3.9.07

நமது பள்ளி

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்...

ஓரியண்டல் அரபி மேல் நிலைப் பள்ளி
ஆக்கூர் 609 301 நாகை மாவட்டம்

'உங்களில் உள்ள விசுவாசிகளுக்கும் கல்வி அறிவு கொடுக்கப்பட்டோருக்கும் அல்லாஹ் பதவிகளை உயர்த்துவான்.. அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கு அறிந்தவனாக இருக்கிறான்' (திருக்குர்ஆன் 58:1)

ஆக்கூர் ஓரியண்டல் அரபி மேல் நிலைப்பள்ளி, முதன் முதலாக 25-08-1947ல் தேசப்பற்று மிக்கவரும், சுதந்திரப் போராட்ட வீரரும், மௌலானா அபுல் கலாம் ஆஸாத் மற்றும் மகாத்மா காந்தியின் கொள்கையில் பிடிப்பு கொண்டவருமான மர்ஹூம் எம்.எஸ்.எம் ஷரீப் அவர்களால் நடு நிலைப் பள்ளியாக ஆரம்பிக்கப்பட்டது. இப்பள்ளியை நிர்வகிப்பதற்காக மர்;ஹூம் எம்.எஸ்.எம் ஷரீப் அவர்கள் மௌலானா அபுல் கலாம் ஆஸாத் கிராம கமிட்டியை ஏற்படுத்தினார்கள். இந்தக் கமிட்டி சொசைட்டி ஆக்டின் படி 25-02-1955ல் Act XXI of 1860 S.No 20F 1955 எண்ணில் பதிவு செய்யப்பட்டது.

பின்பு மௌலானா அபுல் கலாம் ஆஸாத் கிராமக் கமிட்டியின் ஆலோசனைப்படி அரசு அங்கீகாரம் பெற்ற எமது பள்ளி 1955ல் அரபியை முதன் மொழியாகக் கொண்டு உலகக் கல்வியையும் இஸ்லாமிய மார்க்கக் கல்வியையும் படித்துக் கொடுக்கக் கூடிய தமிழ் நாட்டின் முதல் ஓரியண்டல் அரபி உயர் நிலைப் பள்ளியாக 1964ல் உயர்த்தப் பெற்று நிலை நிறுத்தப்பட்டது. இன்று சாதி, மத பேதமின்றி அனைத்து தரப்பைச் சேர்ந்த மாணவ மாணவியர்களுக்கும் கல்வி கற்றுக் கொடுக்கப்படுகிறது. மத நல்லிணக்கம் பயிற்று விக்கப்படுகிறது.

உலகக் கல்வியையும் இஸ்லாமிய மார்க்கக் கல்வியையும் கற்றுத் தரும் ஒரே பள்ளியாக, ஆக்கூர் ஓரியண்டல் அரபி உயர் நிலைப் பள்ளி இருந்தமையால் தமிழ் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும், பல்வேறு மாநிலங்களிலிருந்தும்,வெளி நாட்டிலிருந்தும் மாணவர்கள் ஆக்கூர் ஓரியண்டல் அரபி உயர் நிலைப் பள்ளியைத் தேடி வந்து கல்வி கற்றுச் சென்றார்கள். இன்று அவர்களில் பலர் மார்க்கப்பற்றுடன் உயர்ந்த பதிவிகளிலும் அந்தஸ்திலும் உள்ளனர்.
ஆம்பூர், புதுக்கோட்டை, விழுப்புரம்,உளுந்தூர்பேட்டை, சென்னை வண்டலூர், கும்பகோணம், கம்பம், பள்ளப்பட்டி போன்ற ஊர்களில் ஓரியண்டல் அரபிப் பள்ளிக் கூடங்கள் அமைவதற்கு நமது ஆக்கூர் ஓரியண்டல் அரபி உயர் நிலைப் பள்ளி தான் முன் மாதிரியாக அமைந்தது.

மிகக் குறைந்த மாணவர்களை மட்டும் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பள்ளி இன்றைய நிலையில் 450 மாணவ மாணவியர் படிக்கும் பள்ளியாக வளர்ச்சி அடைந்துள்ளது. சுய நிதி கல்வித் திட்டத்தின் கீழ் நமது பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக மாற்ற நிதிப் பற்றாக்குறையின் காரணமாக பல ஆண்டுகளுக்குப் பிறகே அரசு ஆணை நாள் 22-0-8-2002ல் மேல் நிலைப் பள்ளியாக உயர்த்தப்பட்டு வளர்ச்சி அடைந்துள்ளது.

நமது பள்ளில் நாட்டுப்பற்று, தேசிய ஒருமைப்பாடு, மத நல்லிணக்கம் ஆகியவைகள் போதிக்கப்படுவதுடன் இஸ்லாமிய ஒழுக்க மாண்புகளுக்கு முக்கித்துவம் கொடுக்கப்பட்டு இஸ்லாமிய மார்க்கக் கல்வி கற்றுக் கொடுக்கப்படுகிறது. மேலும் இஸ்லாமிய முறைப்படி வாழப் பயிற்சியும் அளிக்கப்படுகிறது. எமது பள்ளியில் மாணவ மணவியர்களுக்கு தனித்தனி வகுப்பறைகளில் அரபி, ஆங்கிலம், தமிழ் ஆகியவற்றுடன் திருக் குர்ஆன் ஹதீஸ் மற்றும் பிக்ஹுச் சட்டங்களும் பயிற்றுவிக்கப்படுகின்றன. மேலும் உள்ளூர் பெண்களுக்கு தினமும் காலையில் திருக்குர்ஆன் ஓதவும் அரபி எழுதவும் கற்றுத் தரப்படுகின்றது.

பள்ளி வளாகத்தில் உள்ள மாணவர் விடுதியில் 150 முஸ்லிம் மாணவர்கள் தங்கிப் படிப்பதுடன் பள்ளி வளாகத்தில் உள்ள பள்ளிவாசலில் ஐந்து வேளைத் தொழுகையும் ஜமாத்தாக தொழுதும் வருகின்றனர். 1955 ஆம் ஆண்டு முதல் ஏழை அநாதை மாணவர்கள் சுமார் 100 பேர் தனியே இப்பள்ளி நிர்வாகத்தின் கீழ் உணவு, உடை, உறையுள் ஆகியவை இஸ்லாமியக் கொடையாளிகள் மற்றும் முன்னாள் மாணவர்களிடமிருந்து பெறப்படும் நிதியைக் கொண்டு பராமரிக்கப்படுகின்றனர்;.
இப்பள்ளிக் கூடத்தின் அனைத்துக் கட்டடங்களும் (மாணவர் விடுதி, பள்ளிக் கட்டடம், பள்ளிவாசல் உட்பட) ஓட்டுக் கட்டங்களாக இருந்தன. அந்த இடங்களில் உறுதியான நிரந்தரக் கட்டடங்கள் இஸ்லாமியப் புரவலர்கள், மற்றும் முன்னாள் மாணவர்களால் அளிக்கப்பட்ட நன்கொடைகளின் மூலம் 1994 முதல் கட்டப்பட்டு வருகிறது.

1.மாணவர் விடுதி 3000 ச.அடி - 1994
2.சமையல் மற்றும் உணவுக்கூடம் 1600 ச.அடி - 1999
3. 4 வகுப்பறைகள் (கீழ் தளம்) 2800 ச.அடி - 2002
4 வகுப்பறைகள் (முதல் தளம்) 2800 ச.அடி - 2003
4 வகுப்பறைகள் (இரண்டாம் தளம்) 2800 ச.அடி - 2004
4. பரிசோதனைக் கூடம் (கீழ் தனம்) 1000 ச.அடி - 2000
பரிசோதனைக் கூடம் (முதல் தனம்) 1000 ச.அடி - 2000
5. பள்ளிவாசல் கீழ் தளம் (ஆண்கள்) 2500 ச.அடி - 2004
பள்ளிவாசல் முதல் தனம் (பெண்கள்) 2500 ச.அடி - 2005
(தற்சமயம் கட்டுமான நிலையில் உள்ளது)
6. உணவு விடுதி 800 ச.அடி - 2005
7. மாணவர் விடுதி 1000 ச.அடி - 2005
8. மாணவர் விடுதி 400 ச.அடி - 2006
9. சைக்கிள் ஸ்டாண்டு 700 ச.அடி - 2006
10. வார்டன், இமாம் ரூம்,ஸ்டோர் ரூம் 600 ச.அடி - 2007
11. 4 வகுப்பறைகள் 2800 ச.அடி - 2007
12. டோட்டார் சைக்கிள் ஸ்டாண்ட் 200 ச.அடி- 2007
--------------------------------------------------
அன்பான வேண்டுகோள்
குறைந்த மாணவர்களைக் கொண்டு துவக்கப்பட்ட நமது பள்ளியில் நடப்பு 2005-2006 ஆம் ஆண்டில் 450 மாணவ மாணவியர்கள் படிக்கும் பள்ளியாக வளர்ச்சி அடைந்துள்ளது. எதிர்காலத்தில் மேலும் வளர்ச்சி அடைய வேண்டிய நிலையில் உள்ள நமது பள்ளிக்கு நிதிப் பற்றாக்குறை ஒரு பெரும் சவாலாக உள்ளது.

நமது பள்ளியை நிர்வகிக்கும் மௌலானா அபுல் கலாம் ஆஸாத் கிராம கமிட்டிக்கு 1955 ஆம் ஆண்டு முதல் கொடையுள்ளம் கொண்ட இஸ்லாமிய மக்கள், முன்னாள் மாணவர்கள் கொடுக்கும் நிதியைக் கொண்டு நமது பள்ளி வளர்ச்சி அடைந்து வருகிறது. அல்ஹம்து லில்லாஹ் எனினும் மேலும் வளர்ச்சி அடைய வேண்டிய எமது பள்ளிக்கு போதிய நிதி ஆதாரங்கள் இல்லாததால் இஸ்லாமிய நல்லோர்களிடமிருந்து நன்கொடையாக எதிர்பார்க்கிறது.

அல்லாஹ்வுடைய பாதையில் தங்களுடைய செல்வங்களை எவர் செலவு செய்கின்றார்களோ அத்தகையோரின் உதாரணம் ஒரு தானிய விதையைப் பயிரிடுவது போன்றதாகும்.அதிலிருந்து ஏழு கதிர்கள் முளைக்கின்றன. ஒவ்வொரு கதிரும் நூறு தானிய மணிகளைக் கொண்டுள்ளது. இவ்வாறு அல்லாஹ் தான் நாடுவோருக்கு அவர்களுடைய நற்செயல்களின் பயன்களை பன்மடங்காக்குகிறான்.அல்லாஹ் மிக்க விசாலமானவன். யாவற்றையும் அறிகிறவன். (திருக்குர்ஆன் 2:261)

0 comments: