22.8.08

கல்வியில் உயர்நிலை மேம்பாடு அடைய...


சத்தியமார்க்கம் நடத்திய சர்வதேச அளவிலான கட்டுரைப் போட்டியில் பங்கு பெற்ற கட்டுரை. - சத்தியமார்க்கம் நடுவர் குழு
முன்னுரை:
கல்வி என்பது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் பால் வேறுபாடின்றிக் கட்டாயக் கடமையுமாகும். கல்வியின் மூலமே அறிவு மேலோங்கி, உயர்நிலை அடைய முடியும் என்பதை முஸ்லிம்கள் உறுதியாக நினைவில் கொள்ள வேண்டும். நற்சிந்தனையுடைய முஸ்லிம்கள் தற்காலத்தியக் கல்வி ஞானத்தில் மிக உறுதியான, வெற்றிகரமான உயர்வை அடைய, கீழ்கண்ட வழிமுறைகளைக் கையாண்டால் உயர்நிலை நிச்சயம்:
01.ஒரு மாணவர் கல்வியைக் கற்றுக் கொள்ளும் முன் இஸ்லாத்திற்காகச் சேவை செய்யவும் அதன் மூலம் அல்லாஹ்வின் பொருத்தத்தை அடையவும் மன உறுதி செய்து கொள்ள வேண்டும். படித்தவன் என்று மற்றவர்கள் கொண்டாட வேண்டும் என்பதற்காக வெறும் பெயருக்கும் புகழுக்கும் ஆசைப் பட்டுக் கல்வி பயிலக் கூடாது. உளத்தூய்மையுடன் கற்றால்தான் நன்மையும் அபிவிருத்தியும் உண்டாகும்; முடிவு வெற்றியாக அமையும். இல்லையெனில், எல்லா நற்பாக்கியங்களிலிருந்தும் நிராசை அடைவதுடன் அல்லாஹ்வின் கோபத்திற்கும் சோதனைக்கும் ஆளாக நேரிடும்.
02. கல்வியின் மீது அதிக நாட்டம் கொண்டால்தான் அதற்கேற்ப ஞானம் வெளிப்படும்.
03. கல்வி நிறுவனத்தை தேர்வு செய்யும்போது, அங்குள்ள நிபந்தனைகளைக் கேட்டறிந்து கொள்ள வேண்டும். அந்த நிபந்தனைகளை கடைப்பிடிக்க முடிந்தால் மட்டுமே அங்கு இணைந்து கல்வியைக் கற்க வேண்டும்.
04. ஆசிரியர்களுடன் மதிப்பு மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டும்.
05. தமக்குள்ள அறிவுத்தாகத்தை, கல்வி ஆர்வத்தை ஆசிரியரிடம் வெளிப்படுத்த வேண்டும். அதனால், ஆசிரியருக்கு மாணவர் மீது அன்பும் பரிவும் ஏற்பட்டு, அம்மாணவரது முன்னேற்றத்திற்காகத் தனிக்கவனம் செலுத்துவார்.
06. எவ்வளவு முக்கியமான பணி இருந்தாலும் கல்விக்கே முதலிடம் கொடுக்க வேண்டும். வேறு பணிகளில் கவனம் செலுத்தினால், கல்வியில் அபிவிருத்தி இருக்காது. ஆர்வமும் ஈர்ப்பும் குறைந்து போய், படித்தவை மறந்தே போய்விடும். முழு ஐக்கியத்துடன், கவனம் குலையாமல் கற்றால், சீக்கிரம் படிப்பை முடிக்கலாம். இல்லையேல் கல்வி கிடைக்காமல், வாழ்வு தாழ்வாகிவிடும்.
07. மூன்று விஷயங்களைப் பெரும் அருட்கொடைகளாக எண்ணி, அம்மூன்றின் மீது தனிக்கவனம் செலுத்த வேண்டும். அவை: நேரம், ஆரோக்கியம், ஓய்வு ஆகியனவாகும். இவற்றைக் கவனிக்காமல் விட்டு விட்டால், கைசேதம்தான் மிஞ்சும்.
08. நூல்களில் தாம் படித்த இடங்களில் அடையாளம் வைக்க வேண்டும். இதனால் காலவிரயம் ஏற்படாது.
09. கற்ற பாடங்களை அன்றிரவே மனப்பாடம் செய்து கொள்ள வேண்டும். நாளை.. நாளை என்று தள்ளிப்போட்டால், குவிந்துவிடும்.
10. தாம் பயிலும் நூல்களின் கருத்துகளை மதித்து நடக்க வேண்டும்.
11. கற்ற கல்வியை வைத்துப் பெருமையடிக்கக் கூடாது. அல்லாஹ் வழங்கிய கல்வி என்னும் அருட்கொடையை எண்ணி அவனுக்கு நன்றி செலுத்த வேண்டும். பெருமையடித்தால், அருட்கொடை பறிக்கப்பட்டு, நன்மையும் விருத்தியும் நின்று போய், இதயத்திலிருந்து ஞானம் வெளியாகிவிடும். எனவே, கற்ற கல்வியுடன் தன்னடக்கமும் நன்றியறிதலும் அவசியம் இருக்க வேண்டும்.
12. தவறுகளை ஆசிரியர் சுட்டிக்காட்டி, கண்டித்துத் திருத்தும் போது, முகம் சுளிக்கக் கூடாது; எரிச்சலடையக் கூடாது. வெறுப்பைக் காட்டவும் கூடாது. அவ்வாறு நடந்து கொண்டால், மாணவர் மீதுள்ள அக்கறையை ஆசிரியர் குறைத்துக் கொள்வார். இதனால் பல்வேறு இழப்புக்கள் ஏற்படும்.
13. ஓய்வு நேரத்தை வீணடித்து, துஷ்பிரயோகம் செய்யக்கூடாது. அந்த நேரத்தில் கெட்ட சிந்தனைகளுக்கு இடம் தரக்கூடாது. பாவமான காரியங்களில் ஈடுபடக் கூடாது. இதனால் உலக வாழ்க்கை மட்டுமல்ல, மறுமை வாழ்க்கையும் பாதிக்கும்.
14. மற்றவரைப் பற்றி தீய எண்ணம் கொள்ளக்கூடாது. அதனால், மனம் மாசுபட்டு, உலகில் தமக்கு கிடைக்கும். நன்மைகளும் நல்வாய்ப்புகளும் பறிபோகும். மனரீதியாக பாதிப்பு ஏற்படும்.
15. வகுப்பறையில் பாடம் நடக்கும்போது சிரிக்க-பேசக் கூடாது.
16. ஆசிரியரிடம் கல்வி கற்கும் காலத்திலும் அதற்குப் பின்னரும் நெருக்கமான தொடர்பை உண்டாக்கி கொள்ள வேண்டும். இதனால், வாழ்வியல் பிரச்சினைகளுக்கு அவ்வப்போது ஆசிரியரின் ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் பெறலாம்.
17. ஆசிரியர் எடுத்துரைக்கும் பாடம், நல்லுபதேசங்களை செவிதாழ்த்திக் கேட்டு, குறிப்பேட்டில் பதிந்து கொள்ள வேண்டும்.
18. கேள்வியை அறிந்து பதில் எழுத வேண்டும். கேள்வியை விளங்காமல் பதில் எழுதினால் இழப்பும் கைதேசமும் அவமானமும் ஏற்படும்.
19. அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்தவர்களாக இருக்க வேண்டும். அப்போது மற்றவை எல்லாம் அவருக்கு வசப்பட்டு எளிதாகி விடும்.
20. கல்வியை ஆய்வு செய்வதை நிரந்தரமாக்கிக் கொண்டு ஒவ்வொரு நாளும் அதை நடைமுறைப்படுத்தி, கல்வியை அதிகரித்துக் கொள்ள வேண்டும்.
21. அன்றாடப் பணிகளை செவ்வென செய்திருக்கிறோமா என்று சுயபரிசோதனை செய்து கொண்டிருக்க வேண்டும். கற்பதில் எந்தளவு முன்னேறியுள்ளோம் என்பதைச் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். குறையிருந்தால் நிவர்த்தி செய்துவரவேண்டும்.
22. "என் இறைவனே! என்னுடைய கல்வி ஞானத்தை அதிகப்படுத்து" (குர்ஆன் 20:11) என்று துஆச் செய்த வண்ணம் இருக்க வேண்டும்.
முடிவுரை:
விழிப்புணர்வுடைய முஸ்லிம் தனக்கு அவசியமான மேற்கண்ட அறிவுரைகளைப் பின்பற்றுவதோடு மட்டுமல்லாமல், அறிவு மற்றும் சிந்தனையின் கதவுகளையும் அகலத் திறந்து வைத்திருக்க வேண்டும். இதன் மூலம் பலதரப்புகளிலிருந்தும் மனதுக்கு உற்சாகமளித்து ஞானத்தை விரிவுபடுத்தும் விஷயங்களையும் பெற்றுக் கொள்ள முடியும். சிந்தனைத் திறனும் அதிகரிக்கும்; கல்வியில் உயர்நிலை மேம்பாடு அடைய முடியும்.
துணை நின்றவை:
இஸ்லாமியக் கல்வி – டாக்டர். யூசூஃப் அல்கர்ளாவி – இலக்கியச் சோலை, சென்னை – 3. பதிப்பு 2002.
இஸ்லாத்தில் குடும்ப இயல் – அ. ஜமாலுத்தின் - ஃபுர்கான் டிரஸ்ட், சென்னை – 94, 2001ம் வருடப் பதிப்பு
வாழ்க்கைக் கலை – முஹம்மத் இஸ்லாஹி – இஸ்லாமிய டிரஸ்ட், சென்னை – 12. பதிப்பு 2003.
முன்மாதிரி முஸ்லிம் – முஹம்மத் அல்ஹாஷிமி – தாருல் ஹுதா, சென்னை – 1, பதிப்பு 2003
- முஹம்மது அப்துல்காதர்
நன்றி: சத்தியமார்க்கம்.காம்

0 comments: