26.5.08

IAS தேர்வு முடிவுகள்

ஐ.ஏ.எஸ் தேர்வு முடிவுகள்
எழுதியவர்/பதிந்தவர்/உரை அபூ உமர் on Sunday, May 25th, 2008 (1 hour ago)
ஐ.ஏ.எஸ். (இந்திய ஆட்சிப் பணி), ஐ.பி.எஸ். (இந்திய பாதுகாப்புப் பணி), ஐ.எஃப்.எஸ் (இந்தியாவின் வெளிவிவகார பணி) உள்ளிட்ட அகில இந்திய அளவிலான அதிகாரிகளாக பணிபுரியக் கூடிய வேலைக்கு மத்திய அரசு தேர்வாணயம் (யு.பி.எஸ்.சி) ஆண்டு தோறும் முதல்நிலை மற்றும் மெயின் தேர்வுகளை நடத்தி வருகிறது.
இந்த வருடம் 27 முஸ்லிம்கள் ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்கள். அவர்களில் இருவர் தமிழகத்தைச் சேர்ந்த பெண்கள். தமிழ்நாடு அளவில் வெற்றி பெற்ற அனைவர்களில் சென்னையைச் சேர்ந்த முஸ்லிம் பெண் மர்யம் பர்ஸானா சாதிக் 30வது ரேங்க் எடுத்து தமிழக அளவில் முதலிடத்தில் உள்ளார். முஸ்லிம்கள் 27 பேரிலும் பர்ஸானாவே முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. தேர்ச்சி பெற்றவர்களில் கோவையை சேர்ந்த அஜிதா பேகம் மற்றொரு முஸ்லிம் பெண் ஆவார்.
மர்யம் பர்ஸானா சாதிக், முதல் முயற்சியில் முதல்நிலைத் தேர்விலேயே தோல்வி அடைந்தார். அடுத்த முறையில் மெயின் தேர்வு வரை மட்டுமே அவரால் செல்ல முடிந்தது. ஆனாலும் நம்பிக்கையை இழக்காமல் தொடர்ந்து முயற்சியில் இறங்கினார். 3-வது வாய்ப்பில் வெற்றி பெற்றுள்ளார்.
2007-ம் ஆண்டு மே மாதம் முதல்நிலைத் தேர்வு நடந்தது. இந்தியா முழுவதும் விண்ணப்பித்த 3 லட்சத்து 27 ஆயிரம் பேரில், ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 469 பேர் இந்தத் தேர்வை எழுதினார்கள். மெயின் தேர்வுக்கு 9 ஆயிரத்து 266 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அதில் 670 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். மெயின் தேர்வில் இருந்து 1,886 பேர் நேர்முகத் தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டனர். இதில் 210 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். நேர்முகத் தேர்வு டெல்லியில் உள்ள யு.பி.எஸ்.சி. அலுவலகத்தில் மார்ச் 31-ந் தேதி முதல் மே 3-ந் தேதி வரை நடந்தது.
இத்தேர்வில் அகில இந்திய அளவில் மொத்தம் 734 பேர் வெற்றிப் பெற்றுள்ளார்கள். இவர்களின் 580 பேர் ஆண்கள். 154 பேர் பெண்கள். மொத்தமுள்ள 734 பேரில் 286 பேர் பொதுப் பிரிவினர். இவர்களில் 12 பேர் உடல் ஊனமுற்றவர்கள். 266 பேர் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர். இவர்களில் 5 பேர் உடல் ஊனமுற்றோர். 128 பேர் ஆதிதிராவிடர்கள். அவர்களில் 5 பேர் உடல் ஊனமுற்றவர்கள். 54 பேர் எஸ்.சி. மற்றும் எஸ்.டி. பிரிவினர்.
இந்திய அரசின் ஆட்சிப் பணிகளில் முஸ்லிம்களின் விகிதாச்சாரம் மிகக் குறைவானதாகும். ஆட்சிப் பணிகளில் சுமார் 3 சதவீதமும், வெளி விவகார பணிகளில் 1.8 சதவீதமும் இந்திய பாதுகாப்புப் பணிகளில் 4 சதவீதம் மட்டுமே முஸ்லிம்கள். கடந்த வருடம் ஐ.ஏ.எஸ் தேர்வில் மொத்தம் தேர்ச்சி பெற்ற 474 பேரில் முஸ்லிம்கள் 17 பேர் மட்டுமே. அதாவது கடந்த வருடம் முஸ்லிம்களின் தேர்ச்சி விகிதம் 3.58 சதவீதம்.
இந்த வருடம் மொத்தம் 734 பேரில் 27 பேர் முஸ்லிம்கள். அதாவது 3.67 சதவீதமாகும். சதவீதத்தில் கடந்தை வருடத்தை ஒப்பிடும் போது அதிக மாற்றம் இல்லையென்றாலும் வளர்ச்சி இருப்பது குறிப்பிடத்தக்கது.
சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கான வழிமுறைகள்
இத்தேர்விக்கான நாள் மற்றும் விண்ணப் படிவங்கள் ஆகியவை ஒவ்வொறு ஆண்டும் டிசம்பர் மாத எம்ப்ளாய்மெண்ட் நியூஸ் பத்திரிக்கையில் வெளியாகும். இத்தேர்வுகள் முதலில் முதல்நிலைத் தேர்வு என்றும் அதைத் தொடர்ந்து மெயின் தேர்வு என்றும் அடுத்து நேர்முகத் தேர்வு என மூன்று கட்டமாக நடைபெறும். மெயின் தேர்வில் பெற்ற உச்ச மதிப்பெண்கள் அடிப்படையிலேயே நேர்முகத் தேர்வுக்காக அழைக்கப்படுவர். இதில் கவனிக்கப்பட வேண்டியது ஒருவர் தொடர்ந்தார் போல இவை அனைத்திலும் தேர்ச்சி அடைந்து செல்ல வேண்டும். உதாரணமாக ஒருவர் முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்று மெயின் தேர்வில் தோல்வி அடைவாரேயானால் மீண்டும் அவர் முதல்நிலைத் தேர்விலிருந்து தொடர வேண்டும்.
இறுதியாக அவர்கள் பெற்ற மதிப்பெண்கள், தனித் திறமைகள் மற்றும் உடல் ரீதியான கட்டமைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் மேற்கண்ட துறைகளில் அமர்த்தப்படுவார்கள்.
கல்வித் தகுதி
அங்கீகரிக்கப்பட்ட பல்கழைக்கழகத்தின் மூலமோ, அல்லது அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது கல்வி நிறுவனத்தின் மூலமோ அல்லது UGC Act 1956 ஆணையின் கீழ் அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தின் மூலமோ பட்டம் பெற்றிருத்தல் அல்லது அதற்கு இணையான கல்விச் சான்றிதழைப் பெற்றிருத்தல்.
பட்டப் படிப்பு இறுதியாண்டு தேர்வு எழுதி முடிவுக்காகக் காத்திருப்பவர்களும் முதல்நிலைத் தேர்வில் கலந்து கொள்ளலாம். ஆனால் அவர்கள் மெயின் தேர்வு எழுதச் செல்லும் போது அவர்களின் தேர்ச்சி பெற்ற கல்விச் சான்றிதழ்களின் நகல்களை சமர்பிக்க வேண்டும்.
விதிவிலக்காக அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலம் கலந்து கொள்ள அனுமதிச் சான்றிதழ் பெற்றவர்களும் இதில் பங்கு கொள்ளலாம்.
பட்டப்படிப்புகளுக்கு இணையான இதர டிப்ளமோ சான்றிதழ்கள் பெற்றவர்களும் இதில் அனுமதிக்கப்படுவர்.
MBBS இறுதியாண்டு தேர்ச்சி பெற்றவர்களும், அல்லது அதற்கு இணையான மருத்துவப் படிப்பு சான்றிதழ் பெற்றவர்களும் கலந்து கொள்ளலாம். இதில் இறுதியாண்டின் தேர்வு முடிவுகளுக்காக காத்திருப்பவர்களும் முதல்நிலைத் தேர்வில் கலந்து கொள்ளலாம்.
- செய்தித் தொகுப்பு: அபூ உமர்
ஐ.ஏ.எஸ். தேர்வு எழுத முதலில் தன்னம்பிக்கை வேண்டும். நல்ல வழிகாட்டுதல் தேவை. அத்துடன் ஒரே மனதுடன் திட்டமிட்டு படிக்க வேண்டும். அப்படி படித்தால் யார் வேண்டுமானாலும் இந்த தேர்வில் வெற்றி பெற்று விடலாம். கலெக்டர் ஆக வேண்டும் என்பது எனது சிறுவயது ஆசை. ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு பொது அறிவுதான் அடிப்படை தேவை. இதற்காக டி.வி.யில் செய்தியை தவறாமல் கேட்பேன்.
-மர்யம் பர்ஸானா சாதிக்
நன்றி: இஸ்லாம் கல்வி டாட்கம்

0 comments: