31.12.08

10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவனை

இந்த (2008-2009) கல்வி ஆண்டுக்கான 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்புக்களுக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது
கீழ்க்காணும் சுட்டிகளைச் சொடுக்கி பார்வையிடவும்

28.12.08

"சிகரத்தை வெல்வோம்' நிகழ்ச்சி: 10, 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம்

திருநெல்வேலி, டிச. 26: திருநெல்வேலியில் 3-வது ஆண்டாக தினமணி, ஸ்காட் குழும கல்வி நிறுவனங்கள் இணைந்து நடத்தும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான "சிகரத்தை வெல்வோம்' என்ற வழிகாட்டி நிகழ்ச்சி வரும் ஜன. 2-ம் தேதி நடைபெற உள்ளது.
அரசுப் பொதுத்தேர்வு எழுத உள்ள 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு நல்லதொரு ஆலோசனை வழங்கும் வகையில் ஆண்டுதோறும் பல மாவட்டங்களில் தினமணி சார்பில் "சிகரத்தை வெல்வோம்' என்ற மாணவர் வழிகாட்டி நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. மாணவர்கள் தேர்வுக்குத் தயாராவது, பாடங்களை சிரமமின்றிப் படிப்பது, தேர்வுக் காலத்தில் உடல்நிலையைப் பாதுகாப்பது, தேர்வுக் கூடத்தில் நேரத்தை திட்டமிட்டுப் பயன்படுத்துவது, அதிகமான மதிப்பெண்கள் பெறுவதற்கேற்ப கேள்விகளைத் தேர்ந்தெடுத்து எழுதும் முறை, கேள்விக்கான பதில்களை சிறப்பான முறையில் எழுதுவதற்கான உத்திகள் போன்றவை இந் நிகழ்ச்சியில் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களால் விளக்கப்படும்.
வண்ணார்பேட்டையில் உள்ள பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியில் ஜன. 2-ம் தேதி காலை 9.30 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1.30 மணி வரை நடைபெறும் இந் நிகழ்ச்சியில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் கலந்துகொள்ளலாம். கட்டணம் எதுவும் கிடையாது.
தொடக்க விழா:
இந் நிகழ்ச்சியின் தொடக்க விழாவுக்கு, தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன் தலைமை வகித்துப் பேசுவார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சி. சசிகலா, ஸ்காட் குழும கல்வி நிறுவனங்களின் தலைவர் முனைவர் கிளீட்டஸ்பாபு, பதிவாளர் பேராசிரியர் பொ. செல்லத்துரை ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். நிகழ்ச்சியைத் தொடக்கிவைத்து நெல்லை கண்ணன் பேசுவார்.
நிகழ்ச்சியின் நோக்கம் குறித்து தூய யோவான் கல்லூரி இயற்பியல் துறைப் பேராசிரியர் ஜான் கென்னடி பேசுவார். திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சு. காளியப்பன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசுவார்.
நிகழ்ச்சியில் பங்கேற்கும் மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக ஆலோசனை கையேடும், குறிப்பெடுத்துக் கொள்ள நோட்டும், பேனாவும் வழங்கப்படும். நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புவோரும், பள்ளி நிர்வாகிகளும் மேலும் விவரங்களுக்கு
92443 17205,
92443 17203
என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
நன்றி: இந்தியன் முஸ்லிம் அசோசியேஷன் துபாய்

27.12.08

ஆராய்ச்சியாளர்களாகும் அண்ணா பல்கலை. மாணவர்கள்!

ஆராய்ச்சியாளர்களாகும் அண்ணா பல்கலை. மாணவர்கள்!
கோவை, டிச. 25: வரும் 2010-ம் ஆண்டு முதல் அண்ணா பல்கலை.யில் பயிலும் மாணவர்கள் அனைவரும் "ஆய்வாளர்கள்' என்றே அழைக்கப்படுவர்.
மாறிவரும் வர்த்தக சூழலில் சர்வதேச நிதி நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளில் கோவை, திருப்பூரை சேர்ந்த நிறுவனங்கள் சிக்கித் தவிக்கின்றன. வர்த்தகத்தில் எதிர்நோக்கும் பிரச்னையை சமாளிக்க தொழில் துறையினருக்கு வல்லுநர்களின் ஆலோசனை தேவைப்படுகிறது. இத்தகைய ஆலோசனையை வழங்கும் அரும்பணியை கோவை அண்ணா பல்கலை.யில் பயிலும் மாணவர்கள் செய்து வருகின்றனர்.
இதற்காக பல தொழில் நிறுவனங்களுடன் ஏற்கனவே புரிந்துணர்வு ஒப்பந்தங்களை அண்ணா பல்கலை. செய்துள்ளது. மேலும், பல நிறுவனங்களுடன் இத்தகைய ஒப்பந்தங்களை ஏற்படுத்தும் முயற்சியிலும் அண்ணா பல்கலை. ஈடுபட்டுள்ளது.
இதுகுறித்து அண்ணா பல்கலை. துணைவேந்தர் ஆர்.ராதாகிருஷ்ணன் கூறியது: வரும் 2009-ம் ஆண்டு மார்ச் மாதம், தொழில் துறையினருக்கு ஆலோசனை வழங்கும் மையம் அண்ணா பல்கலை. வளாகத்திலேயே அமைக்கப்படும். இந்த மையத்தில் இளநிலை, முதுநிலை, ஆராய்ச்சி மாணவர்கள் உறுப்பினர்களாக இருப்பர். அண்ணா பல்கலை.யை அணுகும் நிறுவனங்களுக்கு வர்த்தகத்தை மேம்படுத்துவதை குறித்தும், மாறிவரும் சூழலை சமாளிப்பது குறித்தும் மாணவர்கள் ஆலோசனை வழங்குவர். தொழில் துறையினருக்கு அறிவு பூர்வமான ஆலோசனைகளை வழங்கும் அனைத்து மாணவர்களும் ஆராய்ச்சியாளர்களாகவே கருதப்படுவர்.
இத் திட்டத்தின் ஒரு பகுதியாக அனைத்து மாணவர்களுக்கு இ-மெயில் முகவரி அளிக்கப்பட்டுள்ளது. பாடத் திட்டம் உள்பட பல்கலை. தெரிவிக்கும் அனைத்து தகவலும் இ-மெயில் மூலமே அனுப்பப்படும்.
அண்ணா பல்கலை.யின் கீழ் செயல்படும் அனைத்து நிறுவனங்களும் கணினி வலை மூலம் இணைக்கப்படும். தொழில் துறை நிபுணர்களின் உரையை விடியோ கான்பிரன்ஸ் மூலம் மற்ற கல்லூரி மாணவர்களும் நேரடியாக பார்க்கத் தேவையான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
நானோ தொழில் நுட்பம், எலக்ட்ரானிக் கழிவு மேலாண்மை, திடக் கழிவு மேலாண்மை, மரபு சாரா எரிசக்தி ஆகிய துறைகளில் ஆராய்ச்சி செய்ய புதிய மையங்கள் ஏற்படுத்தப்படும் என்றார்.
நன்றி்: இந்தியன் முஸ்லிம் அசோசியேஷன் துபாய்

26.12.08

10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தேதி அறிவிப்பு

மார்ச் 2 பிளஸ்டூ, 25ம் தேதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் தொடக்கம்
மார்ச் 2 பிளஸ்டூ, 25ம் தேதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் தொடக்கம்வெள்ளிக்கிழமை, டிசம்பர் 26, 2008, 18:00 [IST] சென்னை: அடுத்த ஆண்டு மார்ச் 2ம் தேதி பிளஸ்டூ பொதுத் தேர்வ தொடங்குகிறது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 25ம் தேதி தொடங்குகிறது.ஆண்டு தோறும் நடைபெறும் எஸ்.எஸ்.எல்.சி மற்றும் பிளஸ்டூ பொதுத் தேர்வுகளுக்கான தேதியை தமிழக அரசின் தேர்வுகள் இயக்குநரகம் இன்று அறிவித்தது. தேர்வுகள் இயக்குநரக இயக்குநர் வசந்தி ஜீவானந்தம் தேர்வுகள் தொடங்கும் தேதியை அறிவித்தார்.அதன்படி 2009ம் ஆண்டு, மார்ச் 2ம் தேதி பிளஸ்டூ தேர்வுகள் தொடங்குகின்றன. மார்ச் 23ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும்.

23.12.08

தமிழகத்தின் பொறியில் கல்லூரிகள்

+2 முடித்த பின் மாணவர்கள் மேற்கொண்டு என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? என்பது பற்றி சிந்திக்கத் தொடங்கிவிட்டனர். பெற்றோரும் அதற்கான முயற்சிகளில் இப்போதே இறங்கத் தொடங்கி விட்டனர்.
பொறியியல் கல்வியில் அதிகமானோர் நாட்டம் கொண்டிருப்பதைக் காண்கிறோம். அதற்காக தமிழகத்தில் உள்ள பொறியியற் கல்லூரிகளைப் பற்றிய முழு விபரங்கள் அறிய கீழ்க்காணும் சுட்டியை சொடுக்கவும்

21.12.08

இந்திய அரசு வழங்கும் கல்வி உதவித் தொகை


முக்கிய அறிவிப்பு இந்திய அரசு வழங்கும் கல்வி உதவி தொகை ( ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை)
இந்திய அரசு வழங்கும் கல்வி உதவி தொகை ( ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை) விண்ணப்பத்தை 30 - 6 -2008 ஆம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும் விண்ணப்பத்தை http://minorityaffairs.gov.in/newsite/schemes/prematric/prematric.htm
இந்த இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளவும் .
பதிப்பு பரங்கிப்பேட்டை நண்பர்கள்
நன்றி: பரங்கிப்பேட்டை வலைப்பூ


16.12.08

என் அன்பிற்கினிய ஆசான்

இக்கட்டுரை நம் பள்ளி தொடர்புடையதல்ல என்றாலும் நம் பள்ளியைப் போன்று புகழ் பெற்ற கிரஸன்ட் பள்ளி தொடர்புடையது. அப்பள்ளியின் முன்னாள் மாணவர் அப்துல் கையூம் அவர்கள் தமது அன்பிற்கின ஆசானை அன்புடன் நினைவு கூர்ந்துள்ளார். நம் பள்ளி முன்னாள் மாணவர்களும் இது போல் நமது ஆசான்களை நினைவு கூரலாமே!

Crescent Residential School - First Batch

“அருளன்பு பண்பில் அளவற்ற உந்தன்
திருநாமம் போற்றி துவக்குகின்றேன் அல்லாஹ்”

திருவிதாங்கோடு ஈந்த தீந்தமிழ்ப் பாவலனை என் ஆசான் என்று கூறிக்கொள்வதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. காட்டாற்று வெள்ளமென பெருக்கெடுத்து வரும் அவரது கன்னித்தமிழை நாள் முழுவதும் கேட்டுக் கொண்டே இருக்கலாம். “தமிழுக்கு அமுதென்று பேர்” என்ற பாவேந்தனின் பாடலை மெய்ப்பிக்கும் வகையில் அவரது தீந்தமிழ்ப்பேச்சில் தேன்பாகு போன்ற ஒரு இனிமை கலந்திருக்கும்.

இன்று ஒரு மாபெரும் கல்வி நிறுவனமாக கிளைகள் படர்ந்து வண்டலூரில் இயங்கி வரும் கிரசென்ட் பள்ளியின் வரலாற்றுப் பின்னணியை இங்கே நினைவு கூறுவது அவசியம்.
1969-ஆம் ஆண்டு என்னையும் சேர்த்து 19 மாணவர்களின் எண்ணிக்கையுடன் துவங்கப்பட்ட பள்ளி அது. பிறைப்பள்ளியிலிருந்து புறப்பட்ட முதல் அணிவகுப்பு நாங்கள். சென்னை சேத்துப்பட்டு பகுதியில் ஹாரிங்டன் சாலையில் “நமாஸி வில்லா” என்ற வாடகை வீட்டில்தான் இந்த சுடர்மிகு விடியல் துவங்கியது. ‘காயிதே ஆஸம்’ முஹம்மது அலி ஜின்னா, அல்லாமா இக்பால் போன்ற பெருந்தலைவர்கள் தங்கிச் சென்ற ஒரு பணக்கார குடும்பத்தின் இல்லம் அது.

பேராசிரியர் இறையருட் கவிமணி கா.அப்துல் கபூர் என்ற ஒரு மாமனிதரை எங்கள் பள்ளிக்கு முதல்வராக பெற்றது நாங்கள் செய்த அரும்பெரும் பேறு என்றுதான் கூற வேண்டும். அந்த இல்லத்தில் ஒரு பகுதியில்தான் பேராசிரியரின் குடித்தனம். தன் அன்புத்துணைவியார் மற்றும் அருமை மைந்தன் ஜமால் முகம்மதுடன் வசித்து வந்தனர். அந்த அம்மையாரின் கைப்பக்குவத்தில் தயாராகும் அறுசுவை பண்டங்களை பலமுறை சுவைபார்த்த பாக்கியம் என் நாவுக்குண்டு.

ஆறாம் வகுப்பு முதல் மெட்ரிக் வரை - ஆறு ஆண்டுகள் - அந்த மனிதருள் மாணிக்கத்தின் அரவணைப்பில் நாங்கள் வளர்ந்தோம். அது ஒரு குருகுல வாசம் போன்ற அமைப்பு. இருபத்து நான்கு மணிநேரமும் ஒரு தமிழ்க்கடலின் அருகாமையில் இருந்துக்கொண்டு தமிழ்ச்சுவையை பருகிய அனுபவங்களை எழுத்தினில் வடிக்க இயலாது. அரிய மார்க்க ஞானங்களை அவரிடமிருந்து நாங்கள் பெற முடிந்தது.

ஒருமுறை “கவிஞராக” என்ற ஒரு நூலை எனக்கு அவர்கள் பரிசளித்து மரபுக்கவிதை எழுத ஊக்குவித்தார்கள். கவிதை வரிகளைக் கொடுத்து ‘நேரசை’ ‘நிறையசை’ பிரிப்பது எவ்வாறு, ‘தேமா’, ‘புளிமா’ எங்ஙனம் கண்டறிவது என்று பயிற்சி அளிப்பார்கள்.

