இந்திய அரசின் சிறுபான்மையினர் நல அமைச்சகம் நலிவுற்ற சிறுபான்மையினர் குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு உயர்கல்வி பயில படிப்புதவித் தொகை வழங்க இருக்கிறது. இந்த உதவித் தொகை இந்தியக் குடிமகனாக இருக்கும் சிறுபான்மையினருக்கு மட்டுமே, இந்தியாவில் இருக்கும் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்பெறும்.
மேனிலைப்பள்ளிகளில் தொழிற்கல்வி பயில எண்ணும் மாணவர்களும் இத்திட்டத்தின் மூலம் பயன் பெறலாம். இந்த உதவித் தொகை பெறுவதற்குக் குறைந்தபட்சமாகப் பள்ளியிறுதித் தேர்வில் ஐம்பது விழுக்காடு மதிப்பெண்கள் பெற்றுத் தேர்ச்சி அடைந்திருத்தல் அவசியமாகும்.
இந்தப் படிப்புதவி இந்தியாவின் சிறுபான்மையினரான முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், புத்தமதத்தினர் மற்றும் பார்சிகளுக்கு அவரவர்களின் மக்கள்தொகை விகிதாச்சாரத்திற்கேற்ப வழங்கப்படும். மொத்தப் படிப்புதவிகளில் முப்பது விழுக்காடு மாணவியருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலதிக விபரங்களுக்கும் இந்தப் படிப்புதவிக்கான விண்ணப்பத்திற்கும் இந்திய அரசின் சிறுபான்மையினர் நலவாழ்வு அமைச்சகத்தின் தளத்தை அணுகவும்.
தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மற்றும் உயர் அலுவலர்கள், மாவட்ட வாரியாக அணுகவேண்டிய அரசு அலுவலர்களின் தொலைபேசி எண்களை இந்தச் சுட்டியைச் சொடுக்கிப் பெற்றுக் கொள்ளலாம்.
இந்தப் படிப்புதவி பெறுவதற்கான விண்ணப்பங்கள் சிறுபான்மையினர் நல அமைச்சகத்தை வரும் பிப்ரவரி 10க்குள் சென்றடைய வேண்டும்.
நன்றி: சத்தியமார்க்கம்
0 comments:
Post a Comment