27.9.08

சிறுபான்மை கல்வி உதவித்தொகை பெற......


சிறுபான்மை இனத்தை சேர்ந்த மாணவர்கள் கல்வி உதவி தொகை பெற வருமான சான்றிதழ் தேவை இல்லைஉத்தரவிட்ட கருணாநிதிக்கு இஸ்லாமிய இலக்கிய கழகம், சிறுபான்மை ஆணையம் நன்றி
சென்னை, செப்.27-
பள்ளி- கல்லூரிகளில் படிக்கும் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையின மாணவர்கள் மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற அதிகாரிகள் அளிக்கும் வருமான சான்றிதழ் தேவை இல்லை என்று உத்தரவிட்ட முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு இஸ்லாமிய இலக்கிய கழகம், சிறுபான்மை ஆணையம் நன்றி தெரிவித்தன.
கல்வி உதவித்தொகை
பள்ளி மற்றும் கல்லூரிகளில் (தொழில் கல்வி உள்பட) படிக்கும் கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினத்தை சேர்ந்த மாணவ- மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்க மத்திய அரசு ஆணையிட்டது.
இந்த மாணவர்கள் ஆண்டு இறுதி தேர்வுகளில் 50 சதவீத மார்க்கு எடுத்து இருக்கவேண்டும். 1-வது வகுப்பு முதல் 10-வது வகுப்பு வரை உள்ள மாணவர்கள் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்குள் இருக்கவேண்டும். இறுதி தேர்வில் 50 சதவீத மார்க்கு எடுத்து இருக்கவேண்டும். ஐ.டி.ஐ. படிக்கும் மாணவர்களின் பெற்றோர் வருமானம் ரூ.2 லட்சத்திற்குள் இருக்கவேண்டும். தொழில்கல்வி மற்றும் தொழில் நுட்ப கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் வருமானம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்திற்குள் இருக்கவேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.
கருணாநிதி உத்தரவு
இந்த உத்தரவுப்படி வருவாய் அலுவலரின் சான்றிதழ், நோட்டரி பப்ளிக் சான்றிதழ் ஆகியவை தேவைப்பட்டது. இதனால் மாணவர்கள் சிரமத்திற்குள்ளானார்கள். எனவே அந்த சான்றிதழ்கள் இல்லாமல் உதவித்தொகை வழங்க ஏற்பாடு செய்யவேண்டும் என்று இஸ்லாமிய இலக்கிய கழக நிர்வாகிகள் முதல்-அமைச்சர் கருணாநிதியை சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.
அதை அந்த நேரமே ஏற்று உடனடியாக சான்றிதழ் இல்லாமல் வழங்க கருணாநிதி உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில் சிறுபான்மையினத்தவர் என்பதற்கான சாதி பற்றிய விவரங்கள் ரூ.10 மதிப்புள்ள கோர்ட்டு சாரா முத்திரை தாளில் எழுதி பெற்றோர் அல்லது பாதுகாவலர் உறுதி மொழி சுய கையொப்பம் இட்டு சமர்ப்பித்தால் போதும். நோட்டரி பப்ளிக் கையொப்பம் தேவை இல்லை, வருவாய் அலுவலரிடம் இருந்து சான்று பெறத்தேவை இல்லை. வருமான அதிகாரியிடம் இருந்து வருமான சான்று பெற்று தரவேண்டியதில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்ல இது குறித்து அனைத்து பள்ளி மற்றும் கல்வி நிறுவன அதிகாரிகளுக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
நன்றி
முதல் அமைச்சரை சந்தித்த இஸ்லாமிய இலக்கிய கழக சிறப்பு நெறியாளர் கவிஞர் அப்துல் ரகுமான், தலைவர் கேப்டன் என்.ஏ.அமீர் அலி, பொதுசெயலாளர் எஸ்.எம்.இதயதுல்லா, துணைத்தலைவர் பிரசிடெண்ட் அபுபக்கர் மற்றும் பொருளாளர் எஸ்.எஸ்.ஷாஜகான், தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய தலைவர் பாதிரியார் வின்சென்ட் சின்னத்துரை ஆகியோர் முதல் அமைச்சர் கருணாநிதிக்கு நன்றி தெரிவித்து நிருபர்களிடம் கூறியதாவது:-
ரம்ஜான் பரிசு
கடந்த ஆண்டு ரம்ஜான் பரிசாக இஸ்லாமிய மக்களுக்கு 3.5 சதவீத இட ஒதுக்கீட்டையும், இந்த ஆண்டு ரம்ஜான் பரிசாக சிறுபான்மை மாணவர்களுக்கு உதவித்தொகை பெற எளிமைப்படுத்தி உத்தரவிட்டு எங்களை மனநிறைவு ஏற்படுத்தியதற்கு நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
பல மாநிலங்கள் சிறுபான்மை மாணவர்களின் உதவித்தொகைக்கு ஒதுக்கிய தொகையை செலவழிப்பதில்லை. கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிளஸ்-2 மாணவர்களும், 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட கல்லூரி மாணவர்களும் பயன் அடைந்தனர்.
ஆனால் இந்த வருடம் தமிழ்நாட்டில் ஏராளமான மாணவர்கள் விண்ணப்பிக்க உள்ளனர். எனவே பிற மாநிலங்களில் பயன்படுத்தாத தொகையை தமிழ்நாட்டுக்கு திருப்பும் படி மத்திய அரசுக்கு கருணாநிதி கடிதம் அனுப்ப வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

http://www.dailythanthi.com/article.asp?NewsID=441006&disdate=9/27/2008
நன்றி:

imantimes@googlegroups.com on behalf of Muduvai Hidayath

0 comments: