இறையருளால் கடந்த 22-07-2007 ஞாயிறு அன்று ஆக்கூர் ஓரியண்டல் அரபி மேல் நிலைப் பள்ளியின் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய அற்புதப் பொன் விழா அருமையாக நடந்தேறியது.
காலை நிகழ்ச்சியாக முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி மிகுந்த கோலாகலமாகத் தொடங்கியது. ஓய்வு பெற்ற முன்னாள் ஆசிரியர்களாகிய வி.முருகேசன் அய்யா, அப்துல் காதிர் மரைக்காயர் உமரி, இக்பால் சார் ஆகியோர் மேடையில் வீற்றிருக்க அருகருகே முன்னாள் மாணவப் பெருந்தகைகள் பலர் மேடையை அலங்கரிக்க விழா சிகழ்ச்சிகள் இனிதே ஆரம்பமாயின.
முன்னாள் மாணவர் (ஆக்கூர்) முஹம்மது ஜக்கரிய்யா அவர்கள் விழாவுக்குத் தலைமை வகித்தார். (பள்ளப்பட்டி) முஹம்மது சதக்கத்துல்லாஹ் அவர்கள் தம் தேனினும் இனிய குரலில் திருமறை வசனத்தை ஓத அரங்கமே நிசப்தமாக அற்புதக் கிராஅத்தில் இலயித்துப் போனது.
இந்நாள் தலைமை ஆசிரியர் திரு சி.சம்பத் குமார் அவர்கள் விழாவுக்கு வந்திருந்தோரை வரவேற்று வரவேற்புரை நிகழ்த்தினார். தொடர்ந்து முன்னாள் மாணவர்கள் தங்கள் மலரும் நினைவுகளை மனம் திறந்து பகிர்ந்துக் கொள்ள ஆரம்பித்தனர்.
முதலில் முன்னாள் மாணவர் (இராமநாதபுரம்) முஹ்யித்தீன் அப்துல் காதர் உரையாற்றினார். இவரைத் தெர்டர்ந்து மேடை ஏறியவர் பேராசிரியர் நிஃமத்துல்லாஹ் அவர்கள். பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லுஸரியில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணிபுரியும் இவர் ஆற்றிய உரையில் ஓரியண்டலில் பயின்ற போது 'ஏறாத மரங்கள் இல்லை திருடாத மாங்காய்கள் இல்லை' என்று ஒளிக்காமல் மறைக்காமல் உரைத்த போது அரங்கமே சிரித்தது.
மதுரையில் பெரும் தொழில் அதிபராகத் திகழும் முன்னாள் மாணவராகிய பள்ளப்பட்டி முஹம்மது சதக்கத்துல்லாஹ் அவர்கள் ஓரியண்டலில் கல்வி கற்றதால் அடைந்த உயர்வுகளைக் குறிப்பிட்டார்.
காஷ்மீரிலிருந்து கண்ணியாகுமரிவரை மாணவர்கள் வந்து இங்கு பயின்றுள்ளனர் என்பதற்கு உதாரணமாக கண்ணியாகுமரி கோட்டாரிலிருந்து ஆரம்பக் காலத்தில் வந்து பயின்ற முன்னாள் மாணவர் உரை நிகழ்த்திய பின்னர், சென்னையிலிருந்து முஹம்மது முஸ்தபா அவர்களும், அவரைத் தொடர்ந்து திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் அரபிப் பேராசிரியராகப் பணியாற்றும் இராஜபாளையம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் அவர்களும், இன்னும் பல முன்னாள் மாணவர்களும் தங்கள் இனிய நினைவுகளை எடுத்துரைத்தனர்.
முன்னாள் தலைமை ஆசிரியர் வி.முருகேசன் அய்யா அவர்கள் தாம் தலைமை ஆசிரியராகப் பதவி வகித்த நாட்களையும் இப்போது இப்பள்ளி அடைந்திருக்கும் முன்னேற்றங்ளையும் ஒப்பிட்டு ஆற்றிய உரை மிகவும் அற்புதமாக இருந்தது.
அப்துல் காதிர் மரைக்காயர் ஹஜ்ரத் அவர்கள் தாம் பள்ளியில் 1971 ஆம் ஆண்டு ஆசிரியராகச் சேர்ந்தது முதல் ஓய்வு பெரும் வரை ஓரியண்டலில் கழித்த நாட்களை நினைவு கூர்ந்தார்.
