சென்னை: பொறியியல் கல்வியில் சேருவதற்கான குறைந்தபட்ச பிளஸ் 2 தகுதி மதிப்பெண் வரம்பை தமிழக அரசு குறைத்துள்ளது.சட்டசபையில் உயர்கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து அமைச்சர் பொன்முடி கூறியதாவது:பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கு ஏற்கெனவே நுழைத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதனால் ஆயிரக்கணக்கான கிராமப்புற மாணவர்கள் பொறியியல் கல்வியில் சேர்ந்து படிக்கும் அரிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.ஆனாலும் கடந்த 2006-07 கல்வியாண்டில் மாணவர்கள் சேராததால் 19,652 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் காலியாக இருந்தன. இதேபோல் 2007-08ல் 14,721 இடங்கள் காலியாக இருந்தன.இந்த ஆண்டு அரசு மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று தெரிகிறது. இந் நிலையில் பொறியியல் கல்லூரிகளில் இடங்கள் காலியாக இருப்பதை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதன்படி இந்தாண்டு முதல் பொறியியல் கல்வியில் சேருவதற்கான குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்ணை குறைக்க அரசு முடிவெடுத்துள்ளது.பிளஸ் 2 தேர்வில் குறைந்தபட்சமாக பொதுப்பிரிவினர் பெறவேண்டிய மதிப்பெண்களான 60 சதவீதம் 55 சதவீதகமாகக் குறைக்கப்படுகிறது.பிற்படுத்தப்பட்டோருக்கு 55 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாகவும், மிகவும் பிற்பட்ட மற்றும் சீர் மரபினருக்கு 50 சதவீதத்தில் இருந்து 45 சதவீதமாகவும் குறைக்கப்படுகிறது.ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் பள்ளி இறுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டும் போதுமானது.இதன்மூலம் அதிக அளவில் மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளில் சேர வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றார் பொன்முடி.
நன்றி: Oneindia
0 comments:
Post a Comment