பேராசிரியரின் சந்தம் கமழும் பேச்சும், எழுத்தும் என்னுள் தமிழார்வத்தை மென்மேலும் தூண்டி விட்டது. கவிஞர் கண்ணதாசனின் தலைமையில் கவியரங்கம் ஒன்றினை எங்கள் பள்ளியில் ஏற்பாடு செய்திருந்தனர். ‘அழுகை’ என்ற தலைப்பில் “மலையழுதால் நதியாகும்; மனமழுதால் கவியாகும்” என்று தொடங்கி “ஈன்ற பொழுதில் தாயழுத கண்ணீரே நாமாகும்” என்று முடிவுறும் என் கவிதையை கவியரசும், பேராசிரியரும் வெகுவாக ரசித்து பாராட்டினார்கள்.

அதே பள்ளியில் தமிழாசிரியராக இருந்து எங்களை ஊக்குவித்த மற்றொரு ஆசான் புலவர் நாஞ்சில் ஷா அவர்கள். ‘நபிகள் நாயகம் பிள்ளைத் தமிழ்’ என்ற நூலை வழங்கியவர். நாஞ்சில் ஷாவின் மாண்பினை கவியரசு கண்ணதாசன் இவ்வாறு புகழ்ந்தார்.

“நாஞ்சில் ஷா காட்டுகின்ற
நல்ல நபி நாயகத்தை
வாஞ்சையுடன் பார்த்தபின்னர்
மற்றவற்றைக் கற்பதற்குக்
கடைகடையாய் ஏறிக்
கால்வலிக்க நான் நடந்தேன்;

எத்தனையோ அற்புதங்கள்
எத்தனையோ அதிசயங்கள்
அன்னை ஆமினா
அளித்தமகன் வாழ்க்கையிலே!”

இவ்விரண்டு நாஞ்சில் நாட்டு நற்றமிழ் நாவலர்களின் நாவாற்றலில் நான் நனைந்து மகிழ்ந்த நாட்களை நினைவு கூறுகையில் என் நெஞ்சமெலாம் தேனாய் இனிக்கும்.

கல்லூரி முதல்வர் பதவியை துறந்து விட்டு எங்களைப் போன்ற பிஞ்சு மாணவர்களுக்கு பாடம் நடத்த வந்த பேராசிரியரை “பிழைக்கத் தெரியாத மனிதர்” என்றே பலரும் விமர்சித்தனர். அதை அவர் ஒரு பதவி இறக்கமாகவே கருதவில்லை. அதற்கு மாறாக எதிர்கால நட்சத்திரங்களை உருவாக்கும் முயற்சியில் முனைப்பாகச் செயல்பட்டார்.

“உயர்ந்த மலையின் உச்சிப் பனியாய்
அமர்ந்த பதவியை அர்ப்பணித்து விட்டுப்
பள்ளம் நோக்கிப் பாய்ந்த வெள்ளம்
இறையருட் கவிமணி உள்ளம் !

அதனாலேதான் ..
கல்லூரி முதல்வர் பதவியைத் துறந்து
அரும்பு நிலாக்களை அரவணைப்பதற்கென
பிறைப்பள்ளியின் முதல்வர் பொறுப்பை
நிறைவுடன் ஏற்று நடத்திக் காட்டினார்.”

பேராசிரியரின் மனோபாவத்தை அறிந்து மனதாரப் புகழ்ந்த அவரது ஆத்மார்த்த ரசிகர் கபூர்தாசனின் வரிகள் இவை. இதனை எழுதிய கவிஞருக்கும் பேராசிரியருக்கும் ஏற்பட்ட ஒரு தெய்வீக நட்பை இங்கே விவரித்தே ஆக வேண்டும். இலக்கிய ஏட்டில் பதிவு செய்யப்பட வேண்டிய சுவையான நிகழ்வு இது. கபிலர் பிசிராந்தையாருக்கிடையே இருந்த நட்புக்கும், ஒளவையார் அதியமானுக்கிடையே இருந்த நட்புக்கும் இணையானது இந்த இலக்கிய பிணைப்பு,

பள்ளி அரையாண்டு விடுமுறையின்போது நான் என் சொந்த ஊர் நாகூர் புறப்பட்டுக் கொண்டிருந்தேன். அப்பொழுது பேராசிரியர் என்னை அழைத்தார்கள். அவர்கள் வசம் கத்தை கத்தையாக கடிதங்கள் இருந்தன. பேராசிரியரின் கவிநடையில் காதல் ஏற்பட்டு மனதைப் பறிகொடுத்த ஒரு ரசிகரின் மடல்கள் அது. பேராசிரியரின் சொல்வண்ணத்தில் சொக்கிப்போய் மதுவுண்ட வண்டாய் ரீங்காரமிடும் கவிநயம் சிந்தும் காதல் கடிதங்கள் அவை. நாளடைவில் இந்த இலக்கியக் காதல் முற்றிப்போய் தன் இயற்பெயரை மாற்றி “கபூர் தாசன்” என்று மாற்றி கொண்டார் அந்த ரசிகர்.

“தம்பி! நீ உன் ஊருக்கு அருகாமையிலிருக்கும் காரைக்காலுக்குச் சென்று இந்த முகவரியில் இருக்கும் நபரைச் சென்று சந்தித்து வா!” என்று என்னை பணித்தார்கள். நான் நேரில் சென்று விசாரித்தபோது அந்த வாசகரின் இயற்பெயர் செ.மு.வாப்பு மரைக்காயர் என்று தெரிய வந்தது. நான் கபூர் சாகிப்பிடமிருந்து வந்திருக்கும் மாணவன் என்று என்னை அறிமுகம் செய்தபோது அவர் முகத்தில் ஏற்பட்ட பூரிப்பை பார்க்க வேண்டுமே! தன் ஆத்மார்த்த நாயகனிடமிருந்து வந்த தூதுவனாக என்னைக் கண்ட மாத்திரத்திலேயே உணர்ச்சிவசப்பட்டுப் போனார். பேராசிரியரின் உடல்நலம் குறித்து விசாரித்து அவரது சொல்லாற்றலைப் புகழ்ந்து மணிக்கணக்காக பேச ஆரம்பித்து விட்டார். பாரதிக்கு ஒரு தாசன் பாரதிதாசனைப் போன்று, அந்த பாரதிதாசனுக்கும் ஒரு தாசன் சுப்பு ரத்தின தாசன் (சுரதா) போன்று இந்த கபூர்தாசனின் குருபக்தி கண்டு வியந்துப் போனேன்.

பிறைப்பள்ளியில் எங்களுக்கு தமிழ் பாட வகுப்பு முதல்வரே நடத்துவார். தமிழ் வகுப்பு என்றாலே எங்களது உற்சாகம் பன்மடங்காகும். அந்த கம்பீரத் தோற்றம், அடுக்குத் தொடரில் அதறும் தொனி, அடலேறு போன்ற ஒரு மிடுக்கு, கடல் மடை திறந்தாற்போல் ஊற்றெடுக்கும் அந்த அருந்தமிழ் நடை, கேட்போரை கிறுகிறுக்க வைக்கும்.

“அடையா நெடுங்கதவும் அஞ்சலென்ற சொல்லும்
உடையான் சடையன்” - என்று சடையப்ப வள்ளலைப் புகழும்போதும்

“உமறு குமுறிடில் அண்ட முகடும் படீரென்னும்
உள்ளச்சம் வையும் பிள்ளாய்” - என்ற உமறுப் புலவரின் உரையை அழுத்தம் திருத்தமாக எடுத்துரைக்கும் போதும் சிங்கத்தின் கர்ஜனையை கேட்பது போலிருக்கும்.

தபலா அதிர்வு போலத்
தாளம் பிசகாக் கதியில்
சபையில் ஒலிக்கும் பேச்சில் – கபூர்
சந்தனம் கமழச் செய்வார் - என்று பொருத்தமாகப் பாடுவார் கவிஞர் ஈரோடு தமிழன்பன்

“செந்தமிழுக்கு ஒரு சேதுப்பிள்ளை” என்பதைப்போல் “அழகுத் தமிழுக்கு ஓர் அப்துல் கபூர்” என்று பேராசிரியரின் பெருமையை பறைசாற்றுவோர் உண்டு. பேராசிரியரைப் பற்றி குறிப்பிடுகையில் கவிஞர் மு.மேத்தா இப்படிக் கூறுவார் :

“திகழும் அவர் கவிதையில் தேமா, புளிமா!
ஆனால் அப்துல் கபூரோ
ஆமா எவர்க்கும் போடாத அரிமா!

எங்கள் முதல்வர் எழுதி நாங்கள் தினமும் இறைவணக்கப் பாடலாக பாடிக் கொண்டிருந்த “ஹஸ்பி ரப்பி ஜல்லல்லாஹ்” என்ற பாடலை இசைத்தட்டாக வெளியிடும் நாட்டம் வந்தது. நாகூர் ஹனீபா அவர்கள் ஐந்து மாணவர்களைத் அவர்களுடன் சேர்ந்து சேரிசை (‘கோரஸ்’) பாட தேர்ந்தெடுத்தார்கள். அந்த ஐந்து மாணவர்களில் நானும் ஒருவன் என்பது எனக்கு பெருமையைச் சேர்த்தது. “ஹிஸ் மாஸ்டர்ஸ் வாய்ஸ்” பதிவரங்கத்தில் ஐந்து மணிநேரத்துக்கும் மேலாக ஒலிப்பதிவு நடந்துக் கொண்டிருந்தது.

“இம்மை வாழ்வின் சோதனையில்
இதயப் பொறுமை தந்திடுவாய் !
வெம்மை நெருப்பை விட்டெம்மை
விலக்கித் தடுத்துக் காத்திடுவாய் !
செம்மை பொழியும் சுவனத்தின்
செழிக்கும் இன்பம் ஈந்திடுவாய் !
எம்மை நல்லோர் நற்குழுவில்
என்றும் சேர்ப்பாய் இனியோனே !”

என்று அந்த வெண்கலக் குரலோன் இசைமுரசு இசைக்க நாங்களும் சேர்ந்து பாடினோம். இவ்வரிகளின் கருத்தாழத்தை செவிமடுத்த இந்து மதத்தைச் சார்ந்த இசையமைப்பாளரின் கண்கள் பனித்து விட்டன. “எத்தனை சக்தி வாய்ந்த வார்த்தைகள் இவைகள்?” என்று செயலிழந்துப் போனார்.

தமிழக கல்லூரி வரலாற்றிலேயே முதன் முதலாக ஒரு தமிழ்ப் பேராசிரியர் கல்லூரி பேராசிரியராக பணி ஏற்றது கபூர் சாகிப்தான். உருது மொழியில் நடைபெறும் “முஷாயிரா” போன்று தமிழ்மொழியில் “கவியரங்கம்” என்ற பெயரில் இன்று நாடெங்கும் நடைபெறும் வழக்கத்தை வாணியம்பாடியில் முதன் முதலில் அறிமுகம் செய்த பெருமையும் அவர்களைத்தான் சாரும்.

தமிழில் உரை அலங்காரத்திற்கும், நடை அலங்காரத்திற்கும் புகழ் பெற்றவர் அறிஞர் அண்ணா. பேராசிரியர் எழுதிய ‘இலக்கியம் ஈந்த தமிழ்’ என்ற நூலின் முதற்கட்டுரையை அதில் காணப்பட்ட செந்தமிழ் நடைக்குவேண்டி தன் “திராவிட நாடு” பத்திரிக்கையில் வெளியிட்டு பாராட்டி மகிழ்ந்தார்.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருந்தபோது நாவலர் இரா. நெடுஞ்செழியன், பேராசிரியர் க. அன்பழகன், மதியழகன் ஆகியோருடன் ஏற்பட்ட நெருக்கம் பிற்காலத்தில் ‘எங்கும் தமிழ்; எதிலும் தமிழ்’ என்று தமிழ் மறுமலர்ச்சி பூண்டபோது அவர்களை நாடறிந்த நற்றமிழ் பேச்சாளராக தமிழ்கூறும் நல்லுலகத்திற்கு அடையாளம் காண்பித்தது. கழகத் தலைவர்களில் ஒருவரான சாதிக்பாட்சா பேராசிரியரின் மாணவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

இறையருட் கவிமணி அவர்கள் பன்மொழியில் புலமை பெற்றிருந்தார்கள். தமிழ், மலையாளம், அரபி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் அவர்கள் அடைந்திருந்த திறன் அளவிடற்கரியது. தக்கலையில் இஸ்லாமிய ஆராய்ச்சி நிலையம் நிறுவி இறுதி மூச்சுவரை இலக்கியத் தொண்டாற்றி வந்தார்கள்.

பலகாலம் முன்பு ஒரு நோன்பு பெருநாளின்போது அவர்கள் எனக்கு அனுப்பியிருந்த மடலொன்றை இன்றும் பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறேன். உள்நாட்டு அஞ்சலில், மூன்றே மூன்று வரிகளில் கச்சிதமாக தட்டெச்சு செய்யப்பட்ட வாழ்த்து அது:

ஈகைத் திருநாள்
இன்பம் தருக;
இறையருள் பொழிக !

அந்த காவிய நாயகனின் நினைவுகள் அலைமோதும் போதெல்லாம் இந்த அஞ்சல் வாசகத்தை மீண்டும் மீண்டும் படித்துப் பார்ப்பேன். நிறைவான வாழ்வை வாழ்ந்து இறைவனடிச் சேர்ந்த ஆசானின் நினைவுகளில் என் கண்கள் குளமாகிப் போகும்.

- அப்துல் கையூம்
நன்றி: abdulqaiyum.wordpress.com


13.12.08

ஒவ்வொரு வீட்டிலும் பட்டதாரி உருவாக வேண்டும்!

இஸ்லாமிய சமுதாயத்தில் விழிப்புணர்வு எற்படவேண்டும் என்றால் முதலில் கல்வி விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் ஒரு பட்டதாரி உருவாக வேண்டும். பட்டதாரிகள் இல்லாத வீடே இல்லை என்ற நிலை நமது நாட்டில் நமது சமுதாயத்தில் ஏற்பட வேண்டும் என்று ஐக்கிய அரபு அமீரக காயிதெ மில்லத் பேரவை தலைவர் முத்துப்பேட்டை எம்.அப்துர் ரஹ்மான் கூறினார்.கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் தைக்கால்தெரு சேக் சாஹிப் - தர்கா வளாகத்தில் இஸ்லாமிய நல்வாழ்வு சங்கம் நடத்திய இஸ்லாமிய பெண்கள் கல்வி மாநாட்டில் பேசியபோது அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும் அவர் கூறியதாவது:- உலக மக்கள் அனைவரும் ஒரே குலத்து சகோதரர்கள். இஸ்லாம் ஜாதி மத இன பேதம் பிரித்து பார்க்காத அனைவரையும் சகோதரத்துவ அன்புடன் பார்க்கும் மார்க்கமாகும். தனக்கு கற்றுக்கொடுத்த ஆசிரியப் பெருமக்களுக்கு ஒவ்வொரு தொழுகையிலும் துஆ கேட்கிறோம். அந்த அளவுக்கு கல்விக்கு பெருமை தேடி தரும் மார்க்கம் இஸ்லாம். பள்ளி படிப்பு முடிக்கும் முன் நம் வீட்டு பிள்ளைகளும் பாஸ்போர்ட் எடுக்கும் பழக்கத்தை நாம் விட்டுவிட வேண்டும். படிக்காமல் நாம் அரபு நாடுகளுக்குச் சென்று நாம் வாங்கும் மூன்று மாத சம்பளத்தை படித்துவிட்டு வந்தவர்கள் ஒரே மாதத்தில் வாங்குவதை கண்கூடாக பார்க்கிறோம். பட்டப்படிப்பு முடிக்காமல் அயல்நாட்டு வேலைக்கு செல்லவே கூடாது. ஒரு ஆண் கல்வி கற்றால் அவன் மட்டுமே பயன் பெறுகின்றான். ஆனால் ஒரு பெண் பயின்றால் அந்த குடும்பமே பயன் பெறும். அதனால்தான் இஸ்லாம் ஆண, பெண் இருபாலருக்கும் கல்வியை கட்டாய கடமையாக்கி இருக்கிறது. ஆண்களில் 64 சதவீதம், பெண்களில் 72 சதவீதம் மக்கள் பள்ளிப் படிப்பை விட்டு தாண்ட மாட்டேன் என்கிறார்கள். சமீபத்திய கணக்கெடுப்பின்படி 101 முஸ்லிம்களுக்கு ஒரு பட்டதாரிதான் உருவாகிறார். இதே சகோதர சமுதாயத்தில் 101 பேருக்கு 31 பட்டதாரிகள் உள்ளார்கள். இந்த நிலை மாற வேண்டும். நாமும் இந்த நாட்டில் கவுரவமாக வாழ கல்வியில் முன்னேற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். விழாவில் மாணவ - மாணவியரின் பேச்சுப் போட்டி வினாடி-வினா போட்டி நடைபெற்றது. நெல்லிக்குப்பத்தில் மேல்நிலை எஸ்.எஸ்.எல். சி. மெட்ரிக் வகுப்பில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ - மாணவி யருக்கு அப்துல் ரஹ்மான் பரிசுகள் வழங்கி வாழ்த்தினார். விழாவில் ஏராளமான இஸ்லாமிய பெண்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
துபை ஐக்கிய அரபு அமீரக காயிதே மில்லத் பேரவைத் தலைவர் முத்துப்பேட்டை ஜனாப் M.அப்துல் ரஹ்மான் அவர்கள் நம் பள்ளி முன்னாள் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது

11.12.08

என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்?

நம் சமுதாய மாணவர்கள் சமீப காலமாக உயர் கல்வி கற்பதில் மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றனர் என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும். அவ்விதம் உயர் கல்வி கற்பதில் எந்த வகையான உயர் கல்வியைத் தேந்தெடுக்கலாம் என்பதற்கு போதுமான வழிகாட்டுதல் கிடைக்காமல் பல மாணவர்களும், பெற்றோரும் தவிக்கின்றனர். அத்தகையவர்களுக்கு இந்த நூல் அழகான வழியைக் காட்டுகிறது. வாசகர்கள் படித்துப் பயன் பெறுவதோடு மற்றவர்களுக்கும் அறிமுகம் செய்யும்படி வேண்டுகிறோம்.
நூலாசிரியர் இளையான்குடி டாகடர் ஜாகிர் உசேன் கல்லூரி பேராசிரியர் ஆபிதீன் அவர்களுக்கும், வெளியிட்ட Nellai Eruvadi Educational Association(NEEA)க்கும் நன்றி. நூலைப் படிக்க கீழ்க்காணும் சுட்டியைச் சொடுக்கவும்

6.12.08

கும்பகோணத்தில் அரசுத்தேர்வு பயிற்சி மையம்

கும்பகோணத்தில் அரசுத் தேர்வுகளுக்கான பயிற்சி மையம்
கும்பகோணம் அல் அமீன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மத்திய, மாநில அரசு தேர்வாணைய தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளை நடத்துவதற்காக அல் அமீன் பயிற்சி மையம் 07-12-2008 ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற உள்ளது.
இப் பயிற்சி மையத்தினை அபுதாபி நோபிள் மரைன் குரூப் நிர்வாக இயக்குநர் அல்ஹாஜ் எம். சாகுல் ஹமீது துவக்கி வைக்க உள்ளார்.
விழாவில் இஸ்லாமிய இலக்கியக் கழக பொதுச்செயலாளர் எஸ்.எம். இதாயத்துல்லா, கும்பகோணம் காவல்துறை துணைக் கண்காணிபாளர் வி.ஆர். சீனிவாசன் பி.இ, உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்க உள்ளனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை தஞ்சை மாவட்ட முஸ்லிம் கல்விச் சங்க பொறுப்பாளர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.
இதுபோன்ற பயிற்சி மையங்கள் விரைவில் திருச்சி, மதுரை, இராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஏற்படுத்தப்பட இருக்கின்றன.

மேலதிக விபரம் பெற 98 400 400 67
நன்றி: முதுவை ஹிதாயத்

4.12.08

கல்வி நம் தலையாய கடமை

அல்லாஹ் தான் நாடியோருக்கு கல்வி ஞானத்தை வழங்குகின்றான். ஞானம் வழங்கப்பட்டோர் ஏராளமான நன்மைகளை வழங்கப்பட்டுவிட்டனர். அறிவுடையோரைத் தவிர வேறு யாரும் சிந்திப்பதில்லை. (அல்குர்ஆன் 2:269).இது இறைமறை வாசகம். கல்வியறிவை ஒருவர் பெற்றுவிட்டால் அவர் ஏராளமான நன்மைகளை கொடுக்கப்பட்டுவிட்டார் என படைத்த இறைவன் கூறுகின்றான். ஆன்மீகம் என்ற பெயரில் எந்த மதமும் கூறாத உன்னத சித்தாந்தத்தை கூறுவதோடு மேற்கூறிய வசனத்தின் மூலம் கல்வி கற்க ஆர்வமூட்டுகிறது இஸ்லாம்.
இத்தகைய உயர்ந்த வழிகாட்டுதல்களை பெற்றுள்ள நம் சமுதாயம் கல்வியில் போதிய முன்னேற்றம் அடையவில்லை. நம் சமுதாய கல்வி முன்னேற்றத்தின் முட்டுக்கட்டைகள் யாவை? என்பதை இனங்காட்டுவதோடு கல்வியின்மையின் காரணமாக நம் சமுதாயத்தில் நிலவும் அவலநிலைகளை எடுத்துரைத்து விழிப்புணர்வூட்டுவதே இக்கட்டுரையின் நோக்கம்.
நாடு சுதந்திரம் பெற்ற பத்து ஆண்டுகளுக்குள் பருவ வயதை அடைந்த அனைவருக்கும் கல்வி அளிக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால் இந்தியாவைப் பொறுத்த அளவில் 100% கல்வி என்பது எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. 1991-ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி 52.2% ஆக இருந்த எழுத்தறிவு விகிதம் 2001ஆம் ஆண்டில் 65.38% ஆக உயர்ந்துள்ளது நமக்கு சற்றே ஆறுதல் அளிக்கும் செய்தி என்றாலும் முஸ்லிம்களின் நிலை இன்னும் பரிதாபகரமாகவே இருந்துவருகிறது. 2001-ம் ஆண்டின் கணக்கெடுப்பு அறிக்கையின்படி முஸ்லிம்களின் எழுத்தறிவு விகிதம் 59.1% ஆகும். அதே நேரம் 2.3% வாழும் கிறிஸ்தவர்களின் விகிதமோ 80.3-சதவீதத்தை தொட்டுவிட்டது என்பது வியப்பிற்குரிய செய்தி.

நம் சமுதாயம், கல்வியில் முன்னேறாததிற்கு காரணம் என்ன? முன்னேற்றத்தின் தடைகற்கள் எவை? என்பதை அலசி ஆராய்வது மிக அவசியம்.
நம் சமுதாயம் கல்வியில் பின்தங்கியிருப்பதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் அதன் பின்னணி நீண்ட சரித்திரத்தை உள்ளடக்கியதாக உள்ளது. ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து வீர தீரத்துடன் போராடிய நம் சமுதாயம் ஆங்கிலேயரால் உருவாக்கப்பட்ட அந்த கல்வியை புறக்கணிக்கவேண்டும் என்ற நோக்கில் ஆங்கிலம் கற்பது "ஹராம்" என்று மார்க்கத் தீர்ப்பளித்தது. ஆங்கிலக் கல்வியை எதிர்க்கிறோம் என்ற பெயரில் நவீன கல்வியை புறக்கணித்தது நம் முன்னோர்கள் செய்த மிகப்பெரிய தவறு. விளைவு நம் பெற்றோர்களின் கல்வியின்மையால் நாமும் கல்வியிழந்து நம் சந்ததிகளையும் கல்வியூட்டும் ஞானமின்றி மற்ற சமுதாயத்தை விட 50 ஆண்டுகள் பின் தங்கிய நிலையில் இருக்கிறோம்.
அடுத்து வியாபார நோக்குடன் நடத்தப்படும் பள்ளிகளில் சேர்ந்து படிக்க போதிய பணவசதி இல்லாமையும் ஓர் காரணம். நவீன பாடதிட்டங்கள் கொண்ட மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் சேர பெரும்பணம் தேவைப்படுகிறது. சாதாரண அரசுடைமை ஆக்கப்பட்ட பள்ளிகளில் கூட ஆரம்பத்தொகை மிக அதிகம். மேலும் குழந்தைகள் தினம், பெற்றோர் தினம், சுற்றுலா என்று மாணவ மாணவிகளிடம் பணங்களை கரக்கும் போக்கும் காணப்படுகிறது. குடும்பச் சூழல், போட்டிகள் நிறைந்த பதவிகள், நிச்சயமற்ற கல்விச் சூழல் போன்றவற்றின் காரணமாக படிப்பை பாதியில் நிறுத்தி கடைகளில் வேலைக்கு சேரும் போக்கும் நம் சமுதாயத்தில் நிறைந்து காணப்படுகிறது. நல்ல அறிவு படைத்த கல்லூரி மாணவர்கள் கூட கல்வியை தொடர முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இராமநாதபுரம், முதுகுளத்தூரைச் சேர்ந்த ஏ. வாசன் என்ற மாணவன் +2 வில் 1200 க்கு 1054 மதிப்பெண் பெற்று திருநெல்வேலி PET பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தும் கல்லூரி பணம் கட்ட முடியாத நிலையில் உள்ளார். (நன்றி: சமரசம்). ஆக நிதிநிலைமையும் ஒரு காரணமாக அமைகின்றது. 1987-88 ல் மத்திய திட்டகமிஷன் நடத்திய ஓர் ஆய்வின் அறிக்கை இதை உறுதி செய்கின்றது. அப்போதைய இந்தியாவின் எழுத்தறிவு 52.11% ஆக இருக்கையில் முஸ்லிம்கள் 42% தான் கல்வி பெற்றிருக்கின்றனர். காரணம் ஆரம்ப கல்வி நிலையிலேயே பெருவாரியான முஸ்லிம்கள் தங்கள் படிப்பை இடையில் நிறுத்திவிடுகின்றனர் என்றும் இதற்கு மூலகாரணம் நிதி நிலைமைதான் என்றும் அந்த அறிக்கை கூறுகின்றது.
மேலும் தேசிய மாநில சர்வே அமைப்பு (N.S.S.A) 1993-94 மற்றும் 1999-2000 ல் நடத்திய ஆய்வில் இஸ்லாமிய இளைஞர்கள் பலர் தம் படிப்பை பாதியிலேயே நிறுத்தி அன்றாட கூலி பெறும் தொழிலாளியாக மாறிவிடுகின்றனர் என்ற உண்மையும் தெரியவருகிறது. மேலும் படித்த இளைஞர்கள் மத்தியிலும் வேலையின்மை அதிகரித்திருப்பதாகவும் அவ்வறிக்கை கூறுகின்றது.
ஆகவே பள்ளிப்படிப்பை இடையில் நிறுத்தும் போக்கு மாறவேண்டும். கல்வியின்மையால் நாம் அன்றாடம் பல கஷ்டங்களை சந்திக்கின்றோம். இந்த வளைகுடா வாழ்க்கையில் கூட 20 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் எத்தனையோ சகோதரர்களுக்கு எவ்வித பதவி உயர்வும், ஊதிய உயர்வும் இல்லை. காரணம் கல்வியின்மைதான். எத்தனையோ நல்ல அறிவுபடைத்த புத்திசாலிகள் படிப்பை இடையில் நிறுத்திவிட்டு பாஸ்போர்ட் எடுத்து வளைகுடாவிற்கு வந்து அதன் விளைவை அனுபவித்து கொண்டிருக்கின்றனர். தன்னைப்போல் தன் சந்ததியும் கஷ்டப்படக்கூடாது. எத்தகைய கஷ்டங்கள் வந்தாலும் அவர்களை படிக்க வைப்பேன் என்று நம் சமுதாய இன்றைய தலைமுறையினர் உறுதிபூண வேண்டும். நம் பிள்ளைகளுக்கு கல்வி அளிப்பதில் ஆர்வம் காட்ட வேண்டும். வாய்ப்பு வசதிகள் இல்லை என்ற ஆதங்கம் நம்மிடம் ஓரளவு இருந்தாலும் பெருவாரியான முஸ்லிம்கள் கிடைக்கும் வாய்ப்புக்களை பயன்படுத்துவதுமில்லை.
பணம் படைத்த எத்தனையோ வர்த்தகர்களின் வாரிசுகள் ஓரளவுக்கு எழுத படிக்க தெரிந்த உடனேயே தம் குடும்ப வர்த்தகத்தை கவனிக்கச் சென்றுவிடுகின்றனர். அரசாங்கம் கல்வியளிக்க முன்வந்தும் நம் மக்கள் ஆர்வக் குறைவாகயிருப்பதும் கவலையளிக்கக் கூடிய செய்தியாக இருக்கிறது. அனைவருக்கும் கல்வி என்ற திட்டத்தின் கீழ் தொடக்கப்பள்ளி இல்லாத கிராமங்களில் கல்வியளிக்கும் பணியை தமிழக அரசு ஆரம்பம் செய்தது. சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை அடுத்த கல்லாணி எனும் கிராமத்தில் இரண்டு மாணவர்கள் முன்வரவே கல்வி ஆரம்பமானது. மாணவர்களின் எண்ணிக்கை இரண்டை தாண்டாததால் மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி பள்ளியை மூடவுத்தரவிட்டார் புரிகிறதா? இதுதான் நம் நிலைமை.
ஆகவே நம் சமுதாயம் கல்வியில் ஆர்வம் காட்டுவதோடு வரும் வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்;. அடுத்து நம் சமுதாயத்திற்கென்று தனிப்பள்ளிக்கூடங்கள் போதிய அளவு ஏற்படுத்தப்பட வேண்டும். காயிதே மில்லத் இஸ்மாயில் சாஹிப் போன்றோர் சிறுபான்மையினரின் கல்விக்காக போராடி பெற்ற உரிமைகளை நம் சமுதாயத்தினர் போதிய அளவில் பயன்படுத்தவில்லை என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. உயர் கல்விகளில் அக்கறை காட்டிய நம் முன்னோர்கள் ஆரம்ப, நடுநிலை, பள்ளிக்கூடங்களில் போதிய அக்கறை காட்டவில்லை. தமிழகத்தை எடுத்துக் கொண்டால் நமக்காக சுமார் 25 கலை மற்றும் பொறியியல் கல்லூரிகள், 19 பாலிடெக்னிக்குகளும் உள்ளன. ஆனால் ஆரம்ப கல்வியளிக்கும் பள்ளிகள் போதிய அளவில் இல்லை. விளைவு நம் சமுதாய சிறுவர்கள் பிற சமுதாய பள்ளிகளில் சேர வேண்டியுள்ளது. இதனால் பருவ வயதினரின் ஐவேளை தொழுகைகளுக்கு இடையூறாக அது அமைகிறது. எத்தனையோ பள்ளிகளில் வெள்ளிக்கிழமை ஜும்ஆவுக்கு கூட அனுமதி மறுக்கப்படும் அவல நிலையும் காணப்படுகின்றது. இது போதாதென்று எல்லா மத பண்டிகைகளுக்கும் பணம் வாங்கி கொண்டு கோலாகலமாக கொண்டாடும் நிலைமையும் கவலையளிக்கிறது. இன்றைய சூழலில் சரஸ்வதி பூஜையும், ஆயுத பூஜையும் கொண்டாடாத பள்ளிகளே இல்லை. நம் சமுதாயத்தினரும் பள்ளி விதிமுறைக்குட்பட்டு பல்வேறு பண்டிகைகளை வேண்டா வெறுப்பாகக் கொண்டாடுகின்றனர். இந்நிலை மாறவேண்டுமென்றால் நமக்கென்று தனிப் பள்ளிக்கூடங்கள் உருவாக வேண்டும்.

கன்னிப்பெண்கள் கரையேறுவதற்கும், பள்ளிவாசல் கட்டுவதற்கும் அள்ளி வழங்கும் நம் சமுதாயச் செல்வந்தர்கள் தொடக்கப்பள்ளிகள் நிறுவுவதில் ஆர்வம் காட்ட வேண்டும். தொடக்க கல்வியற்ற நிலையில் பட்டபடிப்பு என்பது எட்டாக்கனியாக போய்விடும். நமது இஸ்லாமிய அறக்கட்டளையின் கீழ் இயங்கும் எத்ததனையோ கல்வி நிலையங்களில் மூன்றிலொரு பங்கு கூட நம் மாணவர்கள் படிக்கவில்லை என்பதே இதற்கு சான்று.
மேலும் மிக குறைந்த அளவில் காணப்படும் புத்திசாலி மாணவர்கள் கூட போதிய வழிகாட்டுதலின்றி ஏனோ தானோ என்று குறிக்கோள் அற்ற நிலையில் மேற்படிப்பை தொடர்கின்றனர். தொழில் சார்ந்த கல்விகளில் சேர பத்தாம் வகுப்பு முடித்தவுடனேயே அதற்கான பாடபிரிவுகளை தேர்ந்தெடுத்து படிக்கவேண்டும். S.S.L.C-யில் நல்ல மதிப்பெண் பெற்று வரலாறு, பொருளாதாரம் என்று எதையாவது எடுத்துவிட்டு பின் அது தொடர்பான மேற்படிப்புகளை பெயர் அளவில் தொடரும் நிலையை தவிர்க்கவேண்டும். +2 படிக்கும் எத்தனையோ மாணவர்கள் எத்தனையோ படிப்புகள் இருந்தும் இயந்திரத்தனமாக B.A., B.B.A., B.Com. என்று ஏதாவது ஒன்றில் சேர்ந்துவிடுகின்றனர். புதிதாக வந்து கொண்டிருக்கும் புதிய படிப்புகளில் ஆர்வம் காட்டுவதில்லை. Micro Biology, Bio Chemistry, Chemical Engineering, Textile Tecnology, Leather Tecnology, மீன் வள அறிவியல் போன்ற புதிய படிப்புகளில் சேர ஆர்வம் காட்ட வேண்டும்.
அடுத்து நாம் எடுத்து படிக்கும் துறையில் ஆழ்ந்த மேற்படிப்பை மேற்கொள்ளவேண்டும். சமூகவியல் படித்து கொண்டிருக்கும் போதே (B.L) சட்டம் படிக்க சென்றுவிடுவதால் ஒரே துறையில் ஆழ்ந்த அறிவு பெறமுடியவில்லை. இந்த நூற்றாண்டின் இணையற்ற படிப்பு என்று வர்ணிக்கப்படும் IT (Information & Technology), Elecronic & Communication போன்ற படிப்புகளில் நம் சமுதாயம் ஆர்வம் காட்டினால் இஸ்லாமிய சமுதாயத்திற்கு நாம் எண்ணற்ற சேவைகளை செய்யலாம். Online வகுப்புகளில் இஸ்லாமிய பாடம் மற்றும் பட்டபடிப்புக்கு வழி செய்யலாம். வருங்காலத்தில் வீட்டிலிருந்தே பெண்களும், இல்லத்தரசிகளும் Online-ல் கல்வியை பெரும் பங்களிப்பை நம் சமுதாயதிற்கு செவ்வனே செய்யலாம். இன்னும் பத்திரிக்கை சார்ந்த படிப்புகள் இன்றைய கால சூழலில் மிக இன்றியமையாதது. Journalism படித்தவர்கள் நம் சமுதாயத்தில் மிக குறைவாக இருப்பதால் நம் சமுதாய பத்திரிக்கைகள் பல தரம் குன்றியவைகளாகவே இருக்கின்றன. ஆக படிப்புகள் எத்தனையோ இருந்தும் கூட நம் சமுதாய மாணவர்களின் பின்னடைவுகளுக்கு காரணம் நமக்கென்று வழிகாட்டிகள் இல்லை. கல்வியறிவற்ற பெற்றோர்களினால் தம் சந்ததிகளுக்கு வழிகாட்ட இயலாது.
நம் சமுதாயத்தில் படித்தவர்கள், உயர்பதவி வகிப்பவர்கள் குழு அமைத்து ஆங்காங்கே விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவதோடு வருடந்தோறும் டிசம்பர், ஜனவரி மாதங்களில் மேல் படிப்புக்கு வழிகாட்ட ஆலோசனை மன்றங்களை அமைத்து மாணவ மாணவிகளின் ஐயங்களை தெளிவுப்படுத்த வேண்டும். இதனை நாம் செய்ய தவறியதின் காரணமாக நல்ல புத்திசாலி மாணவர்கள் கூட தம் திறமையை முழுமையாக வெளிப்படுத்த முடிவதில்லை. போதிய வழிகாட்டுதல் இல்லாத காரணத்தினால் அரசாங்க சர்வீஸ் கமிஷன் போன்ற தேர்வுகளில் கூட எழுதுவதற்கு தயக்கம் காட்டுகின்றனர். 1983-ல் மத்திய உள்துறை அமைச்சகம் அளித்த புள்ளி விவரத்தின் Group-3 சர்வீஸ் கமிஷன் தேர்வுகளில் பங்கேற்ற 2352 மாணவர்களில் 76 (3.27%) பேர்தான் முஸ்லிம்கள் இதேப் போல் Group-3 தேர்வில் பங்கேற்ற 497 பேரில் 12 பேர் தான் (2.44%)-ம் உதவி சர்ஜன்கள் தேர்வில் 3503 பேரில் 162 பேர் தான் (4.62%) பங்களித்திருக்கின்றனர்.
அடுத்ததாக நம் கல்விக்கூடங்களிலுள்ள சில தவறுகளையும் இங்கு சுட்டிகாட்டுதல் அவசியம். இன்றைய நவீன கல்வி கோட்பாட்டின் பின்னணியில் மேற்கத்திய கலாச்சாரம் நம் சமுதாய மாணவர்களையும் பீடித்திருக்கிறது. இஸ்லாம் கூறும் நல்லொழுக்கங்கள், கற்புநெறி, இறையச்சம் போன்றவை போதிக்கபடாத காரணத்தினால் மேற்கத்திய காலச்சாரத்திற்கு பலியாகி இஸ்லாத்தைப்பற்றி தெரியாமலேயே அதனை விமர்சிக்கும் அறிவு(?) ஜீவிகளாக மாறிவிடுகின்றனர்.
இன்றைய அவசிய தேவை முஸ்லிம்களால் நடத்தப்படும் கல்வி நிறுவனங்களில் இஸ்லாமிய நல்லொழுக்க பாடத்தை கட்டாயம் கற்பிக்க வேண்டும். அதுமட்டுமல்லாது இஸ்லாமிய அறிஞர்களின் உதவியுடன் இஸ்லாமிய சட்டம், குர்ஆன் விளக்கவுரை போன்றவற்றைக் கற்பிப்பது மிகவும் அவசியம். நம் சமுதாய கல்லூரிகளின் நிலையே இதுவென்றால் அரபி மதரஸாக்கள் முழுக்க முழுக்க ஆன்மீக வட்டத்திற்குள்ளேயே நிற்கின்றன.

