28.12.08

"சிகரத்தை வெல்வோம்' நிகழ்ச்சி: 10, 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம்

திருநெல்வேலி, டிச. 26: திருநெல்வேலியில் 3-வது ஆண்டாக தினமணி, ஸ்காட் குழும கல்வி நிறுவனங்கள் இணைந்து நடத்தும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான "சிகரத்தை வெல்வோம்' என்ற வழிகாட்டி நிகழ்ச்சி வரும் ஜன. 2-ம் தேதி நடைபெற உள்ளது.
அரசுப் பொதுத்தேர்வு எழுத உள்ள 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு நல்லதொரு ஆலோசனை வழங்கும் வகையில் ஆண்டுதோறும் பல மாவட்டங்களில் தினமணி சார்பில் "சிகரத்தை வெல்வோம்' என்ற மாணவர் வழிகாட்டி நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. மாணவர்கள் தேர்வுக்குத் தயாராவது, பாடங்களை சிரமமின்றிப் படிப்பது, தேர்வுக் காலத்தில் உடல்நிலையைப் பாதுகாப்பது, தேர்வுக் கூடத்தில் நேரத்தை திட்டமிட்டுப் பயன்படுத்துவது, அதிகமான மதிப்பெண்கள் பெறுவதற்கேற்ப கேள்விகளைத் தேர்ந்தெடுத்து எழுதும் முறை, கேள்விக்கான பதில்களை சிறப்பான முறையில் எழுதுவதற்கான உத்திகள் போன்றவை இந் நிகழ்ச்சியில் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களால் விளக்கப்படும்.
வண்ணார்பேட்டையில் உள்ள பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியில் ஜன. 2-ம் தேதி காலை 9.30 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1.30 மணி வரை நடைபெறும் இந் நிகழ்ச்சியில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் கலந்துகொள்ளலாம். கட்டணம் எதுவும் கிடையாது.
தொடக்க விழா:
இந் நிகழ்ச்சியின் தொடக்க விழாவுக்கு, தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன் தலைமை வகித்துப் பேசுவார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சி. சசிகலா, ஸ்காட் குழும கல்வி நிறுவனங்களின் தலைவர் முனைவர் கிளீட்டஸ்பாபு, பதிவாளர் பேராசிரியர் பொ. செல்லத்துரை ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். நிகழ்ச்சியைத் தொடக்கிவைத்து நெல்லை கண்ணன் பேசுவார்.
நிகழ்ச்சியின் நோக்கம் குறித்து தூய யோவான் கல்லூரி இயற்பியல் துறைப் பேராசிரியர் ஜான் கென்னடி பேசுவார். திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சு. காளியப்பன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசுவார்.
நிகழ்ச்சியில் பங்கேற்கும் மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக ஆலோசனை கையேடும், குறிப்பெடுத்துக் கொள்ள நோட்டும், பேனாவும் வழங்கப்படும். நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புவோரும், பள்ளி நிர்வாகிகளும் மேலும் விவரங்களுக்கு
92443 17205,
92443 17203
என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
நன்றி: இந்தியன் முஸ்லிம் அசோசியேஷன் துபாய்

0 comments: