15.8.08

பெற்றோர்களே சுயநிதிக் கல்லூரிகளைத் தெரிந்து கொள்ளுங்கள்...


இன்று பிளஸ் டு தேர்வு எழுதி தேர்வு முடிவுக்குக் காத்திருக்கும் மாணவர்களிடையே என்ன படிக்கலாம்? எந்தக் கல்லூரியில் சேரலாம்? என்கிற கவலை ஏராளமாகத் தொற்றிக் கொண்டிருக்கிறது. அவர்களின் பெற்றோர்களுக்கும் இந்த கவலை ஒட்டிக் கொண்டு விட்டது. மருத்துவம் படிக்கலாமா? பொறியியல் படிக்கலாமா? வேளாண்மை படிக்கலாமா? அல்லது சமையல் கலையைப் படிக்கலாமா? எதைப் படித்தால் கை நிறையச் சம்பாதிக்கலாம்? எதைப் படித்தால் வெளிநாட்டில் வேலைக்குச் செல்லலாம்? என்று அவர்களுக்குள் ஆயிரம் கேள்விகள்...இந்த கேள்விகளுக்கெல்லாம் விடைகளைத் தேடி சிலர் ஏற்கனவே படிப்பை முடித்து தற்போது நல்ல வேலையிலிருக்கும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள், அவர்களது பெற்றோர்கள் என்று தெரிந்தவர்களை எல்லாம் தேடிப் போகிறார்கள். தமிழ்நாட்டில் இன்று இருக்கும் கல்லூரிகளில் எந்தப் படிப்புக்கு கிராக்கி அதிகமாக இருக்கிறது? அந்தப் படிப்பு எந்தக் கல்லூரிகளில் எல்லாம் இருக்கிறது? என்று கடந்த ஆண்டு பிள்ளைகளின் படிப்புகளுக்காக அலைந்த பெற்றோர்களிடம் அவர்களுக்குத் தெரிந்த கல்லூரிகளின் பட்டியலையும் அங்கிருக்கும் படிப்புகளையும் விசாரணை செய்து தெரிந்து வைத்துக் கொள்ளும் சிலரும் உண்டு.தங்கள் பிள்ளைகளை அடுத்து என்ன படிக்க வைக்கலாம் என்கிற விபரமே தெரியாமலும் பலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.பொதுவாகப் பெற்றோர்கள் ஒரு விஷயத்தை முதலில் கவனத்தில் கொள்ள வேண்டும். அது தங்கள் பிள்ளைக்கு எந்தப் படிப்பின் மீது அதிக ஆர்வமுள்ளது என்பதுதான். அந்த ஆர்வம் உண்மையானதா அல்லது அவனுடன் படித்த நண்பர்கள் அந்தப் படிப்பின் மீது ஆர்வமாய்ச் செல்வதால் இவனும் அவனுடன் சேர்ந்து சொல்கிறானா என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு விருப்பப்பட்ட படிப்பைத் தேர்ந்தெடுப்பதுடன் அதில் சிறப்பாகத் தேர்ச்சி அடையவும் முடியும்.இப்படி உண்மையிலேயே உங்கள் பிள்ளைக்கு ஆர்வமான படிப்பு என்று தெரிந்தால் அந்தப் படிப்பைப் பற்றித் தெரிந்தவர்களிடம் அந்தப் படிப்பு பற்றி முழுமையாக விசாரித்துத் தெரிந்து கொள்ள வேண்டும். அதாவது, அந்தப் படிப்பு படித்தால் கிடைக்கும் வேலைவாய்ப்பு, அதற்கான இடங்கள், சம்பளம் மற்றும் சுயதொழில் வாய்ப்பு போன்றவைகளையும் தெரிந்து கொள்ள வேண்டும். இதன் பிறகு, அந்த படிப்பு தமிழ்நாட்டில் எந்தெந்த கல்லூரிகளில் இருக்கிறது? அந்தக் கல்லூரி அரசுக் கல்லூரியா? அரசு உதவி பெறும் கல்லூரியா? அல்லது சுய நிதிக் கல்லூரியா? என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரி என்றால் தங்கள் தேர்வு முதலாவதாக இருக்கலாம். ஏனென்றால் அங்கு தேவையான கட்டிடங்கள், ஆய்வுக்கூடங்கள், நூலகம், இணைய வசதிகள் மற்றும் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் உட்பட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டிருக்கும். சுயநிதிக் கல்லூரிகளென்றால் முன்பே அந்தக் கல்லூரிக்குச் சென்று, கல்லூரியில் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டிருக்கிறதா? கல்லூரிக்கு மத்திய / மாநில அரசின் தொடர் அங்கீகாரம் (Continuing Approval / Recognition), பல்கலைக் கழகத்தின் தொடர் இணைப்பு (Continuing Affiliation) பெறப்பட்டிருக்கிறதா? என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் கடந்த கல்வி ஆண்டில் அங்கீகாரம் பெற்றிருக்கும் சில கல்லூரிகளில் அரசு நிர்ணயித்துள்ள போதுமான வசதிகளில்லாமல், வசதி குறைவு காரணமாக அந்தக் கல்வி ஆண்டிற்கான அங்கீகாரம் ரத்து செய்யப் பட்டிருக்கலாம்.பல சுயநிதிக் கல்லூரிகள் கட்டிடங்களை அழகாகக் கட்டி வைத்திருப்பார்கள். அங்கு தகுதியான பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் இல்லாத நிலை இருக்கும். இதை எப்படி தெரிந்து கொள்வது? என்பது என்கிற உங்கள் சந்தேகம் நியாயமானதுதான். அங்கு பயிலும் மாணவர்களிடம் விசாரித்துப் பாருங்கள். தாங்கள் தேர்வு செய்துள்ள கல்லூரியின் முதல்வராக இருப்பவர் முன்பு எங்கு பணியிலிருந்தார்? தகுதியானவர்தானா? அவர் இந்தக் கல்லூரியில் சிறப்பாகச் செயல்படுகிறாரா? தேவையான பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் நியமிக்கப் பட்டுள்ளார்களா? அவர்கள் எத்தனை ஆண்டுகளாக இந்தக் கல்லூரியில் தொடர்ந்து பணியில் இருக்கிறார்கள்? என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். ஏனென்றால் அந்தக் கல்லூரியின் நிர்வாகம் சரியில்லாத நிலையில் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் அடிக்கடி மாற்றமாகிக் கொண்டேயிருப்பார்கள். இப்படி அடிக்கடி மாற்றமாகிக் கொண்டேயிருக்கும் கல்லூரியில் கல்வியின் தரம் மிகவும் தாழ்ந்துதான் இருக்கும். சில கல்லூரிகளில் ஆய்வுக் கூடங்கள் பெயருக்குத்தான் இருக்கும். பாடத் திட்டத்திற்கு ஏற்ற கருவிகளோ, பொருட்களோ அங்கு இல்லாத நிலையிருக்கும். இதை அங்கு படித்து வரும் அல்லது படித்து முடித்த மாணவர்களிடமோ கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். இந்த கல்லூரிகளில் படிப்பதால் படித்து முடித்த படிப்புகளுக்குரிய செயல்முறைப் பயிற்சியில்லாமல் நிறுவனங்களில் நேர்முகத் தேர்வின் போது தவிக்க நேரிடும்.இதே போல் வளாகத் தேர்வுகளுக்கு கல்லூரி நிர்வாகம் கடந்த ஆண்டு எடுத்த முயற்சிகள் மற்றும் அதில் எந்தெந்த நிறுவனங்கள் பங்கு பெற்றன? எத்தனை மாணவர்கள் பணிக்கான வாய்ப்புகள் பெற்றனர்? போன்ற விபரங்களையும் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். ஏனென்றால் சில கல்லூரிகளில் பெயருக்கு நாம் கேள்விப் படாத சிறு நிறுவனங்களின் பெயரில் வளாகத் தேர்வு நடத்தப்படுகின்றன. இதில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு போதிய சம்பளம் அளிக்கப்படாமல் சேர்ந்த சில மாதங்களுக்குள்ளேயே அந்த நிறுவனத்திலிருந்து வெளியேற வேண்டிய நிலையிருக்கும். இதுபோல் சில கல்லூரிகளில் மாணவர்களிடம் தேவையில்லாமல் அடிக்கடி அபராதம் விதிக்கப்பட்டு உடனடியாகச் செலுத்தச் சொல்லும் நிலையும் உள்ளது. இங்கு கைபட்டாலும் குற்றம் கால்பட்டாலும் குற்றம்தான். நிர்வாகத்தின் பணத் தேவைகளுக்கு ஏற்ப அடிக்கடி அபராதம் விதிக்கும் கல்லூரிகளும் இருக்கின்றன. இந்த கல்லூரிகளையும் நாம் விசாரித்துத் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் அடிக்கடி இது போன்ற கல்லூரிகளில் நம் பிள்ளைகளின் படிப்பு போய்விடக் கூடாதே என்கிற நிலையில் அவர்கள் விதிக்கும் அதிக அளவிலான அபராதத் தொகையை அடிக்கடி எந்தவித ரசீதுகளுமில்லாமல் நாம் செலுத்த வேண்டியிருக்கும். கல்லூரி துவங்கப்பட்ட ஆண்டு மற்றும் அதை நிர்வகிக்கும் நிர்வாகிகள் யாரென்பதையும் கூடத் தெரிந்து கொள்ளுங்கள். சில நிர்வாகங்கள் அந்த கல்லூரியில் எந்த வசதியும் செய்து கொடுக்காமல் வேறு புதிய கல்லூரி அல்லது புதிய நிறுவனத்தினை உருவாக்கும் நோக்கத்துடன் கல்லூரிக்கு வரும் பணம் அனைத்தையும் மாற்றி விட்டு கல்லூரியில் பணியிலிருப்பவர்களுக்கு கூட மாதந்தோறும் சம்பளத்தைத் தராமல் இழுத்தடிப்பதுண்டு. இதனால் பணியிலிருப்பவர்களுக்கு பணியில் ஈடுபாடில்லாமல் அந்தக் கல்லூரியில் கல்வியின் தரம் மிகவும் குறைவாக இருக்கும்.இப்படி சுயநிதிக் கல்லூரிகளில் சில தரம் குறைந்திருந்தாலும் பல சுயநிதிக் கல்லூரிகள் அரசுக் கல்லூரிகளைக் காட்டிலும் அதிகமான வசதிகளுடன் இருக்கின்றன. படித்த அனைவருக்கும் வேலை வாய்ப்புகளையும் பெற்றுத் தந்திருக்கின்றன. இது போன்ற நல்ல சுயநிதிக் கல்லூரிகளைத் தேடித் தெரிந்து கொள்ளுங்கள். அப்போதுதான் உங்கள் பிள்ளைகளின் கல்வி சிறப்பாக அமையும். கூடவே அவர்களது வாழ்க்கையும் சிறப்பாக அமையும்.
-தாமரைச் செல்வி
நன்றி: முத்துக் கமலம் இணைய இதழ்

0 comments: