கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தமிழக சட்டமன்றத்தில் கூறினார்.
வெள்ளிக் கிழமை (07-05-2010) அன்று சட்டமன்றம் கூடியதும், தனியார் பள்ளிகள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்கவும், தனியார் பள்ளிகள் வசூலிக்க வேண்டிய அதிகபட்ச கட்டணத்தை நிர்ணயிக்கவும் அமைக்கப்பட்ட நீதிபதி கோவிந்தராஜன் தலைமையிலான குழு இதுவரை அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை எனவும், பள்ளிகள் திறக்கும் நாள் நெருங்கி வருவதால், அறிக்கை எப்போது சமர்ப்பிக்கப்படும் என்று காங்கிரஸ் உறுப்பினர் ஞானசேகரன் கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதில் அளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது:
தமிழ்நாட்டில் மொத்தம் 10,951 சுயநிதி பள்ளிக் கூடங்கள் உள்ளன. எந்தெந்த பள்ளிகள் எவ்வளவு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பது குறித்து முன்னாள் நீதிபதி கோவிந்தராஜன் தலைமையிலான குழு முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு இன்னும் 4, 5 தினங்களில் அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.
கட்டண விவரம் பற்றி தமிழக அரசு அறிக்கை அனுப்பிய பின் தனியார் பள்ளிகள் அந்த கட்டணத்தை மட்டும்தான் வசூலிக்க வேண்டும். கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகத் தெரிய வந்தால் அல்லது புகார் வந்தால் அதுபற்றி விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்
நன்றி-இந்நேரம்.காம்
0 comments:
Post a Comment