மேல்நிலைத் தேர்வில் 80% பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாதந்தோறும் உதவித் தொகை மத்திய அரசு உத்தரவு
சென்னை, ஜன.9: தமிழகத்தில் மேல்நிலைத் தேர்வில் 80 சதவிகித மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாதாமாதம் உதவித் தொகை வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
கல்வித்துறை வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது:மேல்நிலை வகுப்பில் 80 சதவிகித மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு உதவித் தொகை வழங்க மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத்துறை முடிவு செய்துள்ளது. மேல்நிலைப் படிப்பு முடித்துவிட்டு கல்லூரிகளில் டிகிரி படிப்பவர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு உதவித் தொகை வழங்கப்படும். மாதந்தோறும் ரூ.1000 என 10 மாதங்கள் தரப்படுகிறது. முதுகலை மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.2000 என இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படும். இன்ஜினியரிங் படிப்பவர்களுக்கு 4வது மற்றும் 5வது ஆண்டுகளில் மட்டும் மாதம் ரூ.2000 வழங்கப்படும்.விஞ்ஞானம், வணிகவியல் மற்றும் சமூகவியல் படித்தவர்களுக்கு 3:2:1 என்ற விகிதத்தில் வழங்கப்படும். மத்திய அரசின் இட ஓதுக்கீடு முறையான தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி வகுப்பினர், இதர பிற்ப்படுத்தப்பட்ட வகுப்பினர், மற்ற சாதியினர் என்ற இட ஓதுக்கீட்டில் உள்ள சதவிகிதங்கள் பின்பற்றப்படும்.
இதற்கான விண்ணப்பங்களை
இணை இயக்குநர்(மேல்நிலை வகுப்பு),
பள்ளிக் கல்வித் துறையில் பெற்றுக்கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் இந்த மாதம் 28ம் தேதிக்குள் இணை இயக்குநருக்கே அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment