28.8.08

துபாயில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி

துபாயில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி எதிர்வரும் 04 செப்டம்பர் 2008 வியாழன் மாலை அஸர் தொழுகைக்குப் பின்னர் துபாய் தேரா நாஸர் சதுக்கத்தில் அமைந்துள்ள ஹோட்டல் லேண்ட்மார்க்கில் நடைபெற இருக்கிறது.

இந்நிகழ்ச்சிக்கு முன்னாள் மாணவர் சங்க பொதுச்செயலாளர் முத்துப்பேட்டை அல்ஹாஜ் எம். அப்துல் ரஹ்மான் தலைமை தாங்குகிறார். ஒருங்கிணைப்பாளர் ஜாபர் சித்திக் வரவேற்புரை நிகழ்த்துகிறார்.

சிறப்பு விருந்தினராக சவுதி அரேபிய ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க நிர்வாகி ராஜகிரி அப்துல் மாலிக் கலந்து கொள்ள இருக்கிறார். சமீபத்தில் திருச்சியில் நடைபெற்ற முன்னாள் மாணவர் சங்க விழாவில் சிறப்பு விருது வழங்கப்பட்ட அமீரக ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க தலைவர் சாதிக் காக்கா விழாவில் கௌரவிக்கப்பட இருக்கிறார்.

இச்சிறப்பு மிகு நிகழ்ச்சியில் ஜமால் முஹம்மது கல்லூரியில் பயின்ற மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் தங்களுக்குத் தெரிந்த பழைய மாணவர்களுக்கும் தகவல் தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

முன்னாள் மாணவர் சங்கத்தில் தங்களை பதிவு செய்து கொள்ள 050 5489 609 எனும் தொலைபேசி இலக்கத்தில் பதிவு செய்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
குறிப்பு: ஜமால் முஹம்மது கல்லூரி மன்னாள் மாணவர் மன்ற பொதுச் செயலாளர் முத்துப்பேட்டை அல்ஹாஜ் M.அப்துல் ரஹ்மான் அவர்கள் நமது ஆக்கூர் ஓரியண்டல் பள்ளியின் முன்னாள் மாணவர் என்பதில் நாம் பெருமைப்படுவோம்.

22.8.08

கல்வியில் உயர்நிலை மேம்பாடு அடைய...


சத்தியமார்க்கம் நடத்திய சர்வதேச அளவிலான கட்டுரைப் போட்டியில் பங்கு பெற்ற கட்டுரை. - சத்தியமார்க்கம் நடுவர் குழு
முன்னுரை:
கல்வி என்பது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் பால் வேறுபாடின்றிக் கட்டாயக் கடமையுமாகும். கல்வியின் மூலமே அறிவு மேலோங்கி, உயர்நிலை அடைய முடியும் என்பதை முஸ்லிம்கள் உறுதியாக நினைவில் கொள்ள வேண்டும். நற்சிந்தனையுடைய முஸ்லிம்கள் தற்காலத்தியக் கல்வி ஞானத்தில் மிக உறுதியான, வெற்றிகரமான உயர்வை அடைய, கீழ்கண்ட வழிமுறைகளைக் கையாண்டால் உயர்நிலை நிச்சயம்:
01.ஒரு மாணவர் கல்வியைக் கற்றுக் கொள்ளும் முன் இஸ்லாத்திற்காகச் சேவை செய்யவும் அதன் மூலம் அல்லாஹ்வின் பொருத்தத்தை அடையவும் மன உறுதி செய்து கொள்ள வேண்டும். படித்தவன் என்று மற்றவர்கள் கொண்டாட வேண்டும் என்பதற்காக வெறும் பெயருக்கும் புகழுக்கும் ஆசைப் பட்டுக் கல்வி பயிலக் கூடாது. உளத்தூய்மையுடன் கற்றால்தான் நன்மையும் அபிவிருத்தியும் உண்டாகும்; முடிவு வெற்றியாக அமையும். இல்லையெனில், எல்லா நற்பாக்கியங்களிலிருந்தும் நிராசை அடைவதுடன் அல்லாஹ்வின் கோபத்திற்கும் சோதனைக்கும் ஆளாக நேரிடும்.
02. கல்வியின் மீது அதிக நாட்டம் கொண்டால்தான் அதற்கேற்ப ஞானம் வெளிப்படும்.
03. கல்வி நிறுவனத்தை தேர்வு செய்யும்போது, அங்குள்ள நிபந்தனைகளைக் கேட்டறிந்து கொள்ள வேண்டும். அந்த நிபந்தனைகளை கடைப்பிடிக்க முடிந்தால் மட்டுமே அங்கு இணைந்து கல்வியைக் கற்க வேண்டும்.
04. ஆசிரியர்களுடன் மதிப்பு மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டும்.
05. தமக்குள்ள அறிவுத்தாகத்தை, கல்வி ஆர்வத்தை ஆசிரியரிடம் வெளிப்படுத்த வேண்டும். அதனால், ஆசிரியருக்கு மாணவர் மீது அன்பும் பரிவும் ஏற்பட்டு, அம்மாணவரது முன்னேற்றத்திற்காகத் தனிக்கவனம் செலுத்துவார்.
06. எவ்வளவு முக்கியமான பணி இருந்தாலும் கல்விக்கே முதலிடம் கொடுக்க வேண்டும். வேறு பணிகளில் கவனம் செலுத்தினால், கல்வியில் அபிவிருத்தி இருக்காது. ஆர்வமும் ஈர்ப்பும் குறைந்து போய், படித்தவை மறந்தே போய்விடும். முழு ஐக்கியத்துடன், கவனம் குலையாமல் கற்றால், சீக்கிரம் படிப்பை முடிக்கலாம். இல்லையேல் கல்வி கிடைக்காமல், வாழ்வு தாழ்வாகிவிடும்.
07. மூன்று விஷயங்களைப் பெரும் அருட்கொடைகளாக எண்ணி, அம்மூன்றின் மீது தனிக்கவனம் செலுத்த வேண்டும். அவை: நேரம், ஆரோக்கியம், ஓய்வு ஆகியனவாகும். இவற்றைக் கவனிக்காமல் விட்டு விட்டால், கைசேதம்தான் மிஞ்சும்.
08. நூல்களில் தாம் படித்த இடங்களில் அடையாளம் வைக்க வேண்டும். இதனால் காலவிரயம் ஏற்படாது.
09. கற்ற பாடங்களை அன்றிரவே மனப்பாடம் செய்து கொள்ள வேண்டும். நாளை.. நாளை என்று தள்ளிப்போட்டால், குவிந்துவிடும்.
10. தாம் பயிலும் நூல்களின் கருத்துகளை மதித்து நடக்க வேண்டும்.
11. கற்ற கல்வியை வைத்துப் பெருமையடிக்கக் கூடாது. அல்லாஹ் வழங்கிய கல்வி என்னும் அருட்கொடையை எண்ணி அவனுக்கு நன்றி செலுத்த வேண்டும். பெருமையடித்தால், அருட்கொடை பறிக்கப்பட்டு, நன்மையும் விருத்தியும் நின்று போய், இதயத்திலிருந்து ஞானம் வெளியாகிவிடும். எனவே, கற்ற கல்வியுடன் தன்னடக்கமும் நன்றியறிதலும் அவசியம் இருக்க வேண்டும்.
12. தவறுகளை ஆசிரியர் சுட்டிக்காட்டி, கண்டித்துத் திருத்தும் போது, முகம் சுளிக்கக் கூடாது; எரிச்சலடையக் கூடாது. வெறுப்பைக் காட்டவும் கூடாது. அவ்வாறு நடந்து கொண்டால், மாணவர் மீதுள்ள அக்கறையை ஆசிரியர் குறைத்துக் கொள்வார். இதனால் பல்வேறு இழப்புக்கள் ஏற்படும்.
13. ஓய்வு நேரத்தை வீணடித்து, துஷ்பிரயோகம் செய்யக்கூடாது. அந்த நேரத்தில் கெட்ட சிந்தனைகளுக்கு இடம் தரக்கூடாது. பாவமான காரியங்களில் ஈடுபடக் கூடாது. இதனால் உலக வாழ்க்கை மட்டுமல்ல, மறுமை வாழ்க்கையும் பாதிக்கும்.
14. மற்றவரைப் பற்றி தீய எண்ணம் கொள்ளக்கூடாது. அதனால், மனம் மாசுபட்டு, உலகில் தமக்கு கிடைக்கும். நன்மைகளும் நல்வாய்ப்புகளும் பறிபோகும். மனரீதியாக பாதிப்பு ஏற்படும்.
15. வகுப்பறையில் பாடம் நடக்கும்போது சிரிக்க-பேசக் கூடாது.
16. ஆசிரியரிடம் கல்வி கற்கும் காலத்திலும் அதற்குப் பின்னரும் நெருக்கமான தொடர்பை உண்டாக்கி கொள்ள வேண்டும். இதனால், வாழ்வியல் பிரச்சினைகளுக்கு அவ்வப்போது ஆசிரியரின் ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் பெறலாம்.
17. ஆசிரியர் எடுத்துரைக்கும் பாடம், நல்லுபதேசங்களை செவிதாழ்த்திக் கேட்டு, குறிப்பேட்டில் பதிந்து கொள்ள வேண்டும்.
18. கேள்வியை அறிந்து பதில் எழுத வேண்டும். கேள்வியை விளங்காமல் பதில் எழுதினால் இழப்பும் கைதேசமும் அவமானமும் ஏற்படும்.
19. அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்தவர்களாக இருக்க வேண்டும். அப்போது மற்றவை எல்லாம் அவருக்கு வசப்பட்டு எளிதாகி விடும்.
20. கல்வியை ஆய்வு செய்வதை நிரந்தரமாக்கிக் கொண்டு ஒவ்வொரு நாளும் அதை நடைமுறைப்படுத்தி, கல்வியை அதிகரித்துக் கொள்ள வேண்டும்.
21. அன்றாடப் பணிகளை செவ்வென செய்திருக்கிறோமா என்று சுயபரிசோதனை செய்து கொண்டிருக்க வேண்டும். கற்பதில் எந்தளவு முன்னேறியுள்ளோம் என்பதைச் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். குறையிருந்தால் நிவர்த்தி செய்துவரவேண்டும்.
22. "என் இறைவனே! என்னுடைய கல்வி ஞானத்தை அதிகப்படுத்து" (குர்ஆன் 20:11) என்று துஆச் செய்த வண்ணம் இருக்க வேண்டும்.
முடிவுரை:
விழிப்புணர்வுடைய முஸ்லிம் தனக்கு அவசியமான மேற்கண்ட அறிவுரைகளைப் பின்பற்றுவதோடு மட்டுமல்லாமல், அறிவு மற்றும் சிந்தனையின் கதவுகளையும் அகலத் திறந்து வைத்திருக்க வேண்டும். இதன் மூலம் பலதரப்புகளிலிருந்தும் மனதுக்கு உற்சாகமளித்து ஞானத்தை விரிவுபடுத்தும் விஷயங்களையும் பெற்றுக் கொள்ள முடியும். சிந்தனைத் திறனும் அதிகரிக்கும்; கல்வியில் உயர்நிலை மேம்பாடு அடைய முடியும்.
துணை நின்றவை:
இஸ்லாமியக் கல்வி – டாக்டர். யூசூஃப் அல்கர்ளாவி – இலக்கியச் சோலை, சென்னை – 3. பதிப்பு 2002.
இஸ்லாத்தில் குடும்ப இயல் – அ. ஜமாலுத்தின் - ஃபுர்கான் டிரஸ்ட், சென்னை – 94, 2001ம் வருடப் பதிப்பு
வாழ்க்கைக் கலை – முஹம்மத் இஸ்லாஹி – இஸ்லாமிய டிரஸ்ட், சென்னை – 12. பதிப்பு 2003.
முன்மாதிரி முஸ்லிம் – முஹம்மத் அல்ஹாஷிமி – தாருல் ஹுதா, சென்னை – 1, பதிப்பு 2003
- முஹம்மது அப்துல்காதர்
நன்றி: சத்தியமார்க்கம்.காம்

15.8.08

பெற்றோர்களே சுயநிதிக் கல்லூரிகளைத் தெரிந்து கொள்ளுங்கள்...


இன்று பிளஸ் டு தேர்வு எழுதி தேர்வு முடிவுக்குக் காத்திருக்கும் மாணவர்களிடையே என்ன படிக்கலாம்? எந்தக் கல்லூரியில் சேரலாம்? என்கிற கவலை ஏராளமாகத் தொற்றிக் கொண்டிருக்கிறது. அவர்களின் பெற்றோர்களுக்கும் இந்த கவலை ஒட்டிக் கொண்டு விட்டது. மருத்துவம் படிக்கலாமா? பொறியியல் படிக்கலாமா? வேளாண்மை படிக்கலாமா? அல்லது சமையல் கலையைப் படிக்கலாமா? எதைப் படித்தால் கை நிறையச் சம்பாதிக்கலாம்? எதைப் படித்தால் வெளிநாட்டில் வேலைக்குச் செல்லலாம்? என்று அவர்களுக்குள் ஆயிரம் கேள்விகள்...இந்த கேள்விகளுக்கெல்லாம் விடைகளைத் தேடி சிலர் ஏற்கனவே படிப்பை முடித்து தற்போது நல்ல வேலையிலிருக்கும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள், அவர்களது பெற்றோர்கள் என்று தெரிந்தவர்களை எல்லாம் தேடிப் போகிறார்கள். தமிழ்நாட்டில் இன்று இருக்கும் கல்லூரிகளில் எந்தப் படிப்புக்கு கிராக்கி அதிகமாக இருக்கிறது? அந்தப் படிப்பு எந்தக் கல்லூரிகளில் எல்லாம் இருக்கிறது? என்று கடந்த ஆண்டு பிள்ளைகளின் படிப்புகளுக்காக அலைந்த பெற்றோர்களிடம் அவர்களுக்குத் தெரிந்த கல்லூரிகளின் பட்டியலையும் அங்கிருக்கும் படிப்புகளையும் விசாரணை செய்து தெரிந்து வைத்துக் கொள்ளும் சிலரும் உண்டு.தங்கள் பிள்ளைகளை அடுத்து என்ன படிக்க வைக்கலாம் என்கிற விபரமே தெரியாமலும் பலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.பொதுவாகப் பெற்றோர்கள் ஒரு விஷயத்தை முதலில் கவனத்தில் கொள்ள வேண்டும். அது தங்கள் பிள்ளைக்கு எந்தப் படிப்பின் மீது அதிக ஆர்வமுள்ளது என்பதுதான். அந்த ஆர்வம் உண்மையானதா அல்லது அவனுடன் படித்த நண்பர்கள் அந்தப் படிப்பின் மீது ஆர்வமாய்ச் செல்வதால் இவனும் அவனுடன் சேர்ந்து சொல்கிறானா என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு விருப்பப்பட்ட படிப்பைத் தேர்ந்தெடுப்பதுடன் அதில் சிறப்பாகத் தேர்ச்சி அடையவும் முடியும்.இப்படி உண்மையிலேயே உங்கள் பிள்ளைக்கு ஆர்வமான படிப்பு என்று தெரிந்தால் அந்தப் படிப்பைப் பற்றித் தெரிந்தவர்களிடம் அந்தப் படிப்பு பற்றி முழுமையாக விசாரித்துத் தெரிந்து கொள்ள வேண்டும். அதாவது, அந்தப் படிப்பு படித்தால் கிடைக்கும் வேலைவாய்ப்பு, அதற்கான இடங்கள், சம்பளம் மற்றும் சுயதொழில் வாய்ப்பு போன்றவைகளையும் தெரிந்து கொள்ள வேண்டும். இதன் பிறகு, அந்த படிப்பு தமிழ்நாட்டில் எந்தெந்த கல்லூரிகளில் இருக்கிறது? அந்தக் கல்லூரி அரசுக் கல்லூரியா? அரசு உதவி பெறும் கல்லூரியா? அல்லது சுய நிதிக் கல்லூரியா? என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரி என்றால் தங்கள் தேர்வு முதலாவதாக இருக்கலாம். ஏனென்றால் அங்கு தேவையான கட்டிடங்கள், ஆய்வுக்கூடங்கள், நூலகம், இணைய வசதிகள் மற்றும் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் உட்பட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டிருக்கும். சுயநிதிக் கல்லூரிகளென்றால் முன்பே அந்தக் கல்லூரிக்குச் சென்று, கல்லூரியில் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டிருக்கிறதா? கல்லூரிக்கு மத்திய / மாநில அரசின் தொடர் அங்கீகாரம் (Continuing Approval / Recognition), பல்கலைக் கழகத்தின் தொடர் இணைப்பு (Continuing Affiliation) பெறப்பட்டிருக்கிறதா? என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் கடந்த கல்வி ஆண்டில் அங்கீகாரம் பெற்றிருக்கும் சில கல்லூரிகளில் அரசு நிர்ணயித்துள்ள போதுமான வசதிகளில்லாமல், வசதி குறைவு காரணமாக அந்தக் கல்வி ஆண்டிற்கான அங்கீகாரம் ரத்து செய்யப் பட்டிருக்கலாம்.பல சுயநிதிக் கல்லூரிகள் கட்டிடங்களை அழகாகக் கட்டி வைத்திருப்பார்கள். அங்கு தகுதியான பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் இல்லாத நிலை இருக்கும். இதை எப்படி தெரிந்து கொள்வது? என்பது என்கிற உங்கள் சந்தேகம் நியாயமானதுதான். அங்கு பயிலும் மாணவர்களிடம் விசாரித்துப் பாருங்கள். தாங்கள் தேர்வு செய்துள்ள கல்லூரியின் முதல்வராக இருப்பவர் முன்பு எங்கு பணியிலிருந்தார்? தகுதியானவர்தானா? அவர் இந்தக் கல்லூரியில் சிறப்பாகச் செயல்படுகிறாரா? தேவையான பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் நியமிக்கப் பட்டுள்ளார்களா? அவர்கள் எத்தனை ஆண்டுகளாக இந்தக் கல்லூரியில் தொடர்ந்து பணியில் இருக்கிறார்கள்? என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். ஏனென்றால் அந்தக் கல்லூரியின் நிர்வாகம் சரியில்லாத நிலையில் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் அடிக்கடி மாற்றமாகிக் கொண்டேயிருப்பார்கள். இப்படி அடிக்கடி மாற்றமாகிக் கொண்டேயிருக்கும் கல்லூரியில் கல்வியின் தரம் மிகவும் தாழ்ந்துதான் இருக்கும். சில கல்லூரிகளில் ஆய்வுக் கூடங்கள் பெயருக்குத்தான் இருக்கும். பாடத் திட்டத்திற்கு ஏற்ற கருவிகளோ, பொருட்களோ அங்கு இல்லாத நிலையிருக்கும். இதை அங்கு படித்து வரும் அல்லது படித்து முடித்த மாணவர்களிடமோ கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். இந்த கல்லூரிகளில் படிப்பதால் படித்து முடித்த படிப்புகளுக்குரிய செயல்முறைப் பயிற்சியில்லாமல் நிறுவனங்களில் நேர்முகத் தேர்வின் போது தவிக்க நேரிடும்.இதே போல் வளாகத் தேர்வுகளுக்கு கல்லூரி நிர்வாகம் கடந்த ஆண்டு எடுத்த முயற்சிகள் மற்றும் அதில் எந்தெந்த நிறுவனங்கள் பங்கு பெற்றன? எத்தனை மாணவர்கள் பணிக்கான வாய்ப்புகள் பெற்றனர்? போன்ற விபரங்களையும் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். ஏனென்றால் சில கல்லூரிகளில் பெயருக்கு நாம் கேள்விப் படாத சிறு நிறுவனங்களின் பெயரில் வளாகத் தேர்வு நடத்தப்படுகின்றன. இதில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு போதிய சம்பளம் அளிக்கப்படாமல் சேர்ந்த சில மாதங்களுக்குள்ளேயே அந்த நிறுவனத்திலிருந்து வெளியேற வேண்டிய நிலையிருக்கும். இதுபோல் சில கல்லூரிகளில் மாணவர்களிடம் தேவையில்லாமல் அடிக்கடி அபராதம் விதிக்கப்பட்டு உடனடியாகச் செலுத்தச் சொல்லும் நிலையும் உள்ளது. இங்கு கைபட்டாலும் குற்றம் கால்பட்டாலும் குற்றம்தான். நிர்வாகத்தின் பணத் தேவைகளுக்கு ஏற்ப அடிக்கடி அபராதம் விதிக்கும் கல்லூரிகளும் இருக்கின்றன. இந்த கல்லூரிகளையும் நாம் விசாரித்துத் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் அடிக்கடி இது போன்ற கல்லூரிகளில் நம் பிள்ளைகளின் படிப்பு போய்விடக் கூடாதே என்கிற நிலையில் அவர்கள் விதிக்கும் அதிக அளவிலான அபராதத் தொகையை அடிக்கடி எந்தவித ரசீதுகளுமில்லாமல் நாம் செலுத்த வேண்டியிருக்கும். கல்லூரி துவங்கப்பட்ட ஆண்டு மற்றும் அதை நிர்வகிக்கும் நிர்வாகிகள் யாரென்பதையும் கூடத் தெரிந்து கொள்ளுங்கள். சில நிர்வாகங்கள் அந்த கல்லூரியில் எந்த வசதியும் செய்து கொடுக்காமல் வேறு புதிய கல்லூரி அல்லது புதிய நிறுவனத்தினை உருவாக்கும் நோக்கத்துடன் கல்லூரிக்கு வரும் பணம் அனைத்தையும் மாற்றி விட்டு கல்லூரியில் பணியிலிருப்பவர்களுக்கு கூட மாதந்தோறும் சம்பளத்தைத் தராமல் இழுத்தடிப்பதுண்டு. இதனால் பணியிலிருப்பவர்களுக்கு பணியில் ஈடுபாடில்லாமல் அந்தக் கல்லூரியில் கல்வியின் தரம் மிகவும் குறைவாக இருக்கும்.இப்படி சுயநிதிக் கல்லூரிகளில் சில தரம் குறைந்திருந்தாலும் பல சுயநிதிக் கல்லூரிகள் அரசுக் கல்லூரிகளைக் காட்டிலும் அதிகமான வசதிகளுடன் இருக்கின்றன. படித்த அனைவருக்கும் வேலை வாய்ப்புகளையும் பெற்றுத் தந்திருக்கின்றன. இது போன்ற நல்ல சுயநிதிக் கல்லூரிகளைத் தேடித் தெரிந்து கொள்ளுங்கள். அப்போதுதான் உங்கள் பிள்ளைகளின் கல்வி சிறப்பாக அமையும். கூடவே அவர்களது வாழ்க்கையும் சிறப்பாக அமையும்.
-தாமரைச் செல்வி
நன்றி: முத்துக் கமலம் இணைய இதழ்

13.8.08

பாடப்புத்தகங்கள் இணையத்தில்

தமிழ்நாடு பாடநூல் கழகம் மூலம் ஆசிரியர் பட்டயப் பயிற்சி, மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்களுக்கான புத்தகங்கள் முதல் முறையாக இணையதளத்தில் வெளியிடப்படுகின்றன.
தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் மூலம் மாநில பாட திட்டத்தின் கீழ் பயிலும், ஒன்று முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான பாட நூல்கள் இப்போது அச்சிட்டு இலவசமாக வழங்கப்படுகின்றன.
மாறிவரும் நவீன காலத்துக்கு ஏற்ற வகையில் புத்தகத்தில் உள்ள பாடங்களை எந்த ஊரிலும், யார் வேண்டுமானாலும் படித்துக்கொள்ள வசதியாக, அவற்றை இணையதளத்தில் பதிவு செய்யும் முறை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கியது.
மொத்தம் உள்ள 529 பாடங்களில் இதுவரை 348 பாடங்கள் தமிழ்நாடு பாடநூல் கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
இணையதளம்:
textbooksonline.tn.nic.in
பாடநூல் தொலைந்துபோனாலோ, குறிப்பிட்ட பக்கங்கள் கிழிந்து போனாலோ அவற்றை மாணவர்கள் இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
பாடநூல் கழகம் இலவசமாக வழங்கும் மாநில பாடதிட்ட புத்தகங்களைத் தவிர, மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன் பள்ளி மாணவர்களுக்கான 10-ம் வகுப்பு பாட புத்தகங்கள் மட்டும் இப்போது அச்சிடப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.
இலவசமாக வழங்கப்படும் புத்தகங்கள் மட்டுமே இணையத்தில் கிடைக்கும் என்ற நிலை மாறி, விற்பனை செய்யப்படும் 10-ம் வகுப்பு மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன் பாடதிட்ட புத்தகங்களும், ஆசிரியர் பட்டயப் பயிற்சி புத்தகங்களும் தற்போது அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
அதன்படி மெட்ரிகுலேஷன் புத்தகங்கள் 10, ஆங்கிலோ இந்தியன் பாடப் புத்தகங்கள் 9, ஆசிரியர் பட்டயப் பயிற்சி புத்தகங்கள் 11, 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான சுற்றுச்சூழல் அறிவியல் புத்தகங்கள் 14 என மொத்தம் 44 புத்தகங்களையும் இணையதளத்தில் கொண்டுவருவதற்கான முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இப்பணிகள் அநேகமாக செப்டம்பர் மாத இறுதிக்குள் நிறைவடையும் என்று தெரிகிறது.
இது குறித்து தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் -மேலாண் இயக்குநர் ஹேமந்த் குமார் சின்ஹா திங்கள்கிழமை கூறியது:
மொத்தம் உள்ள 529 பாடப் புத்தகங்களில் 11, 12-ம் வகுப்பு தொழிற்பாடப் பிரிவுக்கான 137 பாடங்கள் மட்டுமே இணையதளத்தில் கிடைக்கவில்லை. இவற்றையும் இணையதளத்தில் கொண்டுவர முயற்சி மேற்கொள்ளப்படும்.
மாநிலத்தில் ஒரு சில இடங்களில் மட்டும் தொழிற்பாடப் பிரிவு மாணவர்களுக்கு புத்தகங்கள் கிடைக்காத நிலை உள்ளது. இதற்காக 50 ஆயிரம் புத்தகங்கள் அச்சிடப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அடுத்த வாரம் இவை மாணவர்களுக்கு விநியோகிக்கப்படும்.
2009-ம் ஆண்டு பாடதிட்டத்தில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை என்றார் சின்ஹா.
நன்றி: imantimes@googlegroups.com on behalf of Muduvai Hidayath (muduvaihidayath@gmail.com)

7.8.08

தனியார் பள்ளிகளை மிரள வைக்கும் அரசு பள்ளி!

மதுரை: சுற்றி வளர்ந்த சீமைக் கருவேல மரங்கள், வற்றிய கண்மாய், வறுமைக்கு சாட்சியாய் சட்டையில்லாத மனிதர்கள் என இன்னும் பாமர கிராமமாக விளங்குகிறது பனையூர்!.
மதுரையிலிருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில், திருப்பரங்குன்றம் ஒன்றியத்தில் உள்ள இக் கிராமத்தை தற்போது தலைநிமிர வைத்துள்ளது இங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி.
282 பேர் பயிலும் இப் பள்ளியில் 143 பேர் மாணவியர். இவர்களில் 6, 7, 8-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர் கல்வி கற்கும் முறை, தனியார் பள்ளிகளையே பிரமிக்க வைக்கிறது.கம்ப்யூட்டர், சி.டி., டி.வி.டி. பிளேயர் மற்றும் வண்ணத் தொலைக்காட்சி என மிக நவீன முறையிலே இப் பள்ளிக் குழந்தைகள் பாடம் பயிலுகின்றனர்.
இந்த நவீன சாதனங்கள் அனைத்தும் இப் பள்ளியின் கல்விக் குழு மற்றும் கிராமப் பொது மக்களால் வழங்கப்பட்டவை.அனைவருக்கும் கல்வித் திட்டத்தில் இக் கல்விக் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. கல்விக் குழுவைச் சேர்ந்த 20 பேரும், இப் பள்ளிக்கு ஒவ்வொரு சாதனத்தை வழங்கியுள்ளனர்.மேலும் அனைவருக்கும் கல்வித் திட்டத்தில் பாடங்களுக்கான சி.டி.க்கள் வழங்கப்பட்டுள்ளன.
பரத நாட்டிய ஆத்திச் சூடி!:
ஒன்றாம் வகுப்பு குழந்தைகளுக்கான ஆத்திச்சூடி பாடம் பரத நாட்டியத்துடன் இடம் பெற்றுள்ளது. இது சி.டி. மூலம் கற்றுத் தரப்படுகிறது.
8-ம் வகுப்பு தமிழ் பாடத்திற்கான திருவிளையாடல் மனப்பாடப் பகுதி, 'திருவிளையாடல்' புராண சினிமாக் காட்சியிலிருந்து எடுத்து டி.வி. மூலம் கற்றுத் தரப்படுகிறது!பாடம் சம்பந்தப்பட்ட சி.டி.க்களை கம்ப்யூட்டரில் செலுத்தி மாணவர்களே பார்த்து படித்துக் கொள்ளும் பயிற்சியைப் பெற்றுள்ளனர்.ஆங்கில மொழிப் பயிற்சிக்கு டி.வி.டி. பிளேயர் மற்றும் தொலைக்காட்சியைப் பயன்படுத்துகின்றனர்.
பொதிகையின் சேவை!:
பொதிகை சானலில் திங்கள், வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு 'காண்போம்... கற்போம்' நிகழ்ச்சியைத் தவறாமல் சம்பந்தப்பட்ட மாணவர்கள் பார்த்து ஆசிரியர்கள் மூலம் விளக்கம் பெறுகின்றனர்.
கடந்த ஆண்டு இப் பள்ளி மாணவியருக்கு சாம்பிராணி, பினாயில் தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் பகுதி நேரமாக சாம்பிராணி, பினாயில் விற்று தங்களுக்கான ஆடை உள்ளிட்டவற்றை வாங்கியதாக மாணவியர் தெரிவித்தனர்.
நவீன முறையில் பாடம் கற்பிப்பதால், மதுரை உள்ளிட்ட வேறு இடங்களில் படிக்கச் சென்ற தனது குழந்தைகளை மீண்டும் பனையூர் பள்ளியிலேயே சேர்த்துள்ளதாகக் கூறுகிறார் இக் கிராமத்தைச் சேர்ந்த வேல்முருகன்.
பள்ளித் தலைமை ஆசிரியர் உதவியுடன் பள்ளிக்கென தனி இணையதளத்தை மாணவ, மாணவியரே தொடங்கியுள்ளனர். மதுரை மாவட்டத்தில் இதுபோல வேறு எந்த அரசு தொடக்கப் பள்ளிக்கும் தனி இணையதளம் கிடையாது என பெருமிதப்படுகிறார் பள்ளித் தலைமை ஆசிரியர் ஏ. ரமேஷ்பாபு.
பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு உதவும் இப் பகுதி மகளிர் சுயஉதவிக் குழுவினர், வகுப்பறைகளுக்கு மின் விசிறி வசதியும் செய்து தந்துள்ளனர்.பள்ளி வளாகத்தில் ரூ. 25,000 செலவில் தற்போது கலையரங்க மேடை, பள்ளி நுழைவு வாயில், பீரோ என பொதுமக்களின் பங்களிப்புடன் அமைக்கப்பட்டுள்ளது.
அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைவரும் சேர்ந்து இப் பள்ளி வளர்ச்சிக்குப் பாடுபடுவதாக கிராமத்தினர் கூறினர்.பள்ளிக்கு சுற்றுச் சுவர், விளையாட்டு மைதானம் இல்லாதது பெருங்குறையாக உள்ளதாகக் கூறும் அவர்கள், சமுதாயக் கூடத்தில் விசேஷ நாள்களில் ஒலிபெருக்கி பாடுவதால் மாணவர்கள் படிப்பதற்குச் சிரமமாக உள்ளதாக வருத்தப்படுகின்றனர்.
இப் பள்ளியில் இப்போது தலைமை ஆசிரியர் உள்பட 7 ஆசிரியர்கள் உள்ள நிலையில், கூடுதலாக 2 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டால் கிராமக் குழந்தைகளது கல்வித் தரத்தை மேலும் உயர்த்த முடியும் என்கிறார்கள் பள்ளி ஆசிரியர்கள்.
நன்றி: தட்ஸ்தமிழ்

4.8.08

பள்ளி மாணவர்களுக்கென புதிய இணையதளம் துவக்கம்

ஒன்பதாம் வகுப்பு முதல் 12ம் வகுப்புவரை படிக்கும் மாணவர்களுக்காக www.topperlearning.com என்ற பெயரில் புதிய இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அந்நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீசரண் நிருபர்களிடம் கூறியதாவது:
ஒன்பதாம் வகுப்பு முதல் 12ம் வகுப்புவரை படிக்கும் மாணவர்களுக்காக www.topperlearning.com என்ற இணையதளத்தைத் தொடங்கியுள் ளோம்.
இதில் 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்காக கணக்கு மற்றும் அறிவியல் பாடங்களும், 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இயற்பியல், வேதியியல், கணக்கு மற்றும் உயிரியல் பாடங்களும் கற்றுத் தரப்படும்.
சிபிஎஸ்சி மற்றும் மாநில அரசின் பாடத்திட்டங்கள் இதில் பின்பற்றப்படும். மாதிரித் தேர்வுகள், தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெறுவதற்கான ஆலோசனைகளையும் இந்த இணையதளம் வழங்கும்.
இதற்கு ஆண்டுக்கு ரூ.1040 கட்டணம் பெறப்படும். சிடி வடிவிலும் மாணவர்கள் இதனைப் பெறலாம். அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திலிருந்து தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளிலும் இந்த இணைய தள சேவை வழங்கப்பட உள்ளது.
முதல் ஆண்டில் 5 லட்சம் மாணவர்களை உறுப்பினர்களாகப் பெறத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் சென்னை மற்றும் ஹைதராபாத்திலிருந்து மட்டும் 2 லட்சம் மாணவர்கள் இருப்பார்கள் என்று அவர் தெரிவித்தார்
நன்றி: முத்துப்பேட்டை நண்பர்கள்

3.8.08

உதவித் தொகையுடன் உயர்கல்விவரை படிக்கும் வழிகள்


திறனாய்வு தேர்வு எழுதி உதவித் தொகையுடன் உயர்படிப்பு வரை படிப்பது எப்படி? என்பது குறித்த தகவல்களை தருகிறார் திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குனர் ப. சுரேஷ்குமார்.
அளவற்ற திறமைகளை குழந்தைப் பருவத்திலேயே பெற்றிருந்தாலும் பொருளாதார காரணங்களால் உயர்கல்வி வாய்ப்பை இழந்து தவிக்கும் பிஞ்சு குழந்தைகளை நாம் பார்த்திருப்போம். 10-ம் வகுப்பில் நல்ல மார்க் வாங்கியிருந்தாலும் வசதி இல்லாததால் படிப்புக்கு முட்டுக்கட்டை விழுந்து ஏதோ ஒரு வேலைக்கு செல்லும் அவல நிலையைப் போக்க ஒரு சிறந்த வழியை அரசு ஏற்படுத்தியுள்ளது.
என்.சி.இ.ஆர்.டி. அமைப்பு, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தும் திறனாய்வுத் தேர்வுகளை சிறப்பாக எழுதி வெற்றி பெற்றால், 8-ம் வகுப்பு முதல் முனைவர் படிப்பு வரை உதவித்தொகையுடன் மேற்படிப்பை பயிலும் வாய்ப்பு உங்களுக்கு உள்ளது என்பதை மாணவர்களாகிய நீங்கள் மறந்துவிட வேண்டாம்!
தேசிய அளவில் நடத்தப்படும் இந்த தேர்வு பிற்காலத்தில் போட்டித் தேர்வை எழுதுவதற்கான அனுபவத்தை இளம் பருவத்திலேயே வழங்குகிறது. எனவே தகுதியுள்ள மாணவர்கள் அனைவரும் திறனாய்வு தேர்வினை எழுதி உங்கள் திறமையை வளர்த்துக் கொள்ளலாம். இப்போது உங்களுக்கு புத்துணர்ச்சி பிறந்திருக்கும்.
பெற்றோரின் கையை அதிகம் எதிர்பார்க்காமல் உங்களின் திறமைக்கு கிடைக்கும் வெகுமதியைக் கொண்டு எதிர்கால வாழ்க்கையை நீங்களாகவே தேர்வு செய்து முன்னேறவும், திறனாய்வு தேர்வு உதவுகிறது.
இந்த தேர்வை எப்படி எழுதுவது? விண்ணப்பம் அனுப்பும் முறை? உதவித் தொகை குறித்த விவரங்கள்? உள்ளிட்ட தகவல்களை பின்வருமாறு விரிவாக அலசலாம்.

என்.சி.இ.ஆர்.டி.:-

தேசியகல்வி ஆய்வு மற்றும் பயிற்சி குழுமத்தினை (என்.சி.இ.ஆர்.டி.) 1961-ம் ஆண்டில் மத்திய அரசு நிறுவியது. கல்வி சம்பந்தப்பட்ட ஆய்வுகள், மகளிர் கல்வி, அமைதி மற்றும் விழிப்புணர்வு சார்ந்த கல்வி, சுற்றுச்சூழல் கல்வி, ஒருங்கிணைந்த கல்வி, திறமைகளை அங்கீகரித்து சாதனைகளை மதிப்பிடுதல் போன்ற பல்வேறு ஆக்கப்பூர்வ செயல்பாடுகளை என்.சி.இ.ஆர்.டி. அமைப்பு நடைமுறைப்படுத்தி வருகிறது.
மேலும், படிக்கும் போது மாணவர்களுக்குள் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் விதத்தில் வேண்டிய வசதிகளை செய்து கொடுக்கிறது. உதாரணமாக கற்றல், எழுதுதல், பேசுதலில் உள்ள குறைபாடுகள், கணக்கிடுவதில் ஏற்படும் பிரச்சினைகள், உடல் உறுப்புகளை சரியாக இயக்க முடியாமல் சிரமப்படும் குழந்தைகளை அடையாளம் கண்டு, பிற மாணவர்களைப் போன்று சமமாக கல்வி கற்றிட சிறப்பு முயற்சிகளையும் என்.சி.இ.ஆர்.டி. அமைப்பு மேற்கொள்கிறது.
தரமான ஆசிரியர்களை உருவாக்கிட மண்டல கல்விக் கல்லூரி மூலம் ஆசிரியர் பயிற்சியையும் வழங்குகிறது.
மேற்கண்ட கல்வி சேவைகள் தவிர, யு.பி.எஸ்.சி. அமைப்பு நடத்தும் சிவில் சர்வீசஸ் தேர்வுக்கும் என்.சி.இ.ஆர்.டி. உதவுகிறது. அதாவது மாணவர்கள், இளைஞர்கள் பயன்பெறும் வகையில் குறைந்த விலையில் தரமான நூல்களை, இதன் நூல் வெளியீட்டு பிரிவு வெளியிடுகிறது. வல்லுனர்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையுள்ள நூல்கள் தேர்வுகளுக்கு பெரிதும் கைகொடுக் கும். இந்தியாவில் உள்ள அனைவரும் ஒரே தரத்திலான கல்வி அறிவைப்பெற என்.சி.இ.ஆர்.டி. அமைப்பின் வெளியீடுகள் உதவுகின்றன.

