்கள் மட்டுமே இணையத்தில் கிடைக்கும் என்ற நிலை மாறி, விற்பனை செய்யப்படும் 10-ம் வகுப்பு மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன் பாடதிட்ட புத்தகங்களும், ஆசிரியர் பட்டயப் பயிற்சி புத்தகங்களும் தற்போது அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
அதன்படி மெட்ரிகுலேஷன் புத்தகங்கள் 10, ஆங்கிலோ இந்தியன் பாடப் புத்தகங்கள் 9, ஆசிரியர் பட்டயப் பயிற்சி புத்தகங்கள் 11, 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான சுற்றுச்சூழல் அறிவியல் புத்தகங்கள் 14 என மொத்தம் 44 புத்தகங்களையும் இணையதளத்தில் கொண்டுவருவதற்கான முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இப்பணிகள் அநேகமாக செப்டம்பர் மாத இறுதிக்குள் நிறைவடையும் என்று தெரிகிறது.
இது குறித்து தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் -மேலாண் இயக்குநர் ஹேமந்த் குமார் சின்ஹா திங்கள்கிழமை கூறியது:
மொத்தம் உள்ள 529 பாடப் புத்தகங்களில் 11, 12-ம் வகுப்பு தொழிற்பாடப் பிரிவுக்கான 137 பாடங்கள் மட்டுமே இணையதளத்தில் கிடைக்கவில்லை. இவற்றையும் இணையதளத்தில் கொண்டுவர முயற்சி மேற்கொள்ளப்படும்.
மாநிலத்தில் ஒரு சில இடங்களில் மட்டும் தொழிற்பாடப் பிரிவு மாணவர்களுக்கு புத்தகங்கள் கிடைக்காத நிலை உள்ளது. இதற்காக 50 ஆயிரம் புத்தகங்கள் அச்சிடப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அடுத்த வாரம் இவை மாணவர்களுக்கு விநியோகிக்கப்படும்.
2009-ம் ஆண்டு பாடதிட்டத்தில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை என்றார் சின்ஹா.
நன்றி: imantimes@googlegroups.com on behalf of Muduvai Hidayath (muduvaihidayath@gmail.com)

0 comments: