22.7.07

அது ஒரு பொற்காலம்

ஆக்கூர் ஓரியண்டல் தனது பொன் விழா கொண்டாட்ட நினைவாக வெளியிட்ட பொன் விழா சிறப்பு மலரில் வெளியான ஒரு கட்டுரை இது. சிறப்பு மலரில் இடம் பெற்றுள்ள பிற கட்டுரைகள் வெகு விரைவில் இப்பகுதியில் இடம் பெறும் இன்ஷா அல்லாஹ்.
அது ஒரு பொற்காலம்
(அப்துஸ்ஸலாம் மஸ்தூக்கா )
கடந்த காலத்தை,அதிலும் குறிப்பாகப் பள்ளிக் கூட வாழ்க்கையை மலரும் நினைவுகளாக மனதில் அசை போட்டுப் பார்ப்பதில் கிடைக்கும் இன்பம் அலாதியானது. சொந்த ஊரில் உள்ள பள்ளிக் கூடங்களில் படித்த மாணவர்களுக்குக் கிடைக்கும் இன்பத்தை விட வெளியூரில் விடுதியில் தங்கிப் படித்த மாணவர்களுக்குக் கிடைக்கும் இன்பமே தனி. அந்த இன்பத்தை அனுபவித்துப் பார்த்தவர்களுக்குத் தான் தெரியும். ஒருவருக்கொருவர் மனம் விட்டுப்பழகிய பழக்கம், குடும்ப விஷயங்கள் வரை பகிர்ந்துக் கொண்டு தேடிய ஆறதல், இறுதியாகப் பள்ளிப் படிப்பை நிறைவு செய்து பிரிந்து சென்ற சோகம், ஆகிய இவற்றில் எதைத்தான் மறக்க முடியும்?
1970 ஆம் ஆண்டு ஆக்கூர் ஓரியண்டலில் அடியெடுத்து வைத்து ஆறு ஆண்டுக்காலம் அற்புதமான கல்வியைக் கற்று 1976 ஆம் ஆண்டு நூறு சதவிகிதத் தேர்ச்சியைப் பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்த நாங்கள் இன்றளவும் எங்களால் மறக்க முடியாத அந்த நற்காலத்தை மனதால் அசைபோடுகிறோம். ஆம் அது ஒரு பொற்காலம்.
தாய் நாட்டிலும் வெளிநாடுகளிலும் பரவி வாழ்ந்துக் கொண்டிருக்கும் முன்னாள் மாணவர்களாகிய எங்கள் இதயத்தில் நீங்கா இடம் பிடித்த 'ஆக்கூர் ஓரயண்டல் அரபி மேல் நிலைப் பள்ளி' இன்று பொன் விழா காண்பதை அறிந்து எங்கள் உள்ளமெல்லாம் குளிருகிறது.
பள்ளி வாழ்க்கையை முடித்து நாங்கள் வெளியேறினாலும் எங்களில் சிலர் வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் வந்து எங்களை உருவாக்கிய எங்கள் பள்ளியை பார்வையிட்டிருக்கிறோம். இடையில் சில காலம் பள்ளியின் வளர்ச்சியில் சற்று தளர்ச்சி ஏற்பட்டிருந்தாலும் தற்போதைய தாளாளர் கண்ணியத்திற்குரிய அல்ஹாஜ் A.முஹம்மது இக்பால் அவர்கள் நிர்வாகப் பொறுப்பை ஏற்றது முதல், முன்னேற்றப் பாதையில் எங்கள் பள்ளி பீடு நடை போடத் தொடங்கியிருப்பதை காணும் போது மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
உள்ளம் கவரும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ள உணவுக் கூடம், மனதைக் கொள்ளைக் கொண்ட புதிய மாணவர் விடுதி,அதி நவீன வசதிகளுடன் கூடிய அழகான வகுப்பறைகள்,எழில் மிகுந்த இறையில்லம்,ஆண்டு தோறும் அதிகரித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் எண்ணிக்கை, சுவையான உணவு, சுத்தமான சுற்றுப் புறச்சூழல், ஆகா! மெய்மறந்து நின்றோம். மாணவனாக ஆறாம் வகுப்பில் சேர்ந்து மறுபடியும் படிக்கத் தொடங்குவோமா! என்று உள்ளம் ஏங்கியது. சாத்தியமில்லாத கற்பனைகள் கூட சில சமயம் மனதுக்கு மகிழ்ச்சியைத் தருவதுண்டு.
இது வரை இப் பள்ளி அடைந்திருக்கும் அசுர வளர்ச்சியைக் காணும் போது, இன்ஷா அல்லாஹ் இனியும் அடையப் போகும் அபரிமிதமான வளர்ச்;சி இதோ நம் கண் முன்னே தெரிகிறது.இப்போது நடைபெறும் பொன் விழா நிகழ்ச்சிகள் அதற்குக் கட்டியம் கூறுகின்றன. பொன் விழா காணும் இந்தப் பொன்னான 'ஓரியண்டல் அரபி மேல் நிலைப்பள்ளி' என்னும் மாபெரும் கல்விக் கடலில் நாங்களும் ஒரு காலத்தில் மூழ்கி முத்தெடுத்தவர்கள் என்பதை நினைக்கும்போது எங்களுக்குப் பெருமையாக இருக்கிறது.
இந்த ஆக்கூர் ஓரியண்டல் எங்களுக்கு அறிவைத் தந்தது, ஆற்றலைத் தந்தது, அனுபவங்களைத் தந்தது, அநேக நண்பர்களைத் தந்தது, மனப்பக்குவத்தைத் தந்தது, மார்க்க ஞானத்தைத் தந்தது, காலமெல்லாம் நேர் வழி நடக்க எங்கள் கரம் பிடித்து நடை பழக்கியது.
இம்மை மறுமை ஈருலகக் கல்வியையும் ஒர சேரப் பயில எங்களுக்குக் கிடைத்த அரிய வாய்ப்பு, தொழுகை நோன்பு போன்ற வணக்க வழிபாடுகளில் இன்றளவும் நாங்கள் நின்றொழுக எங்களுக்குக் கிடைத்த அருமையானப் பயிற்சி, நல்லொழுக்கத்துடன் நாங்கள் வாழ எங்களுக்கு விதிக்கப்பட்ட நியாயமான கட்டுப்பாடுகள், ஆகிய இவை தான் இன்று நாங்கள் தூயவர்களாக வாழ்வதற்குத் துணை நின்றவை என்றால் அதற்கு மூல முதற்காரணமாக அமைந்த எங்கள் ஆக்கூர் ஓரியண்டலை நாங்கள் எப்படி மறக்கமுடியும்?
பள்ளி இறுதி வகுப்பை இனிதே நிறைவு செய்து உயர் கல்வி கற்பதற்காக நாங்கள் உயர் கல்வி நிறுவனங்களுக்குச் சென்ற போது தான் நாங்கள் கல்வி பயின்ற ஆக்கூர் ஓரியண்டலின் மகிமையைப் புரிந்துக் கொண்டோம். பிற கல்வி நிறுவனங்களிலிருந்து வந்து சேர்ந்த மாணவர்களை விட நாங்கள் உயர்வாக மதிக்கப்பட்டோம். அந்த அளவுக்கு எங்கள் கல்வியின் தரமும் ஒழுக்கத்தின் தரமும் உயர்வானதாக இருந்தது. எங்களுக்குப் பெருமையாகவும் இருந்தது. இந்தப் பெருமையும் புகழும், உயர்;ந்த கல்வியையும் உன்னத நல்லொழுக்கத்தையும் எங்களுக்குப் போதித்து, எங்களை நல்வழிப்படுத்திய எங்கள் ஆசிரியப் பெருந்தகைகளையும், எங்களின் உயர்வுக்குக் காரணமாகிய ஆக்கூர் ஓரியண்டல் என்னும் இந்த அற்புத நிறுவனத்தையுமே சாரும்.
எங்களுக்கு நற்கல்வியையும் நல்லொழுக்கத்தையும் போதித்த நல்லாசிரியர்களில் யாரை நாங்கள் மறக்க முடியும்? அவர்களில் சிலர் மறைந்து விட்டனர். பலர் ஓய்வு பெற்று விட்டனர். ஆனால் எங்கள் நெஞ்சங்களில் என்றென்றும் நிறைந்து வாழ்கின்றனர். அறிஞர் பெருமக்களையும் ஆன்றோர்களiயும் சான்றோர்களையும் உருவாக்கிய ஆசிரியர்களாகிய அந்த அறிவு ஜீவிகள் ஒவ்வொருவரைப்பற்றியும் ஓராயிரம் வரிகள் எழுதலாம். எவ்வளவு எழுதினாலும் அந்த நல்லாசிரியர்கள் எங்களுக்குப் போதித்த நற்கல்விக்கும் நல்லொழுக்கத்திற்கும் அவை போதுமான நன்றிக் கடன் ஆகாது. இன்றளவும் சக நண்பர்கள் ஒருவரையொருவர் சந்திக்கும் போது அந்த அறிஞர் பெருமக்களை நன்றியுடன் நினைவு கூர்கிறோம்.
பல்வேறு கால கட்டங்களிலும் எண்ணற்ற சிரமங்களுக்கு மத்தியில் விடுதி நிர்வாகத்தை திறம்பட நடத்திச் சென்ற, இறையடி சேர்ந்து விட்ட முன்னாள் தாளாளர்களின் மறுமைப் பேற்றுக்காக மனமாற இறைவனை இறைஞ்சுகிறோம். தன்னலம் கருதாது பாடுபட்ட அந்த தயாள உள்ளங்களை என்றென்றும் நினைவில் வைத்திருப்போம்.
தத்தம் இல்லங்களில் நடைபெற்ற விருந்து வைபவங்களின் போது எங்களையும் தங்கள் குடும்பத்தினர்களாக எண்ணி அத்துனை பேருக்கும் அறுசுவை விருந்தளித்து கௌரவப்படுத்திய ஆக்கூர் வாழ் மக்களை எப்படி மறக்க முடியும்? எங்களை கௌரவித்த அந்தக் கொடை வள்ளல்களை, இம்மையிலும் மறுமையிலும் இறைவன் கௌரவிப்பானாக!
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்து ஆக்கூரில் சங்கமித்தோம். காலமெல்லாம் பயன் தரும் கல்வியை திறம்படக் கற்பதில் கவனம் செலுத்தினோம். கள்ளம் கபடமில்லாமல் பழகினோம். ஒன்றாக உண்டோம், உறங்கினோம்,ஓடி விளையாடினோம். ஒருவருக்கொருவர் உதவியாய் ஒத்தாசையாய் இருந்து கவலை மறந்து காலம் கழித்தோம். பள்ளி வாழ்க்கை நிறைவடைந்த போது ஆரத்தழுவி கண்ணீர் மல்க பிரியா விடை பெற்றோம். இனி எந்த ஊரில் எந்த நாட்டில் என்று காண்போமோ?
ஆக்கூர் ஓரியண்டலில் நாங்கள் வாழ்ந்த அற்புத வாழ்க்கை 30 ஆண்டுகளுக்கு முன் நிறைவடைந்து விட்டது.ஆனால் அந்தப் பசுமையான நினைவுகள் மட்டும் பசுமரத்தாணிபோல் இன்றும் எங்கள் நெஞ்சங்களில் நீங்கா இடம் பெற்று விட்டது. ஆம் அது ஒரு பொற்காலம்.
நாங்கள் இருந்து பயின்ற வகுப்பறைகள் அதி நவீன வசதிகளுடன் கூடிய அடுக்குமாடிக் கட்டடங்களாகிவிட்டன. நாங்கள் கட்டாந்தரையில் அமர்ந்து உண்ட, ஓலை வேயப்பட்ட உணவுக் கூடம் இப்போது கண்ணைக் கவரும் உணவுக் கூடமாக மிளிர்கிறது. நெரிசலுடன் நாங்கள் தங்கியிருந்த மாணவர் விடுதி இன்று விசாலமான விடுதியாகப் பரிணமித்துள்ளது. வகுப்பறையை தொழுகைக் கூடமாக்கி நாங்கள் தொழுகை நடத்தியது அந்தக் காலம். இப்போது எழில்மிகுந்த இறையில்லம் கம்பீரமாகக் காட்சி தருகிறது. உயர் நிலைப் பள்ளியாக இருந்தது இப்போது மேல் நிலைப் பள்ளியாக உயர்வு பெற்றுள்ளது. ஆண்டுக்கு ஆண்டு எங்கள் பள்ளி அடைந்து வரும் முன்னேற்றத்தைக் கண்டு நாங்கள் பூரிப்படைகிறோம். வல்ல இறைவனுக்கு நன்றி செலுத்துகிறோம்.
இந்தக் கல்விக் கூடத்திலிருந்து உருவான எண்ணற்ற தாரகைகள் சமுதாய வானில் சுடர்விட்டுப் பிரகாசித்துக் கொண்டிருக்கின்றன. இன்னும் ஆயிரமாயிரம் அறிவு ஜீவிகளை உருவாக்க இந்த 'ஆக்கூர் ஓரியண்டல் அரபி மேல் நிலைப் பள்ளி' தன் கதவுகளைத் திறந்து வைத்துக் கொண்டு காத்திருக்கிறது.

0 comments: