27.9.07

பொன் விழா மலர் முன்னுரை

நம் பள்ளியின் பொன் விழா நினைவாக வெளியிடப்பட்டுள்ள சிறப்பு மலரில் பள்ளியின் இந்நாள் தாளாளர் அல்ஹாஜ் முஹம்மது இக்பால் அவர்கள் எழுதியுள்ள
முன்னுரை
அல்ஹாஜ் முஹம்மது இக்பால்
செயலாளர் மௌலானா அபுல் கலாம் ஆஸாத் கிராமக் கமிட்டி
தாளாளர் ஆக்கூர் ஓரியண்டல் அரபி மேல் நிலைப் பள்ளி ஆக்கூர்
-------------------------------------------
மனிதனைப் படைத்து அவனுக்கு அறிவின் சக்திகளை வழங்கி பூமியில் அவனுக்குத் தன் பிரதிநிதித்துவப் பெருமையளித்து அவனுக்கு வழி காட்டுவதற்காகத் தூதுவர்களை அனுப்பி, வேதங்களை அருளி, நிறை ஞானத்துடனும், அளவிலா அருளுடனும் ஆட்சி புரியும் அண்டங்களின் ஒரே படைப்பாளனும் அதிபதியும் அதிகாரியுமாகிய இறைவனுக்கே எல்லாப் புகழும்.
இப்பள்ளியானது ஆக்கூர் ஜமாஅத்திற்குக் கட்டுப்பட்ட பள்ளியாக இருப்பதால், தாளாளர்கள் ஜமாஅத்தார்களால் தேர்ந்தெடுக்கப்படுவதால் தாளாளர்கள் அவரவர் தகுதி மற்றும் அனுபவத்திற்கு ஏற்ப பள்ளியின் வளர்ச்சியில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டு 53 வருடத்தில் எந்த அளவுக்கு வளர்ச்சி அடைய வேண்டுமோ அந்த அளவுக்கு வளர்ச்சி பெறவில்லை.
கல்வியை விட மனிதனுக்கு சிறப்பும் பாதுகாப்பும் தரக்கூடியது வேறெதுவும் இல்லை. காலத்திற்கேற்ப மாற்றங்கள் எப்பொழும் செய்துக் கொண்டே இருக்க வேண்டும். அரபி முக்கிய மொழியாக இருப்பதால் அதன் பாடத்திட்டத்தில் தனிக் கவனம், கற்றல் கற்பித்தல், மற்றும் மதிப்பீடு, கல்விக் கூட உள் கட்டமைப்பு வசதிகள் செய்தல், நிர்வாகம், வழிகாட்டுதல் மாணவர்களுக்கு உதவி, மற்றும் மாணவர்களைக் கண்காணித்தல், போன்றவைகள் ஒரு தாளாளருக்கு இருக்க வேண்டிய சிறப்பம்சங்களாகும். இந்தத் தொலை நோக்கோடு செயல் படும்போது பள்ளியின் வளர்ச்சியும் பெருமைப்படும் அளவுக்கு மாறுகிறது.
1994 ஆம் ஆண்டில் முன்னாள் தாளாளர் அண்ணன் அபூபக்கர் அவர்களின் பொறுப்பில் 3000 சதுர அடியில் மாணவர் விடுதியும் 1999 ஆம் ஆண்டில் 1600 சதுர அடியில் ஆக்கூர் கொடை வள்ளல் அண்ணன் அப்துல் ரஷீது அவர்கள் மூலம் உணவுக்கூடமும் கட்டி முடிக்கப்பட்டது.
நான் 2000 ஆம் ஆண்டில் பொறுப்பேற்ற போது ஓர் இறுக்கமான சூழ்நிலையின் அனுபவம் ஏற்பட்டது. 50 வருட பழங்கால ஓட்டுக் கட்டடங்கள் மாணவர் வியர்வையைத் துடைத்துக் கொண்டே பாடங்களைப் படித்தல், சரியான கழிவறைகள் இல்லாமை, விடுதியின் சுகாதாரமற்ற நிலை, மாணவர்களுக்கு உணவு வழங்குவதில் ஏற்றத் தாழ்வு,என்ற சூழ் நிலை.
பொருளாதாரத்தில் மிகவும் வளர்ச்சி பெற்ற ஒரு நாட்டில் 25 வருடங்கள் வேலை செய்து விட்டு வந்த நான், பிறந்த ஊரில் நடந்து வரும் தமிழகத்தின் முதல் ஓரியண்டல் பள்ளியின் நிலையைப் பார்த்து பெரிதும் மனம் வருந்தினேன். அதன் விளைவாகப் பல கல்வியாளர்களை பள்ளிக்கு அழைத்து வந்து ஆய்வு செய்தேன். பல கட்டங்களில் செய்த ஆலோசனைப்படி, முதல் வேலையாக பள்ளியின் உள் கட்டமைப்பு வசதிகளை மாற்றி அமைப்பது. அடுத்து பள்ளிக் கூடத்தை கணிணி மயமாக்குதல் என முடிவு செய்தேன்.
கடந்த 7 வருடங்களில் புதிய வகுப்பறைகள், ஆய்வகங்கள், கணிணிவசதி, நூலக வசதிகள், புதிய பள்ளிவாசல், டைனிங் ஹால், கட்டில் வசதியுடன் கூடிய உறையுள், வார்டன் மற்றும் இமாம்களுக்கு தனித்தனி கட்டடங்கள் ஆகியவை உருவாகின. சுகாதார வசதிகள் மேம்படுத்தப்பட்டன. எல்லா மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான தரமான உணவு பரிமாற ஏற்பாடு செய்யப்பட்டது.
பல ஆண்டுகளாக ஆக்கிரமித்துக் கொண்டிருந்தவர்களை மிக்க சிரமத்துடன் வெளியேற்றியும், புதிதாக இடம் வாங்கியும் விளையாட்டு மைதானம் விரிவு படுத்தப்பட்டது.பொறுப்பேற்ற ஆண்டிலேயே அரசிடம் விடா முயற்சி செய்து சத்துணவு திட்டம் கொண்டு வரப்பட்டு, அதன் மூலம் உள்ளூர் மாணவ மாணவியர் 200 பேர் பயன் பெறுகின்றனர்.
அரபிப் பாடத் திட்டத்தில் காலத்திற்கேற்ப மாற்றம் செய்ய, புதுக் கோட்டை நிஜாம் ஓரியண்டல் அரபி உயர் நிலைப் பள்ளிக்கு நமது அரபி ஆசிரியர்களை அனுப்பியும், மற்ற ஓரியண்டல் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் உலமாப் பெருமக்களுடன் கலந்து ஆலோசித்தும் சமச்சீர் கல்வி மூலம் முடிவெடுக்க ஒரு குழு அமைக்கப்பட்டது.பள்ளி நிர்வாகம் சீர் செய்யப்பட்டு கணிணி மயமாக்கப்பட்டது.
பள்ளிக்கு நன்கொடை வழங்குபவர்கள் அரசாங்கத்திற்கு வரி செலுத்துபவர்களாக இருந்தால், அவர்கள் வழங்கும் நன் கொடைக்கு 15 சதவிகிதம் வரி விலக்கு அளிக்கும் 80-ஜி யில் அவர்களுக்கு பில் கொடுக்கப்படுகிறது.
கல்விச் சேவை செய்து வரும் எழுத்தாளர்கள், கல்வியாளர்கள், பத்திரிக்கையாளர்கள் ஆகியோரில் ஒருவர் கல்விக் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆண்டு தோறும் கௌரவிக்கப்படுகிறார். இது வரை ரங்கூன் சுலைமான், தத்துவக் கவிஞர் பதுருத்தீன், சீதக்காதி டிரஸ்ட் தக்கலை பஷீர், நீடூர் அல்ஹாஜ் சயீத், கவிஞர் பத்திரகையாளர் சோது குடியான் ஆகியோர் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.
திருச்சியிலுள்ள பி.எச்.ஈ.எல். நிறுவனம் இத்தனை ஆண்டுகள் ஆகியும் அதிக லாபகரமாச் செயல்படுகிறது. 10 ரூபாய் பங்கு 2500 ரூபாய்க்கு விற்றுக் கொண்டுள்ளது. அந்நிறுவனம் முதன் முதலாகத் தொடங்கிய போது அவர்கள் செய்தது பயிற்சி மையத்தைத் தொடங்கியது தான். முதலில் உற்பத்திக் கூடத்தை தொடங்கவில்லை. முதலில் தொடங்கியது மனித வள மேம்பாட்டு மையம். 1960 ஆம் ஆண்டுகளில் முதல் இரண்டு ஆண்டுகள் வேலையே நடைபெறவில்லை. பயிற்சி மட்டும் தான் நடந்தது. பயிற்சி அவ்வளவு முக்கியம்.அதனால் தான் அந்நிறுவனம் இன்று வரை நிலைத்து நிற்கிறது.
இது போன்றே நம் பள்ளி தொடங்கிய காலத்திலிருந்து மாணவர் மன்றம் ஏற்படுத்தப்பட்டு வாரம் ஒரு நாள் பேச்சுப் பயிற்சி அளிக்கப்படுகிறது. மாணவர் மன்றத்தின் மூலம் பயிற்சி பெற்று பின்னாளில் தலை சிறந்த மேதைகளாகவும், பேச்சாளர்களாகவும், அல்ஹாஜ் ஹிதாயத்துல்லா, முத்துப்பேட்டை அப்துல் ரஹ்மான், பள்ளப்பட்டி சதக்கத்தல்லாஹ், பேராசிரியர் நிஃமத்துல்லாஹ், போன்றோர் உருவாகினர்;.
தற்சமயம் இப்பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட பல்சமய மாணவ மாணவியர் உட்பட, அனைத்து சமயத்தைச் சேர்ந்த சுமார் 450 மாணவ மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர். இவர்களில் அதிகமானோர் முஸ்லிம் மாணவியராக இருப்பதால் அவர்கள் தொழுவதற்கும் மார்க்கக் கல்வி பயில்வதற்கும் புதிதாக கட்டப்பட்டுள்ள தக்வா பள்ளி என்னும் இறையில்லத்தின் மேல் தளம் விரிவாக்கப்பட வேண்டும்.
இப்பள்ளியின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியாக இருந்த பலரில் குறிப்பிட்டுச் சிலரை நான் இந்த நேரத்தில் குறிப்பிட்டாக வேண்டும். நான் பொறுப்பேற்று 7 வருடங்களாகத் தொடர்ந்து, நம் பள்ளியின் முன்னாள் மாணவர் அல்ஹாஜ் ஹிதாயத்துல்லாஹ் அவர்களின் வழிகாட்டுதலில் நான் மன உறுதியுடன் செயல்பட்டு வருகிறேன். எந்த நேரத்தில் போன் செய்தாலும், எப்பொழுது சென்று பார்த்தாலும் இன்முகத்தோடு வரவேற்று காரணத்தைக் கேட்டு, தக்க ஆலோசனைகள் வழங்கி, உதவி செய்துக் கொண்டு இருப்பவர்.
வார்த்தைச் சித்தர் வலம்புரி ஜான் அவர்கள், இவரைப் பற்றி எழுதியதை இங்கே குறிப்பிடுவது சாலப் பொருந்தும் என்றும் நினைக்கிறேன்.
குறிக்கோள் உடைய வாழ்க்கையை முன் வைத்து அறநெறி தவறாமல் மாத்திரமே வாழ வேண்டும் என்கிற உயர்ந்த எண்ணத்தில் தமது நாட்களை நகர்த்துகிறவர் ஹிதாயத்துல்லாஹ் அவர்கள். இவரோடு தொடர்புடைய பலர் ஒன்று இவரை முற்ற முழுக்க அறிந்துக் கொள்ளவில்லை, அல்லது அறிந்;துக் கொண்டதை வெளிப்படுத்துகிற விசால மனம் பெற்றிருக்க வில்லை. எவ்வளவு கசந்தாலும் இது தான் உண்மை.

முன்னுரை தொடரும் இன்ஷா அல்லாஹ்

0 comments: