முன்னாள் மாணவர் A.அப்துல் ரஜாக் அவர்கள் நான் பொறுப்பேற்று சில மாதங்கள் கழித்து பள்ளியின் வளர்ச்சியைப் பற்றி கேள்விப்பட்டு பள்ளிக்கு உதவி செய்ய எண்ணி குவைத்திலிருந்து திருநெல்வேலியில் இருந்த அவரது துணைவியாரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு குடும்பத்தில் எல்லோருக்கும் உதவி செய்து விட்டேன்.இப்போது நான் 6 ஆண்டு காலம் படித்து எந்த உதவியும் எதிர்பார்க்காத பள்ளிக்கூடத்திற்கு உதவி செய்ய உதவி செய்ய எண்ணுகிறேன் என்று ஆலோசனை கேட்டதற்கு உங்கள் மனதில் ஷைத்தான் புகுவதற்கு முன் உதவி செய்து விடுங்கள் என்று சொன்னார்கள் அந்த மாதரசி.
6 வருடம் முன்பு அவர்களின் முதல் உதவி 50000 (ஐம்பது ஆயிரம் ) ரூபாய் வந்து சேர்ந்தது. இந்த 6 வருடங்களில் பல இலட்ச ரூபாய்கள் இந்தப் பள்ளிக்கு உதவி நிதியாக வழங்கியிருக்கிறார்கள். அவர்கள் பணி புரியும் குவைத் பைனான்ஸ் ஹவுஸ் (KUWAIT FINANCE HOUSE)மூலம் அவர் எங்கே உட்கார்ந்து உணவு அருந்தினாரோ அதே இடத்தில் டைனிங் ஹாலையும் மாணவர் தங்கும் உறையுளையும் கட்டித் தந்தார்கள். பொன் விழா நினைவு கட்டடத்தின் ஒரு வகுப்பறையும் இவர் உதவியுடன் கட்டப்பட்டதே.மனவேதனைக்கு மருந்திடுபவர். பள்ளியின் வளர்ச்சியில் ஒவ்வொரு விஷயத்திலும் பங்கு கொள்பவர்.முன்னாள் மாணவர்களில் இவர் ஒரு மாணிக்கம். என்னுடைய தஹஜ்ஜத் தொழுகையின் துஆவில் இடம் பெறுபவர்.
M.அப்துல் ரஹ்மான். முன்னாள் மாணவர். முத்துப் பேட்டையைச் சேர்ந்தவர். பள்ளியில் படிக்கும் போதே பேச்சுப் போட்டிகளில் பல பரிசுகளைக் குவித்தவர். துபாய் ஈமான் ( IMAN) சங்கத்தின் தலைவர் அல்ஹாஜ் சலாஹுத்தீன் காக்கா ( Director E.T.A ) அவர்களின் வழிகாட்டுதலில் துபாய் ஈமான் சங்கத்தின் துணைத் தலைவராகவும், காயிதே மில்லத் பேரவையின் தலைவராகவும் செயல் பட்டு வருகிறார். துபாயில் உள்ள தமிழர்கள் சந்திக்கும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் இவரை நாடியே பலரும் உதவிகள் பெற்று வருகின்றனர்.முன்னாள் அமைப்பின் முதல் நிகழ்வு 2001ஆம் ஆண்டு நம்பள்ளியில் நடந்த போது ஒரு இலட்ச ரூபாய் உதவி செய்து பள்ளியின் வளர்ச்சியில் முத்திரை பதித்தவர். நான் துபாய் சென்ற போது 'துபாய் முன்னாள் மாணவர் அமைப்புக்கு' வழிவகை செய்தவர். தமக்கு இருக்கும் இடைவிடாத பணியிலும் தாம் படித்த பள்ளியை மறக்காமல் உறுதுணையாக இருப்பவர்.
பள்ளி வளாகத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள தக்வா பள்ளி என்னும் இறையில்லத்துக்கு உதவி செய்த கொடை வள்ளல், சிங்கை தொழிலதிபர் பரங்கிப் பேட்டை H.M. ஹனீபா அவர்களுக்கு நன்றி சொல்லக் கடமைப் பட்டுள்ளேன். நம் பள்ளி அரபி ஆசிரியர் அப்துல் காதிர் உமரி அவர்களால் வகுப்பறை கட்ட உதவி செய்ய அழைத்து வரப்பட்டு ஓட்டுக் கட்டடத்தில், நெருக்கடியில் 200 மாணவர்கள் தொழுவதைப் பார்த்தபோது அப்போது தான் தக்வா பள்ளிவாசல் அஸ்திவார வேலைகள் ஆரம்பிக்கப் பட்டிருந்த நிலையில் அதைப் பற்றி விரிவாகக் கேட்டு, அப்பள்ளியைக் கட்டிக் கொடுத்தார்கள். அல்லாஹ் அவர்களின் வியாபாரத்தில் பரக்கத்தையும், அவர்களுக்குப் பூரண உடல் நலத்தையும் தருவானாக.
ஆக்கூர் ஜின்னாத் தெரு சமீம் எனக்கு மருமகன் முறை உள்ளவர். நான் பொறுப்பேற்ற ஆண்டு முதல் எனக்கு பொருளாதார ரீதியில் அதிக ஒத்துழைப்பு நல்கியவர். தம்மாமிலிருந்து ஒவ்வொரு வருடமும் 15 ஏழை மாணவர்களுக்கு உதவி செய்து வருபவர். தன்னை வெளிக் காட்டிக் கொள்ளாத பெரிய மனது படைத்தவர். எனது நன்றிக்கும் நட்புக்கும் உரித்தானவர்.
நான் சென்னை செல்லும் போதெல்லாம் முதலில் அல்ஹாஜ்S.M.ஹிதாயத்துல்லாஹ் அவர்களைப் பார்த்து விட்டு, அடுத்து புதுப்பேட்டை ஆரிப்; அவர்களையும் பார்த்து விட்டு வருவது வழக்கம். இவரும் ஒரு முன்னாள் மாணவர். பழகுவதற்கு இனிமையானவர். எந்தத் தேவை என்று சென்றாலும் 10 ஆயிரம் ரூபாய்க்கு செக் கொடுத்து விடுவார். நான் அவர்களைப் பற்றி பேசும் போது 10 ஆயிரம் ஆரிப் என்றே அடை மொழியிட்டு அழைப்பேன். தான் படித்த பள்ளியின் வளர்ச்சியில் தனியாத ஆர்வம் உடையவர்.
மயிலாடுதுறை சுற்று வட்டாரப் பகுதிககளில் புகழ் பெற்ற ஒரு மனிதர், கவிஞர், கட்டுரையாசிரியர், சிந்தனைச் சித்தர்;, அல்ஹாஜ் நீடூர் A.M. சயீத் அண்ணன் அவர்கள். இவர்கள் இல்லாமல் ஓரியண்டல் அரபிப் பள்ளியில் ஒரு விழாவும் நடை பெற்றதில்லை. எனக்கு ஞான ஆசிரியர். நல்ல வழிகாட்டி.
பள்ளிவாசல் கட்டுவதிலிருந்து இன்று வரை எனக்கு தோளோடு தோள் நின்று உதவிகள் செய்து வரும் என் சகோதரர் ஆக்கூர் சின்ன மேலத் தெரு N.J.A.அமீனுத்தீன் அவர்களுக்கு நான் பெரிதும் கடமைப் பட்டுள்ளேன்.முன்னாள் மாணவர்களாகிய சென்னை I.அஹமது முஸ்தபா, மற்றும் அவரது சகோதரர் I.ஷேக் இஸ்மாயில், ஆக்கூர் M.R.ஹாஜா கமால், எனது மச்சான் M.அப்துல்லா,முன்னாள் தாளாளர் O.Aஅபூபக்கர், எனது தம்பி A.குத்புத்தீன். A.P.அப்துல் ரஷீது, M.M. ஜக்கரிய்யா, பள்ளப்பட்டி சதக்கத்துல்லா, சிப்கத்துல்லா, ஹாஷிம், அஜீஜுர்ரஹ்மான், ஆகிய யாவரும் நிர்வாகத்திற்கு உதவிகள் செய்தும் ஆலோசனைகள் வழங்கியும் வருகின்றனர். இவர்கள் அனைவருமே எனது நன்றிக்கு உரித்தானவர்கள்.
எனக்குத் தாளாளர் பொறுப்புக் கொடுத்து, நிர்வாகத்தை செம்மையாக நடத்தத் தேவையான முழு ஒத்துழைப்பும் கொடுத்து வரும், ஆக்கூர் முஸ்லிம் ஜமாஅத் நிர்வாக சபைத் தலைவர் A.சிகாபுத்தீன் அவர்களுக்கும் நிர்வாக சபை உறுப்பினர்கள், ஜமாஅத்தார்கள் அனைவருக்கும், ஆக்கூரின் பெயரையும் புகழையும் தமிழ் கூறும் நல்லுலகம் அறியச் செய்த ஓரியண்டல் பள்ளி நிறுவனர் மர்ஹூம் M.S.Mஷரீப் அவர்களின் குடும்பத்தாருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்பான வேண்டு கோள்
இறையருளால் வகுப்பறைகள் பூர்த்தி அடைந்து விட்டாலும் இன்னும் ஏராளமான பணிகள் பூர்த்தி அடைய வேண்டியுள்ளன. நூலகம் 400 சதுர அடியில் தான் உள்ளது. இது போதாது. குறைந்த மாணவர்களே பயன்பெறுகின்றனர். 800 சதுர அடியில் அஸ்திவாரம் போடப்பட்டு இது பொன் விழா ஆண்டிலேயே பூர்த்தி அடைய வேண்டும். அல்லாஹ் உதவி செய்வானாக. நூலகமும் மற்றும் +2 படித்துச் செல்லும் மாணவர்களுக்குத் தகவல் அறியும் மையமும் சேர்ந்து இருக்க வேண்டும் என எண்ணுகிறேன்.
கணிப் பொறி மையம், தற்போது 6 கணிப்பொறியுடன் 400 சதுர அடியில் இயங்கி வருகிறது. அதுவும் 800 சதுர அடியில் விரிவுபடுத்தப்பட்டு, அதிகமான கணிப் பொறிகள் வாங்கப்பட வேண்டும்.
தற்சமயம் நடத்தப்பட்டு வரும் மேல் நிலைப் பள்ளியை முழுமையான தங்கும் வசதியுடன் கூடிய பள்ளியாக மாற்ற வேண்டும். அதற்கான கட்டடங்கள், உணவு விடுதிகள், மாணவர்கள் தங்கும் அறைகள் கட்டப்பட வேண்டும். மாணவர்கள் நல உதவி மையமும் ஏற்படுத்தப்பட வேண்டும்.
கேளுங்கள் கொடுக்கப்படும். நாம் கேட்டதெல்லாம் கிடைக்குமா? ஆம் எல்லாம் கிடைக்கும். நாம் கேட்பதற்கு உறு துணையாக உறுதியான நம்பிக்கையும்,அயராத உழைப்பும், தளராத முயற்சியும் இருக்கு மானால் இன்ஷா அல்லாஹ் எல்லாம் கிடைக்கும்.
-------------------------------------------------------
2 comments:
நல்ல எழுத்து நடை கைவரப்பெற்ற நீங்கள் ஏன் பொது இடத்தில் உங்கள் பதிவு வருமாறு செய்யக்கூடாது? வாசகர் வட்டம் பெரிதாகும் அல்லவா?
உதாரணமாக தேன்கூடு,தமிழ்மணம்,சற்றுமுன்
நமது இப்பதிவு தேன்கூடு,தமிழ்மணம்,தமிழ்வெளி,சத்தியமார்க்கம்,சித்தார்கோட்டை, மற்றும் oneindia,ஆகிய திரட்டிகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தங்கள் ஆலோசனைக்கு நன்றி.
Post a Comment