17.5.10

பிளஸ் டு தேர்வு முடிவுகள்: சென்னை நகர பள்ளிகளை விட வெளிமாவட்டங்களே முதலிடம்!

+ 2 தேர்வு முடிவுகள்
இந்த ஆண்டு பிளஸ் டூ தேர்வில் 85.2 சதவீத மாணவ, மாணவிகள் வெற்றி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதத்தைவிட அதிகமாகும்.
வழக்கம் போல இந்த ஆண்டும் மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 88 சதவீதமாகும். மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 81.9 சதவீதமாகும்.
1,187 மதிப்பெண்கள் பெற்று தூத்துக்குடி மாணவன் பாண்டியன் முதலிடம் பிடித்துள்ளார்.
1,186 மதிப்பெண் பெற்ற நாமக்கல் மாணவி சந்தியா,
கிருஷ்ணகிரி மாணவி காருண்யா, மாணவன் திணேஷ் ஆகியோர் 2வது இடம் பிடித்துள்ளனர்.
1185 மதிப்பெண்களுடன் விருதுநகர் பிரவக்ஷனா, ஈரோடு மனோசித்ரா, நாமக்கல் அபிநயா, அரியலூர் அன்டோ நதாரினி, செங்கல்பட்டு ஸ்ரீவித்யா ஆகியோர் 3வது இடத்தைப் பெற்றுள்ளனர்.
கம்ப்யூட்டர் அறிவியலிலும் தூத்துக்குடி மாணவர் பாண்டியனே 200 மதிப்பெண்களுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
தாவரவியலில் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை மாணவி ஜெனிஷா 200 மதிப்பெண்களுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
விலங்கியலில் கரூர் மாவட்டம் குளித்தலையைச் சேர்ந்த மாணவர் ஜெயனந்தா எட்வின் 200 மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்துள்ளார்.
புள்ளியியலில் ஈரோடு மாணவர் தீரஜ் 200 மதிப்பெண்களுடன் முதலிடத்தையும், புவியியலில் மதுரை மாணவி பரமேஸ்வரி 197 மதிப்பெண்களுடன் முதலிடத்தையும் பிடித்துள்ளனர்.
அனைத்துப் பாடங்களிலும் முதலிடத்தை ஒரு சென்னை மாணவர் கூட பெறாதது குறிப்பிடத்தக்கது. தலைநகரின் கல்வித் தரம் குறித்து பெரும் கேள்விக்குறிகளை இது ஏற்படுத்தியுள்ளது.

வெளி மாவட்ட மாணவர்கள் சாதனை:
சென்னை மாணவர்கள் யாரும் முன்னணி இடங்களைப் பெறவில்லை. அனைத்து இடங்களையுமே வெளி மாவட்ட மாணவர்கள்தான் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக மார்ச் மாதம் நடந்த பிளஸ்டூ தேர்வை ஏழரை லட்சம் மாணவ, மாணவியர் எழுதினர். இதன் முடிவுகள் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டு வந்தன. அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் வசுந்தரா தேவி முடிவை வெளியிட்டார்.
மெட்ரிகுலேஷன் தேர்வு:
மெட்ரிக் தேர்வில் சென்னை டிஏவி பள்ளியைச் சேர்ந்த மாணவி அனு 1,188 மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்துள்ளார்.
அதே பள்ளி மாணவி சாரிணி 1,187 மதிப்பெண்களுடன் 2வது இடத்தைப் பிடித்துள்ளார்.
200/200- எடுத்தவர்கள்
கணிதத்தில் சென்டம் போட்ட மாணவ, மாணவியரின் எண்ணிக்கை இந்த ஆண்டு பெருமளவில் குறைந்து விட்டது.
கடந்த ஆண்டு கணிதப் பாடத்தில் 4060 மாணவ, மாணவியர் 200 மதிப்பெண்கள் எடுத்திருந்தனர். ஆனால் இந்த ஆண்டு வெறும் 1762 பேர் மட்டுமே 200க்கு 200 வாங்கியுள்ளனர்.
கணிதப் பாடத்தில் இந்தஆண்டு நிறையப் பேர் தோல்வியடைந்துள்ளனர் என்று முன்பே செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
பிற பாடங்களில் இரட்டை சதம் போட்டவர்கள்
வணிகவியல் – 968
கணக்கியல் – 851
வேதியியல் – 741
வணிக கணிதம் – 341
கம்ப்யூட்டர் சயின்ஸ் – 265
உயிரியல் – 258
இயற்பியல் – 231
தாவரவியல் – 4
விலங்கியல் – 1
B.E. . சேர்க்கை-குறைந்தபட்ச மதிப்பெண் ஒரு வாரத்தில் அறிவிப்பு
தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் குறைக்கப்படவுள்ளது.
அது எவ்வளவு குறைக்கப்படும் என்ற விவரம் ஒரு வாரத்தில் அறிவிக்கப்படும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறினார்.
சட்டசபையில் அவர் கூறுகையில், கடந்த ஆண்டு 548 என்ஜினீயரிங் கல்லூரிகளில் கவுன்சிலிங்குக்குப் பிறகும் 30,581 இடங்கள் காலியாக இருந்தன.
இதனால் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திர மாநிலங்களைப் போல தகுதி மதிப்பெண்ணைக் குறைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். அதுபற்றி பரிசீலித்து வருகிறோம்.
பிளஸ்-2 பாஸ் செய்திருந்தாலே போதும் என்று அறிவிக்கக் கோருகின்றனர். அந்த அளவுக்குக் குறைக்க முடியாது.
இப்போது குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் இதர பிரிவினருக்கு 55, பிற்படுத்தப்பட்டோருக்கு 50, மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 45 என்றும் இருக்கிறது. இதை ஓரளவு குறைத்து, ஒரு வாரத்திற்குள் அறிவிக்கப்படும்.
பெயிலானவர்கள் உடனடி துணைத் தேர்வு
பிளஸ்டூ தேர்வில் மறுகூட்டல் மற்றும் தவறிய பாடங்களுக்கு உடனடி துணைத் தேர்வு எழுத விரும்புவோருக்காக மே 17ம் தேதி முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும் என அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் வசுந்தரா தேவி கூறியுள்ளார்.
கடந்த மார்ச் மாதம் பிளஸ்-2 தேர்வு எழுதி 3 அல்லது அதற்கு குறைவான பாடங்களில் பெயிலானவர்கள் வரும் ஜுன் அல்லது ஜுலை மாதங்களில் நடைபெறும் மேல்நிலைப்பள்ளி சிறப்புத் துணைத் தேர்வை எழுதலாம்.
இதற்கான விண்ணப்பங்கள் 17ம் தேதி முதல் 21ம் தேதி வரை வழங்கப்படும். 2010 மார்ச் மாதம் பள்ளிக்கூட மாணவர்களாக தேர்வு எழுதியவர்கள் அவர்கள் படித்த பள்ளிக்கூடத்திலேயே எஸ்.எச். வகை விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து, அங்கேயே 21ம் தேதிக்குள் நேரில் ஒப்படைக்கவேண்டும். கட்டணத்தை பள்ளியில் பணமாக செலுத்தவேண்டும்.
ஒரு பாடத்திற்கு தேர்வுக்கட்டணம் ரூ.85, 2 பாடங்களுக்கு ரூ.135, 3 பாடங்களுக்கு ரூ.185.
கடந்த மார்ச் மாதம் தேர்வு எழுதி பெயிலான தனித்தேர்வர்களும், 2010-க்கு முந்தைய பருவங்களில் தேர்வு எழுதி தோல்வியுற்ற தனித்தேர்வர்களும் இந்த உடனடித்தேர்வை எழுதலாம்.
விண்ணப்ப படிவங்களை அரசுத்தேர்வு இயக்குனர் அலுவலகம், மண்டல அரசுத்தேர்வு துணை இயக்குனர் அலுவலகங்கள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலகங்கள் ஆகியவற்றில் 24ம் தேதி முதல் 28ம் தேதி வரை பெற்றுக்கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட அரசு தேர்வு துணை மண்டல அலுலவகங்களில் 28ம் தேதிக்குள் சேரும் வகையில் நேரிலோ அல்லது பதிவுத் தபாலிலோ சமர்ப்பிக்க வேண்டும்.
மதிப்பெண் சான்றிதழ் நகல், அல்லது இணையதளத்தில் பெறப்பட்ட மதிப்பெண் பட்டியல் நகலை இணைக்கவேண்டும்.
உடனடி தேர்வு ஜுன் மாதம் 29ம் தேதி முதல் ஜுலை 9ம் தேதி வரை நடைபெறும்.
தேடித்தந்தவர்-
S.சித்தீக்.M.Tech
TNTJ மாணவர் அணி
நன்றி- TNTJ.NET

0 comments: