11.3.10

வாழ்க்கைப் பாடம்

 


அந்த ஆசிரியரை எல்லா மாணவர்களும் நேசித்தார்கள். காரணம் கஷ்டமான பாடத்தையும் எளிமையான உதாரணங்களைக் கொண்டு புரிய வைப்பதில் அவர் வல்லவராக இருந்தார். அவரிடம் படித்த மாணவர்கள் பெரிய பெரிய பதவிகளை வகித்தார்கள். பலரும் பல நாடுகளுக்குச் சென்று பிரகாசித்தார்கள். பெரிய தொழிலதிபர்களாகத் திகழ்ந்தார்கள். அவர்களுக்கு எத்தனையோ ஆசிரியர்கள் இருந்திருந்த போதிலும் அவர் மேல் காட்டிய அன்பையும் மரியாதையையும் அவர்கள் மற்றவர்களிடம் காட்டவில்லை. அந்த ஆசிரியரிடம் மட்டும் பெரும்பாலான மாணவர்கள் இன்னும் கடிதம் மூலமும், ஈ மெயில் மூலமும் தொடர்பு வைத்திருந்தார்கள்.

அவரும் தன் மாணவர்களை மிகவும் நேசித்தார். அவர்களுடைய வெற்றியை தன் சொந்தப் பிள்ளைகளின் வெற்றியென அவர் மகிழ்ந்தார். ஆனால் ஒரே ஒரு உண்மை மட்டும் அவர் மனதில் நெருடலாக இருந்தது. பதவி, பணம், கௌரவம் ஆகியவற்றில் உயர்ந்து விளங்கிய அவருடைய மாணவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக அவருக்குத் தெரியவில்லை. அவர்கள் அனுப்பிய கடிதங்களும், ஈ மெயில்களும் அதைக் கோடிட்டுக் காண்பித்தன. மன உளைச்சல்கள், பிரச்சனைகள் நிறைந்த வாழ்க்கை முறையில் அவர்கள் வாழ்ந்து வந்தார்கள் என்பதை அவர் உணர்ந்தார். பெரிய பெரிய சாதனைகள் புரிய ஓடிக் கொண்டிருந்த ஓட்டத்தில் மகிழ்ச்சியை அவருடைய மாணவர்கள் தொலைத்திருந்தார்கள்.

அவருடைய மாணவர்கள் எல்லோரும் அவருடைய எழுபதாவது பிறந்த நாளுக்கு ஒன்று சேர்ந்து அவரைக் கௌரவிக்க முடிவு செய்தார்கள். அவருக்கு அது போன்ற பிறந்த நாள் விழாக்களில் பெரிய ஈடுபாடு இல்லை என்றாலும் அவர்கள் அன்பை மறுக்க முடியாததால் அதற்கு சம்மதித்தார். பெரியதொரு அரங்கத்தில் அவர்கள் அவருடைய பிறந்த நாளன்று ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். அவர் அதற்கு முந்திய நாள் தன் வீட்டில் தேனீர் அருந்த அவர்கள் அனைவரையும் வரச் சொன்னார்.

உள்நாட்டிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் பல மாணவர்கள் அவருடைய பிறந்த நாளுக்கு முந்தைய நாளே அவர் வீட்டில் கூடினார்கள். அவரைக் கண்டதில் அவர்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. அவரும் அவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்று உரையாடினார். பின் தன் சமையலறைக்குச் சென்ற அவர் பெரிய பாத்திரம் ஒன்றில் தயாரித்து வைத்திருந்த சூடான தேனீரைக் கொண்டு வந்தார். மேசை மீது வைத்திருந்த வித விதமான தம்ளர்களைக் காண்பித்து அவர்களை தாங்களே ஊற்றிக் கொண்டு குடிக்கச் சொன்னார்.

மிக அழகான வேலைப்பாடுடைய பீங்கான் தம்ளர்கள், வெள்ளி தம்ளர்கள், சாதாரண தோற்றமுள்ள எவர்சில்வர் தம்ளர்கள் அழகில்லாத அலுமினியத் தம்ளர்கள், ப்ளாஸ்டிக் தம்ளர்கள் என்று பல வகைப்பட்ட தம்ளர்கள் மேசை மீது இருந்தன. விலையுயர்ந்த தம்ளரிலிருந்து மிக மலிவான தம்ளர் வரை இருந்ததைக் கவனித்த மாணவர்கள் இயல்பாகவே விலையுயர்ந்த, அழகான தம்ளர்களையே தேர்ந்தெடுத்துக் கொள்வதில் முண்டியடித்துக் கொண்டு போனார்கள். அந்தத் தம்ளர்களில் தேனீரை ஊற்றிக் குடித்த அவர்கள் தேனீரின் சுவை பற்றி ஆசிரியரிடம் புகழ்ந்தார்கள். அந்த ஆசிரியர் ஒரு தேயிலைத் தோட்டத்தில் பிரத்தியேகமாகச் சொல்லித் தருவித்த உயர்தரத் தேயிலை உபயோகித்து அந்தத் தேனீரைத் தயாரித்ததை அவர்களிடம் தெரிவித்தார்.

பின் கேட்டார். ”எத்தனையோ பாடங்கள் உங்களுக்கு சொல்லித் தந்திருக்கிறேன். இப்போது ஒரு வாழ்க்கைப் பாடத்தையும் உங்களுக்கு சொல்லட்டுமா?”

அவர்கள் ஏகோபித்த குரலில் உற்சாகமாகச் சொன்னார்கள். “தயவு செய்து சொல்லுங்கள்”

”எத்தனையோ தம்ளர்கள் இருந்த போதிலும் நீங்கள் அழகான விலையுயர்ந்த தம்ளர்களை எடுக்கப் போட்டி போட்டுக் கொண்டு போனீர்கள். அது இயற்கை தான். ஆனால் எடுத்தது எந்த தம்ளராக இருந்தாலும் உண்மையில் உங்களுக்கு முக்கியமானது நீங்கள் குடித்த தேனீர் தான். அதன் சுவையும் தரமும் மட்டுமே நீங்கள் ருசிக்கப் பயன்படுகிறது. உங்கள் வேலை, பணம், பதவி, அந்தஸ்து எல்லாம் அந்தத் தம்ளர்களைப் போல. வாழ்க்கை தேனீர் போல. தம்ளர்களின் தரம் தேனீரின் தரத்தை எப்படித் தீர்மானிப்பதில்லையோ அது போல உங்கள் வேலை, பணம், பதவி, அந்தஸ்து ஆகியவை உங்கள் வாழ்க்கையின் தரத்தைத் தீர்மானிப்பதில்லை.”

“அதை மறந்து இப்போது அழகான விலையுயர்ந்த தம்ளர்களை எடுக்கப் போட்டி போட்டதைப் போல வாழ்க்கையிலும் மிக உயர்ந்த வேலை, மிக அதிகமான பணம், மிக உயர்ந்த பதவி, பலர் மெச்சும் அந்தஸ்து ஆகியவற்றைப் பெற போட்டி போட்டுக் கொண்டு வாழ்வதால் தான் நீங்கள் மன உளைச்சலாலும், பிரச்சனைகளாலும் அவதிப் படுகிறார்கள். வாழ்க்கை என்ற தேனீரின் தரத்தை இந்தத் தம்ளர்கள் தீர்மானிக்கிறது என்று தப்பர்த்தம் செய்து கொள்வதாலேயே போட்டி, பொறாமை, அவசரம், பேராசை என்ற வலைகளில் சிக்கிக் கொள்கிறீர்கள்”

“தோற்றங்களில் அதிகக் கவனத்தைத் தரும் போது உண்மையான வாழ்க்கையை நாம் கோட்டை விட்டு விடுகிறோம். வாழ்க்கையை ருசிக்கத் தவறி விடுகிறோம். எத்தனை தான் பெற்றாலும் உள் மனம் அந்த உண்மையை உணர்ந்திருப்பதால் அது என்றும் அதிருப்தியாகவே இருக்கிறது.”

அவர் சொல்லி முடித்த போது அந்த மாணவர்களிடையே பேரமைதி நிலவியது. சிலர் பிரமித்துப் போய் அவரைப் பார்த்தார்கள். சிலர் கண்களில் நீர் தேங்கி நின்றது. இருட்டில் இருந்ததால் தெரியாமல் போன பலதையும் வெளிச்சம் வந்தவுடன் தெளிவாகப் பார்க்க முடிந்தது போல அனைவரும் உணர்ந்தார்கள். இத்தனை நாள்கள் அவர் சொல்லித் தந்த பாடங்களை விட இப்போது சொல்லித் தந்த வாழ்க்கைப் பாடத்தை இவ்வளவு எளிமையாக மனதில் பதியும் படி வேறு யாரும் சொல்லித் தர முடியாது என்று நினைத்த அவர்கள் மனதில் அவர் இமயமாக உயர்ந்து போனார்.

ஒருவன் கண்ணீருடன் கை தட்ட ஆரம்பிக்க அவர் வீடு அடுத்த நிமிடத்தில் கை தட்டல்களால் அதிர்ந்தது.
 Thanks & Regards,
Nizam Deen A.H
Sr. Software Programmer

7.3.10

2013-ல் MBBS , BE படிப்பு-தேசிய அளவில் பொது நுழைவுத் தேர்வு!

டெல்லியில் நேற்று (16-2-2010) நடைபெற்ற பள்ளிக் கல்வி கவுன்சில் கூட்டத்தில் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் கபில்சிபல் கலந்துகொண்டு பேசுகையில், நாடு முழுவதும் உள்ள மருத்துவம், பொறியியல் மற்றும் வணிக படிப்புகளுக்கு ஒரே பொது நுழைவுத் தேர்வு நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. வரும் 2013ம் ஆண்டு இந்த புதிய நடைமுறை அமலுக்கு வரும் என்று மத்திய அமைச்சர் கபில்சிபல் கூறியுள்ளார்.
‘நாடு முழுவதும் ஒரே நுழைவுத் தேர்வை நடத்துவதன் மூலம் பொறியியல், மருத்துவம், பொருளாதாரம், வணிகவியல் உள்ளிட்ட பட்டப்படிப்புகளுக்கு ஒரே நேரத்தில் மாணவர் சேர்க்கையை மேற்கொள்ள அது வழி வகுக்கும்.
மேலும் பல்வேறு நுழைவுத் தேர்வுகளுக்கு படித்து தயார் செய்து கொள்ளும் மாணவர்களின் சுமையை இந்த ஒரே நுழைவுத் தேர்வு மூலம் குறைக்க முடியும்.
அமெரிக்காவில் உள்ள எஸ்ஐடி நுழைவுத் தேர்வின் அடிப்படையில் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும். இதற்கான முயற்சிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2013ல் இத்திட்டம் அமலுக்கு வரும்’ என்றார்.
இது வரவேற்க்கதக்க அறிவிப்பாகும். இப்படி தேசிய அளவில் பொது நுழைவுதேர்வு நடத்துவது மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நுழைவுதேர்வுகள் நடத்துவதால் மாணவர்களின் பணம் விரயம் ஆகின்றது. மேலும் நுழைவு தேர்வு பயிற்சி அளிக்கின்றோம் என பல பயிற்சி நிறுவனங்கள் மாணவர்களின் பணத்தை கொள்ளை அடிக்கின்றன, அந்த செலவும் மாணவர்களுக்கு குறையும்.
இட ஒதுக்கீடு – சிக்கல் :
ஆனால் இதில் உள்ள பெரிய சிக்கல் இடஒதுகீடு ஆகும், நமக்கு மாநில அரசில் மட்டுமே இட ஒதுகீடு உள்ளது. மத்திய அரசில் தனி இட ஒதுகீடு இல்லை. மாநில அரசு நடத்தும் நுழைவுதேர்வு மூலம் கிடைக்கும் தனி இட ஒதுக்கிடின் அடிப்படையில் நமக்கு இடம் வழங்கபட்டு வருகின்றது (சில பிரிவுகளுக்கு ரோஸ்ட்டர் என்று நம்மை மாநில அரசு ஏமாற்றி கொண்டு இருக்கின்றது அது வேறு கதை) மத்திய அரசின் இந்த பொது நுழைவு தேர்வை நடைமுறைக்கு வருவதற் முன்னால் முஸ்லீம் மாணவர்களுக்கு மத்திய அளிவிலும் இட ஒதுகீடு கொடுத்தால் நமக்கு பயனுள்ளதாக இருக்கும். அல்லது தேர்வை மட்டும் நடத்திவிட்டு இடங்களை ஒதுக்கும் உரிமையை மாநில அரசிடம் விட்டு விட வேண்டும். மாணவர்களுக்கு நல்லது செய்கின்றோம் என்ற பெயரில் மத்திய அரசு நாம் கஷ்டப்பட்டு பெற்ற சிறிய இட ஒதுகீடையும் பரிக்காமல் இருந்தால் சரி.
செய்தி- S.சித்தீக்.M.Tec
நன்றி-TNTJ.NET

2.3.10

மாணவர்கள் 'அதிக மதிப்பெண்கள்' பெற ஓர் இணையதளம்!

மாணவர்கள் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறுவதற்கு உதவுவதற்காக மத்திய அரசின் தேசிய கல்வி ஆய்வுக் கழகத்தின் (NCERT) பாடத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு www.extramarks.com என்ற புதிய இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.

உ.பி. மாநிலம் நோய்டாவைச் சேர்ந்த எக்ஸ்ட்ராமார்க்ஸ்.
காம் கல்வி நிறுவனம் இந்த இணையதளத்தை உருவாக்கியுள்ளது. இதில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் பயிலும் இந்திய மாணவர்கள், தேர்வுகளில் சிறப்பாக தேர்ச்சி பெறவும், கூடுதல் மதிப்பெண்கள் பெறவும் உதவியாக பல்வேறு டிப்ஸ்கள் தரப்பட்டுள்ளன.

மாதிரிக் கேள்வித்தாள்கள் மற்றும் அதற்கான பதில்கள் அடங்கிய விரிவான வழிகாட்டியும் இதில் இடம் பெற்றுள்ளது. மாணவர்கள் தங்களது சந்தேகங்களை கேட்டு அதற்குரிய பதில்களைப் பெறவும் இதில் வசதி உள்ளது. மேலும், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் சக மாணவர்களுடன் கலந்துரையாடவும் இதில் வசதி உள்ளது.

இதன் மூலம் இறுதித் தேர்வில் கூடுதல் மதிப்பெண்கள் பெற மிகவும் எளிதாக இருக்கும். இந்த இணையதளத்தின் தலைமை செயல் அதிகாரி அலோக் பட்நாகர் இதுகுறித்துக் கூறுகையில், வகுப்பு வாரியாக, பாட வாரியாக, சாப்டர் வாரியாக கேள்வி வங்கியை நாங்கள் உருவாக்கியுள்ளோம். இதை அனைவரும் இலவசமாகவே பயன்படுத்தலாம்.மேலும், மாணவர்ளின் சந்தேகங்களுக்குரிய பதில்களைத் தருவதற்காக மிகப் பெரிய ஆசிரியர் குழுவையும் நாங்கள் வைத்துள்ளோம்.

இப்படி ஒரு கல்வி இணையதளம், அதுவும் இலவசமாக இருப்பது எனக்கு தெரிந்து இது மட்டுமே என்றார்.பூனம் சிங்கின் தலைமையிலான 45 பேர் கொண்ட குழு இந்த இணையதளத்தை நிர்வகிக்கிறது.

-சத்தியமார்க்கம்.காம்

1.3.10

+ 2 தேர்வு இன்று தொடக்கம்

சென்னை: இன்று (மார்ச் 1) தமிழ்கத்தில் +2 தேர்வுகள் தொடங்குகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 6.89 லட்சம் மாணவ, மாணவியர் இந்த தேர்வை எழுதவுள்ளனர்.

இதுகுறித்து அரசு தேர்வுத் துறை இயக்குநர் வசுந்தராதேவி வெளியிட்ட செஉதி அறிக்கையில்:

"மார்ச் 1-ம் தேதி தொடங்கும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 5,233 மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 6.89 லட்சம் மாணவ, மாணவியர் பங்கேற்கின்றனர்.

இவர்களில் 3,22,381 பேர் மாணவர்கள். 3,67,306 பேர் மாணவிகள்.

கடந்த ஆண்டைக் காட்டிலும் கூடுதலாக 42,055 மாணவ, மாணவியர் இந்த ஆண்டு தேர்வெழுத உள்ளனர். மாணவர்களைவிட 44,925 மாணவிகள் கூடுதலாகத் தேர்வெழுதுகின்றனர்.

கடந்த ஆண்டைவிட மாணவர்கள் எண்ணிக்கை 17,481 அதிகம்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முழுவதுமாக மேல்நிலைப் பள்ளி பொதுத் தேர்வுக்கு மொத்தம் 1,809 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சென்னையில் 48,730 பேர்...: சென்னையில் 436 மேல்நிலைப் பள்ளிகளில் இருந்து மொத்தம் 48,730 மாணவ, மாணவியர் 136 தேர்வு மையங்களில் தேர்வெழுதுகின்றனர்.

இவர்களில் 22,312 பேர் மாணவர்கள். 26,418 பேர் மாணவிகள்.

சென்னைக்கு மட்டும் முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் தலைமையில் 50 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

புதுச்சேரியில் அமைக்கப்பட்டுள்ள 30 தேர்வு மையங்களில் 87 பள்ளிகளைச் சேர்ந்த 12,588 பேர் தேர்வெழுதுகின்றனர்.

பள்ளி மாணவர்கள் தவிர 53,564 தனித்தேர்வர்கள் தேர்வெழுத பதிவு செய்துள்ளனர்.

பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாற்றுத்திறன் குறைபாடுடைய மாணவர்கள், பார்வையற்றோர், காதுகேளாதோர், வாய் பேசாதோர் மற்றும் இதர உடல் ஊனமுற்றோருக்காக மாணவர் சொல்வதை எழுதும் ஒரு சிறப்பு ஆசிரியர் நியமிக்கப்படுவார்.

ஒரு மொழிப் பாடம் தவிர்த்து மற்றும் தேர்வில் கூடுதலாக ஒரு மணி நேரம் சலுகை வழங்கப்படும்.

வினாத்தாள் கட்டு காப்பு மையங்களில் 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு போடப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட தேர்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் கல்வித் துறை அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுவர்.

இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் தேர்வுகளின் போது அனைத்து தேர்வு மையங்களிலும் அதே மாவட்டத்தைச் சேர்ந்த வேறு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், முதன்மைக் கண்காணிப்பாளராக இருந்து தேர்வினை நடத்தும் முறை இவ்வாண்டும் செயல்படுத்தப்படுகிறது.

எக்காரணம் கொண்டும் பொதுத் தேர்வு மையங்களில், தேர்வு முடியும் வரை அப்பள்ளியைச் சேர்ந்த தாளாளர்களோ, ஆசிரியர்களோ, அடிப்படைப் பணியாளர்களோ தேர்வு நடக்கும் வளாகத்தில் இருக்கக் கூடாது என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

காப்பி அடித்தால் 2 ஆண்டு தேர்வெழுத முடியாது: துண்டுத்தாள் வைத்திருத்தல், துண்டுத்தாள்களை பார்த்து எழுத முயற்சித்தல், பிற மாணவர்களைப் பார்த்து எழுதுதல், தேர்வு அதிகாரிகளிடம் முறைகேடாக நடந்து கொள்ளுதல், தேர்வுத்தாள் மாற்றம் செய்தல், ஆள்மாறாட்டம் செய்தல் போன்றவை கடுங்குற்றமாகும்.

தேர்வறையில் தடை செய்யப்பட்ட துண்டுச்சீட்டு வைத்திருந்தாலோ, அச்சிடப்பட்ட புத்தகத்தை வைத்திருந்தாலோ ஓராண்டு தேர்வெழுத தடை விதிக்கப்படும். துண்டுச்சீட்டு பார்த்து எழுதுதல், பிற மாணவர்களின் விடைத்தாள்களை பார்த்து எழுதுதல் போன்ற ஒழுங்கீனங்களில் ஈடுபடும் மாணவர்கள் 2 ஆண்டுகள் தேர்வு எழுத தடை விதிக்கப்படும்.

2009-ம் ஆண்டு மேல்நிலைத் தேர்வில் ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபட்டதாக தண்டனைப் பெற்றவர்களின் எண்ணிக்கை 290 ஆகும்.

வினாத்தாளை மாணவர் 10 நிமிடம் படித்து பார்க்கவும், அதைத் தொடர்ந்து விடைத்தாள் முகப்பு பக்கத்தில் பிழையின்றி தேர்வெண் உள்ளிட்ட முக்கிய விவரங்களை எழுத 5 நிமிடமும் கால அவகாசம் வழங்கப்படுகிறது."

இவ்வாறு அந்த செய்தி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.