தேசிய திறனாய்வு திட்டம்:-

1963-ம் ஆண்டு முதல் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மாணவர்களின் கல்வித் திறமை அல்லது குறிப்பிட்ட பாடத்தில் பெற்றுள்ள சிறந்த திறமையை கண்டறிந்து மேம்படுத்துவதே இத்திட்டத்தின் குறிக்கோள்.
அறிவியல், சமூக அறிவியல், மேலாண்மை, பொறியியல், மருத்துவம், சட்டம் என்று மாணவர்களின் ஆர்வத்தைப் பொறுத்து அவர்களின் வளர்ச்சிக்கு இந்த திட்டம் துணை புரிகிறது. மாணவர்கள் இளம் பருவத்திலேயே ஆர்வமுடன் கற்க வேண்டும் என்பதற்காக 8-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தேசிய திறனாய்வு தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. நிர்ணயிக்கப்பட்ட விதியின்படி எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனுடையவர்களுக்கு ஒதுக்கீடும் உள்ளது.

தேர்வு முறை:-
மூன்று நிலைகளைக் கொண்டு இந்த திறனாய்வுத் தேர்வு அமைந்துள்ளது. மாநில அளவில் நடத்தப்படும் முதல்நிலைத் தேர்வு, அகில இந்திய அளவில் நடைபெறும் இரண்டாம் நிலைத் தேர்வு உள்ளிட்டவை பிரதானமாக அமைந்திருக்கும்.
மாநில கல்வித்துறையின் அல்லது ïனியன் பிரதேசத்தின் ஒருங்கிணைப்பில் முதல்நிலைத் தேர்வு நடத்தப்படுகிறது. இம்மாதம் 30-ந் தேதிக்குள் (30.8.08) இதற்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் "இயக்குனர், அரசுத்தேர்வுத்துறை, கல்லூரி சாலை, நுங்கம்பாக்கம், சென்னை-600 006'' என்ற முகவரிக்கு தங்கள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
புதுச்சேரி மாணவர்கள் "இணை இயக்குனர், அரசுத் தேர்வுத்துறை, அண்ணாநகர், புதுச்சேரி-605 003'' என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம்.
மாநில அளவில் நடத்தப்படும் முதல்கட்ட தேர்வு இரண்டு பிரிவுகளைக் கொண்டதாகும். நுண்ணறிவுத் திறன், பாடப்பிரிவு சார்ந்த திறனறியும் விதத்தில் இந்த தேர்வு அமைந்திருக்கும். அறிவியல், சமூக அறிவியல், கணிதம் உள்ளிட்ட பாடங்களில் இருந்து தேர்வில் வினாக்கள் அளிக்கப்படும். இந்த தேர்வு வரும் நவம்பர் 16-ம் தேதியன்று நடைபெறும்.
அகில இந்திய அளவில் நடைபெறும் இரண்டாம் நிலைத் தேர்வு அடுத்த ஆண்டு (2009) மே மாதம் முதல் வாரத்திற்கு பின்பு நடத்தப்படும்.
தேர்வுகள் குறித்த முழு விவரங்கள், விண்ணப்ப படிவம், விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் முழுவதையும் www.ncert.nic.in என்ற இணையதளத்தை தொடர்பு கொண்டு பெறலாம்.
தேர்வில் வெற்றி பெற வழிகள்:
மாணவர்களின் கல்வியறிவுத் திறமை தேசிய அளவில் பிரகாசிக்க தேசிய திறனாய்வு தேர்வு உதவுகிறது. தங்களின் கல்வியறிவுத் திறமையை அதிகரிக்க என்.சி.இ.ஆர்.டி. வெளியீடுகளை வாங்கிப் படித்து பயன்பெறலாம்.
8-ம் வகுப்பு அல்லது 10-ம் வகுப்பு மாணவர்களுக்காக நடத்தப்படும் திறனாய்வு தேர்வு மூலம் அகில இந்திய அளவில் நடைபெறும் சிறந்த தேர்வுகளை எப்படி எழுதலாம்? என்பதற்கான முழு அனுபவத்தையும் போனசாக மாணவர்களுக்கு வழங்குகிறது.

இணையதளம் அளிக்கும் சேவை:-
மாணவர்களின் கல்வி அறிவு, பொது அறிவை வளர்த்துக் கொள்ள என்.சி.இ.ஆர்.டி. இணையதளத்தில் பல்வேறு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. கல்விசார்ந்த நிகழ்ச்சிகள் மற்றும் செய்திகளை படிக்கும் வாய்ப்பும், டவுன்லோடு செய்யும் வசதியும் உள்ளது. அரசு தேர்வுகள் மற்றும் போட்டித் தேர்வுகளுக்கு தயாராக விரும்புவோருக்கு என்.சி.இ.ஆர்.டி. இணையதளம் உதவி செய்யும்.
நன்றி: தினத்தந்தி இளைஞர்மலர்