மாணவர்களின் இதயங்களைக் கொள்ளைக் கொண்ட இக்பால் சார் அவர்கள் ஓரியண்டலில் தாம் பட்ட சிரமங்களை மிகவும் நகைச்சுவையாக எடுத்துரைத்தது எல்லோரையும் கவர்ந்தது. கிட்டத்தட்ட 34 ஆண்டு காலத்தில் நடந்த நிகழ்ச்சிகளில் எவற்றை எடுத்துச் சொல்வது எவற்றை விடுவது? என்று இக்பால் சார் சொன்ன போது அவரது கண்களில் மட்டுமல்ல நமது கண்களிலும் நீர்;த்திவலைகள்.
நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்த முன்னாள் மாணவர் ஆக்கூர் முஹம்மது ஜக்கரிய்யா அவர்கள் ஓரியண்டலின் வரலாற்றை இரத்தினச் சுருக்கமாக எடுத்து வைத்து ஆற்றிய உரை மிகவும் பயனுள்ளச் செய்திகளைத் தாங்கியிருந்தது.
அடுத்து எழுந்தவர் முத்துப் பேட்டை அப்துல் ரஹ்மான். படிக்கும் காலத்திலேயே இலக்கிய மன்றக் கூட்டங்களைக் கலக்கியவர். புலவர் இராமானுஜம் சார் அவர்களிடம் பயிற்சி பெற்று பல்வேறு பேச்சுப் போட்டிகளில் பங்கு பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்தவர். பேச்சுக்கு சொல்லவா வேண்டும்? காலை நிகழ்ச்சிக்கு முத்தாய்ப்பாக இருந்தது இவரது பேருரை. இன்னும் கொஞ்ச நேரம் பேசியிருக்கக்; கூடாதா? என்று கேட்டவர்களை ஏங்க வைத்த இவர் உரையை அப்படியே ஒலிஒளிக் கோப்பாக இந்த வலைப்பதிவில் வெளியிடுவோம் இன்ஷா அல்லாஹ்.
நம் பள்ளியின் எல்லா முன்னேற்றங்களுக்கும் முதற்படியாக அனைத்து உதவிகளும் செய்து வரும் தமிழகம் அறிந்த அரசியல் பிரமுகர் ஹிதாயத்துல்லாஹ் அவர்கள் காலை நிகழ்ச்சியின் நிறைவுரை ஆற்றினார். தாம் அடிக்கடி ஓரியண்டல் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதாலும், துபாயிலிருந்து இந்த விழாவுக்காகவே வருகை தந்துள்ள முத்துப்பேட்டை அப்துல் ரஹ்மானுக்கு அதிக முக்கியத்துவம் தரவேண்டும் என்பதற்காகவும் தன் நிறைவுரையைச் சுருக்கமாக முடித்துக் கொண்ட அல்ஹாஜ் ஹிதாயத்துல்லாஹ் அவர்கள் அரசியல்வாதிகளில் தனித்தன்மை வாய்ந்தவர்.
இவர் தம் உரையில் தாம் ஓரியண்டல் விழாவில் கலந்து கொள்ளும் போது, இந்தப்பள்ளியின் ஒரு முன்னாள் மாணவராக மட்டுமே நிற்கிறேன் என்று சொன்ன போது இவரின் தன்னடக்கம் பளிச்சிட்டது.
பிற்பகல் 2 மணிக்கு காலை நிகழ்ச்சிகள் இனிதே நிறைவுற்றன.
மாலை 4 மணிக்கு மாபெரும் பொன் விழா இனிதே தொடங்கியது.
பள்ளித் தாளாளர் அல்ஹாஜ் முஹம்மது இக்பால் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.தொடர்ந்து
நீடூர் வழக்குரைஞர் அல்ஹாஜ் சயீத் அவர்கள்
நீடூர் மிஸ்பாஹுல் ஹுதா அரபிக் கல்லூரி முதல்வர்
சங்கைக்குரிய அப்துல் காதிர் பாக்கவி அவர்கள்,
உலகத் தமிழ் பண்பாட்டுக் கழகத் தலைவர்
ரபீவுத்தீன் அவர்கள்,
துபாய் ஈமான் சங்க துணைத் தலைவர்
(முன்னாள் மாணவர்) முத்துப்பேட்டை அப்துல் ரஹ்மான் அவர்கள்,
இஸ்லாமிய இலக்கிக் கழகச் செயலர்
(முன்னாள் மாணவர்) ஹிதாயத்துல்லாஹ் அவர்கள்,
திரு மணவானராமானுஜம் அவர்கள்,
மாவட்டக் கல்வி அலுவலர் மயிலாடுதுறை
திரு ராமநாதன் அவர்கள்,
பவானி சட்டமன்ற உறுப்பினர்
திரு ராஜகுமார் அவர்கள்,
மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர்
திரு மு.க. பெரிய சாமி அவர்கள்,
பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர்
ஆகியோர் சிறப்புரை ஆற்றிய பின்னர்
மாண்பு மிகு வணிக வரித்துறை அமைச்சர்
சி.நா. மீ உபயதுல்லா அவர்கள் விழா நிறைவுப் பேருரை நிகழ்த்தினார்
விழாவில் பள்ளியின் வளர்ச்சிக்கு அருந்தொண்டாற்றிய பல்வேறு முன்னாள் மாணவர்கள் அமைச்சர் அவர்களால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.
விழாவில் பொன் விழா சிறப்பு மலர் வெளியிடப்பட்டது.
பொன் விழா நினைவாகக் கட்டப்பட்ட வகுப்பறைகள் சமுதாயப் புரவலர்களால் திறந்து வைக்கப்பட்டன.
பள்ளியின் வளர்ச்சியில் அதிக அக்கரை கொண்ட முன்னாள் மாணவர்கள் குறிப்பாக குவைத் பைனான்ஸ் ஹவுஸ் அப்துல் ரஜாக் (திருநெல்வேலி) போன்றவர்கள் பள்ளிக்கு செய்த பொருளாதார உதவிகள் முன்னாள் மாணவர்களுக்கு மிகச் சிறந்த முன்னுதாரணம்.
தமிழமெங்குமிருந்து சுமார் 60 க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் விழாவுக்கு வருகை தந்து சிறப்பித்தனர். அல்ஹம்து லில்லாஹ்.
ஆக்கூர் ஓரியண்டலில் பயின்ற எண்ணற்ற முன்னாள் மாணவர்கள் அரபு நாடுகளிலும் இன்னுல் பல்வேறு மேலை நாடுகளிலும் பரவி வாழ்கின்றனர் என்பது உண்மை தான். போதிய அவகாசம் இல்லாமல் அவசரமாகச் செய்யப்பட்ட விழா ஏற்பாடுகளால் இந்த அற்புத விழாவில் பங்கு பெற இயலவில்லையே என்னும் ஆதங்கம் கடல் கடந்து வாழும் எம்மைப் போன்ற முன்னாள் மாணவர்களுக்கு இருக்கிறது.
தமிழகத்திலேயே இருக்கும் இன்னும் ஏராளமான முன்னாள் மாணவர்களே நீங்கள் எங்கே போனீர்கள்? நம்மை வளர்த்து ஆளாக்கி அறிவையும் ஆற்றலையும் தந்த நமது ஆக்கூர் ஓரியண்டலில் நடைபெற்ற இந்தப் பொன் விழா, வரலாற்று ஏடுகளில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒரு விழா அல்லவா? இப்படிப்பட்ட அரிய விழாவில் கலந்துக் கொள்ளும் ஆசை உங்களுக்கு ஏன் இல்லாமல் போனது? ஆயிரம் அலுவல்கள் இருக்கலாம். அவற்றை எல்லாம் ஒரு நாள் மட்டும் ஒதுக்கி வைக்க உங்களுக்கு முடியவில்லையா?
விழாவுக்கு வந்து தமது கடந்த கால வாழ்க்கையை மலரும் நினைவுகளாக மனதில் அசை போட்டு, மறக்க முடியாத மகிழ்ச்சியுடன் திரும்பிச் சென்ற இந்த 60 க்கும் மேற்பட்ட மாமனிதர்களைக் கேட்டுப் பாருங்கள். தாங்கள் அடைந்த பேரின்பத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்வார்கள்.
இன்ப நினைவுகளுடன் புத்துணர்வு பெற்று, புளகாங்கிதம் அடைந்து, புதிய தெம்புடன் புறப்பட்டுப் போனவர்கள் இந்தப் பள்ளியில் இன்று நடபெற்ற இந்தப் பொன் விழா நிகழ்ச்சிகளை என்றென்றும் தங்கள் இதயத்தில் தேக்கி வைத்திருப்பார்கள். அடுத்து ஒரு விழா இனி எப்போது? என்று இவர்களுடன் நாமும் சேர்ந்து ஏங்குகிறோம்.
நம்மை வளர்த்து உருவாக்கி நமக்கு அறிவைப் புகட்டிய நமது ஆக்கூர் ஓரியண்டல் மேல் நிலைப் பள்ளி மேலும் வளர்ந்து இன்னும் ஆயிரமாயிரம் அறிஞர் பெருமக்களை உருவாக்கவும், இப்பள்ளியின் சேவை சமுதாயத்திற்கு பயனளிக்கவும் இறைவனை இறைஞ்சுவோம்.
பொன் விழா நிகழ்ச்சி குறுந்தகடுகள் மற்றும் பொன் விழா சிறப்பு மலர் ஆகியவை சவூதி அரேபியாவில் தேவைப்படுவோர் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி masdooka@hotmail.com
0 comments:
Post a Comment