உத்திர பிரதேசத்தில் "தீனீ தஃலீம்" என்ற பெயரில் 6000 கிராமங்களில் நடத்தப்படும் மதரஸாக்களில் அறிவியல் சார்ந்த எந்த நூலும் பாடத்திட்டத்திலில்லை. இத்தகைய மதரஸாக்களில் பட்டம் பெற்று வெளிவரும் ஆலிம்கள், இன்றைய நவீன பிரச்சனைகளான இன்சூரன்சு, குளோனிங், ஷேர் மார்க்கெட் போன்ற சர்ச்சைக்குரிய பிரச்சனைகளுக்கு மார்க்கத்தீர்ப்பு கூற தயக்கம் காட்டுகின்றனர். குறைந்த பட்சம் ஆலிம்களுக்கு கம்பியூட்டர் அறிவு அவசியம். மேலும் இன்றைய இணைய (Internet) யுகத்தில் பல வித அனாச்சாரங்களில் பயன்படும் இணைய (Internet) போன்றவற்றில் இஸ்லாமிய கருத்தாக்கங்கள் மற்றும் இஸ்லாம் எதிர்கொள்ளும் சவால்களை உலகளாவிய அளவில் விளக்கம் அளிக்க அழைப்புப்பணியை வலைமனைகள் மூலம் முடுக்கி விட நம் சமுதாய ஆலிம்கள் திறமை படைத்தவர்களாக உருவாக வேண்டுமென்றால் நம்முடைய அரபி மதரஸாக்களின் பாடத்திட்டங்களில் புனர்நிர்மாணம் அவசியம்.
இன்று ஆலிம்கள் தொழுகை, நோன்பு போன்றவற்றோடு தம் பணியை சுருக்கிக் கொள்வதினால் படிப்பறிவு மிக்க சில முஸ்லிம் இளைஞர்கள் வலைமனைகளில் இஸ்லாமிய சேவையில் ஈடுபட்டாலும் மார்க்க சட்ட விளக்கங்களுக்கு ஆலிம்களையே சார்ந்திருக்கின்றனர். மதரஸாக்களில் மார்க்க கல்வியுடன் நவீன தொழில் நுட்ப கல்வியும் சேர்த்தால் இன்றைய நவீன உலகில் முஸ்லிம்கள் இழந்த பெருமையை மீண்டும் பெறலாம். இறைவன் துணை செய்வானாக!
(ஆக்கத்திற்கு உதவியவை: Manorama Year Book 2005, தினமணி.காம், ஒற்றுமை, சமரசம்)
நன்றி் இஸ்லாம் கல்வி.காம்

என்ன படிக்கலாம்? எங்கே படிக்கலாம்.‏?

அஸ்ஸலாமு அலைக்கும்.

எத்தனை விதமான படிப்புகள் இருக்கின்றன? எங்கே படிக்கலாம்? வேண்டிய த்குதிகள் என்ன? போன்ற விளக்கங்களுடன் தமிழில்
பேராசிரியர் ஆபிதீன் (டாக்டர் ஜாகீர் உசேன், இளையாங்குடி) எழுதிய புத்தகம்.

http://www.nellaieruvadi.com/neea/images/NEEA_Edu_Guide.pdf

இதைப் பிரதி எடுத்து ஓவ்வொரு பள்ளிவாசல்களிலும். ஊரில் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் வையுங்கள். இன்ஷாஅல்லாஹ், சமுதாயம் பயன் பெறும்.

(சேவை: நெல்லை ஏர்வாடி எடுகேசனல் அசோசியேசன்.)
(Service: Nellai Eruvadi Educational Association - NEEA)
(Website: http://www.nellaiEruvadi.com/neea )

3.12.08

தமிழ் மாணவிகள் உலக சாதனை

ரியாத் இந்திய பன்னாட்டுப் பள்ளியில் பயிலும் இரண்டு தமிழ் மாணவிகள் (கார்த்திகா மோகன் & வர்சா ராஜா) மலேசியாவில் உலக அளவில் நடந்த கணிதப் போட்டியில் ( UCMAS Abacus and Mental Arithmetic Int'l. Competition) கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்று வந்துள்ளார்கள், அதிலும் கார்த்திகா மோகன் என்ற ஏழாம் வகுப்பு மாணவி பங்குபெற்ற 600 பேரில் 200 கேள்விகளுக்கு 8 நிமிடங்களில் 100% சரியான விடையுடன் பதிலளித்து முதலிடத்தை பெற்று தங்ககோப்பையை தட்டியுள்ளார்.

தமிழர்கள் சார்பில் இம்மாணவிகளுக்கு நல்வாழ்த்துக்கள்...
நன்றி: சவூதி தமிழ்ச் சங்கம்