17.1.09

எட்டு வயதுச் சிறுவனின் கம்ப்யூட்டர் சாதனை



சாதாரண குடும்பங்களில் மூன்று அல்லது நான்காம் வகுப்புப் படிக்கும் ஒரு எட்டு வயது குழந்தையால் அதிகபட்சம் என்ன சாதிக்க முடியும்? நான்காம் வகுப்புப் படிக்கும் குழந்தை அப்படி என்ன சாதனை செய்து விடப்போகிறது என அலட்சியமாக நினைக்கும் பெற்றோர்களுக்கு, குழந்தைகளை அவர்களின் வளரும் வயதிலேயே அவர்களுக்குள் ஒளிந்துள்ள திறமையை இனம் கண்டு, அதில் போதிய பயிற்சியைக் கொடுத்தால், சாதிப்பதற்குச் சாதனை வயது என ஒன்று தேவையில்லை என்பதை நிரூபித்திருக்கிறார் எட்டு வயதான அமன் ரஹ்மான்.

ஒவ்வொருவருக்குள்ளும் ஒவ்வொரு தனித்திறமைகள் உண்டு. அதனை இனம் காண வேண்டியது பெற்றோர்களின் கடமை. தலைக்கு மேல் வளர்ந்தாலும் அவன்/அவள் எங்களுக்குச் சிறு குழந்தை தான் என பெற்றோர்கள் கூறுவது வழக்கம். இதனை வெறும் பேச்சோடு நிறுத்திக் கொள்ளாமல், அவர்களை அந்தத் தரத்திலேயே வளர்க்கவும் செய்கின்றனர். இதற்கு படித்தவர்கள், படிக்காதவர் என்ற வேறுபாடு இல்லை.இதற்கு மாற்றாக ஆங்காங்கே சிலர் மட்டும், மிகச் சரியாக தங்களின் குழந்தைகளின் திறமையை அடையாளம் கண்டு அவர்களை அவர்களின் விருப்பத்துறையில் சரியாக திருப்பி விடுகின்றனர். இவ்வாறு தூண்டுதலைச் சரியான திசை நோக்கிக் கொடுக்கும் பொழுது, மிகக் குறுகிய காலத்திலேயே அக்குழந்தைகள் தமது துறையில் பிரகாசிக்கத் துவங்கி விடுகின்றனர். இதற்கான மற்றொரு உதாரணமே அமன் ரஹ்மான்.இவர் கம்ப்யூட்டர் அனிமேஷன் படங்களுக்கான தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் பெற்று சர்வதேச அளவில் அனைவரையும் வியப்பிலாழ்த்தியுள்ளார்.
வட இந்தியாவின் உத்தராகந்த் மாநிலத்தின் தெஹ்ராடனைச் சேர்ந்தவரான இந்த எட்டு வயது சுட்டி, இப்போது பெரியவர்களுக்கு அனிமேஷன் கற்றுக் கொடுப்பதில் பிஸியாக உள்ளார். இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட அனிமேஷன் படங்களை அமன் உருவாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும், கின்னஸ் புத்தகத்தில் "இளம் வயது சாதனையாளர்கள்" பட்டியலில் இடம் பெற முயற்சிகள் செய்து கொண்டுள்ளார்.
எட்டு வயதிலேயே தெஹ்ராடனில் உள்ள கலைக் கல்லூரியில் பயிற்சியாளராக உள்ள அமன் ரஹ்மான், மிகவும் பின் தங்கிய குடும்பத்தைச் சார்ந்தவர். இவரது தந்தை படிப்பறிவற்றவர்; ஸ்கூட்டர் மெக்கானிக்காக உள்ளார். நான்கு குழந்தைகளுள்ள அமன் ரஹ்மானின் தந்தைக்கு இவர் நான்காவது பிள்ளை.தெஹ்ராடன் பகுதியில் "லிட்டில் பில் கேட்ஸ்" என்று யாராவது கேட்டால் அவர்களின் கையைப் பிடித்து அமன் ரஹ்மான் வீட்டில் கொண்டு வந்து விட்டு விடுவார்கள் அங்குள்ள மக்கள்.
மூன்று வயது முதலே கம்ப்யூட்டர் மீதான ஆர்வம் அமன் ரஹ்மானுக்கு அதிகரித்து விட்டதெனக் கூறுகிறார் இவரின் தாயாரான ஷப்னம் ரஹ்மான். பெரிய மகனுக்காக சிரமப்பட்டு வாங்கி வந்த பழைய கம்யூட்டர் ஒன்றில், அடிக்கடி அமர்ந்து பயிற்சி எடுத்துக் கொள்வாராம் அமன் ரஹ்மான். இதைக் கண்ணுற்ற உறவினர்களும் நண்பர்களும் அமன் ரஹ்மானை கம்ப்யூட்டர் வல்லுனர்களிடம் சென்று பயிற்சி பெற பெற்றோர்களைத் தூண்டியுள்ளனர்.இதைத் தொடர்ந்து இண்டராக்ட்டிவ் காலேஜ் ஆஃப் ஆர்ட்ஸ் என்ற கல்லூரி சென்று தன் மகனைப் பற்றி எடுத்துக் கூறியுள்ளார் அமன் ரஹ்மானின் தந்தை. அமனைப் பரிசோதித்து வியந்த கல்லூரி நிர்வாகம் அவரது கல்விக்காக ஸ்காலர்ஷிப்பை ஏற்பாடு செய்து கொடுத்தது.
கல்லூரியில் இணைந்த ஒரே மாதத்தில் அமன் ரஹ்மான் எழுதிய கம்யூட்டர் புரோக்ராம் ஒன்று அவரைப் புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றது. காரணம், கணினி வல்லுனர்களால் பதினைந்து மாதங்கள் கால அவகாசம் எடுத்து எழுதக் கூடிய நிரல் துண்டினை ஒரே மாதத்தில் உருவாக்கியிருந்தார்.
இவரது சாதனைகளைப் பாராட்டி மாநில அரசு இவருக்கு லேப்டாப் ஒன்றும், ஒரு இலட்ச ரூபாய் ரொக்கப் பரிசும் கொடுத்து ஊக்குவித்துள்ளது.அத்துடன் கின்னஸ் புத்தகத்தில் இளம் வயது சாதனையாளர்களுக்கான பட்டியலில் இடம் பெற விண்ணப்பித்திருக்கிறார் அமன் ரஹ்மான். இதில் தமக்குக் கண்டிப்பாக இடம் கிடைக்கும் என்று உறுதியாக நம்புகிறார்.
அமன் ரஹ்மானின் திறமையைக் கேள்விப்பட்ட உடனேயே, ஆஸ்திரேலிய கம்ப்யூட்டர் நிறுவனம் ஒன்று அவரை ஆஸ்திரேலியாவில் வந்து பணியாற்ற அழைப்பு விடுத்திருக்கிறது. தமது குடும்பத்தினரோடு சேர்ந்து இதனை மறுத்துள்ள அமன் ரஹ்மான், தமது சேவை இந்தியாவிற்கு உதவிடும் வகையில் தாம் இந்தியாவிலேயே பணிபுரிய விரும்புவதாகக் கூறியுள்ளார்.
ஏழ்மையான சூழலில் பிறந்து வளர்ந்த அமன் ரஹ்மான் போன்ற இளம் விஞ்ஞானிகளை அலட்சியப் படுத்தி ஒதுக்கிவிடாமல் இனம் கண்டு, தகுந்த பயிற்சியும் முறையான உதவிகளையும் செய்ய இந்திய அரசு முன்வரவேண்டும் என்பதோடு வளரும் குழந்தைகள், அவர்கள் விரும்பும் துறை எது என்பதைச் சரியாக இனம்கண்டு அதன்பால் அவர்களைத் திருப்பி விடுவதற்குப் பெற்றோர்கள் தகுந்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே சத்தியமார்க்கம்.காம் தளத்தின் ஆவல்.
நன்றி: சத்தியமார்க்கம்.காம்

0 comments: