29.9.07

முன்னுரையின் தொடர்ச்சி


முன்னாள் மாணவர் A.அப்துல் ரஜாக் அவர்கள் நான் பொறுப்பேற்று சில மாதங்கள் கழித்து பள்ளியின் வளர்ச்சியைப் பற்றி கேள்விப்பட்டு பள்ளிக்கு உதவி செய்ய எண்ணி குவைத்திலிருந்து திருநெல்வேலியில் இருந்த அவரது துணைவியாரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு குடும்பத்தில் எல்லோருக்கும் உதவி செய்து விட்டேன்.இப்போது நான் 6 ஆண்டு காலம் படித்து எந்த உதவியும் எதிர்பார்க்காத பள்ளிக்கூடத்திற்கு உதவி செய்ய உதவி செய்ய எண்ணுகிறேன் என்று ஆலோசனை கேட்டதற்கு உங்கள் மனதில் ஷைத்தான் புகுவதற்கு முன் உதவி செய்து விடுங்கள் என்று சொன்னார்கள் அந்த மாதரசி.
6 வருடம் முன்பு அவர்களின் முதல் உதவி 50000 (ஐம்பது ஆயிரம் ) ரூபாய் வந்து சேர்ந்தது. இந்த 6 வருடங்களில் பல இலட்ச ரூபாய்கள் இந்தப் பள்ளிக்கு உதவி நிதியாக வழங்கியிருக்கிறார்கள். அவர்கள் பணி புரியும் குவைத் பைனான்ஸ் ஹவுஸ் (KUWAIT FINANCE HOUSE)மூலம் அவர் எங்கே உட்கார்ந்து உணவு அருந்தினாரோ அதே இடத்தில் டைனிங் ஹாலையும் மாணவர் தங்கும் உறையுளையும் கட்டித் தந்தார்கள். பொன் விழா நினைவு கட்டடத்தின் ஒரு வகுப்பறையும் இவர் உதவியுடன் கட்டப்பட்டதே.மனவேதனைக்கு மருந்திடுபவர். பள்ளியின் வளர்ச்சியில் ஒவ்வொரு விஷயத்திலும் பங்கு கொள்பவர்.முன்னாள் மாணவர்களில் இவர் ஒரு மாணிக்கம். என்னுடைய தஹஜ்ஜத் தொழுகையின் துஆவில் இடம் பெறுபவர்.
M.அப்துல் ரஹ்மான். முன்னாள் மாணவர். முத்துப் பேட்டையைச் சேர்ந்தவர். பள்ளியில் படிக்கும் போதே பேச்சுப் போட்டிகளில் பல பரிசுகளைக் குவித்தவர். துபாய் ஈமான் ( IMAN) சங்கத்தின் தலைவர் அல்ஹாஜ் சலாஹுத்தீன் காக்கா ( Director E.T.A ) அவர்களின் வழிகாட்டுதலில் துபாய் ஈமான் சங்கத்தின் துணைத் தலைவராகவும், காயிதே மில்லத் பேரவையின் தலைவராகவும் செயல் பட்டு வருகிறார். துபாயில் உள்ள தமிழர்கள் சந்திக்கும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் இவரை நாடியே பலரும் உதவிகள் பெற்று வருகின்றனர்.முன்னாள் அமைப்பின் முதல் நிகழ்வு 2001ஆம் ஆண்டு நம்பள்ளியில் நடந்த போது ஒரு இலட்ச ரூபாய் உதவி செய்து பள்ளியின் வளர்ச்சியில் முத்திரை பதித்தவர். நான் துபாய் சென்ற போது 'துபாய் முன்னாள் மாணவர் அமைப்புக்கு' வழிவகை செய்தவர். தமக்கு இருக்கும் இடைவிடாத பணியிலும் தாம் படித்த பள்ளியை மறக்காமல் உறுதுணையாக இருப்பவர்.
பள்ளி வளாகத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள தக்வா பள்ளி என்னும் இறையில்லத்துக்கு உதவி செய்த கொடை வள்ளல், சிங்கை தொழிலதிபர் பரங்கிப் பேட்டை H.M. ஹனீபா அவர்களுக்கு நன்றி சொல்லக் கடமைப் பட்டுள்ளேன். நம் பள்ளி அரபி ஆசிரியர் அப்துல் காதிர் உமரி அவர்களால் வகுப்பறை கட்ட உதவி செய்ய அழைத்து வரப்பட்டு ஓட்டுக் கட்டடத்தில், நெருக்கடியில் 200 மாணவர்கள் தொழுவதைப் பார்த்தபோது அப்போது தான் தக்வா பள்ளிவாசல் அஸ்திவார வேலைகள் ஆரம்பிக்கப் பட்டிருந்த நிலையில் அதைப் பற்றி விரிவாகக் கேட்டு, அப்பள்ளியைக் கட்டிக் கொடுத்தார்கள். அல்லாஹ் அவர்களின் வியாபாரத்தில் பரக்கத்தையும், அவர்களுக்குப் பூரண உடல் நலத்தையும் தருவானாக.
ஆக்கூர் ஜின்னாத் தெரு சமீம் எனக்கு மருமகன் முறை உள்ளவர். நான் பொறுப்பேற்ற ஆண்டு முதல் எனக்கு பொருளாதார ரீதியில் அதிக ஒத்துழைப்பு நல்கியவர். தம்மாமிலிருந்து ஒவ்வொரு வருடமும் 15 ஏழை மாணவர்களுக்கு உதவி செய்து வருபவர். தன்னை வெளிக் காட்டிக் கொள்ளாத பெரிய மனது படைத்தவர். எனது நன்றிக்கும் நட்புக்கும் உரித்தானவர்.
நான் சென்னை செல்லும் போதெல்லாம் முதலில் அல்ஹாஜ்S.M.ஹிதாயத்துல்லாஹ் அவர்களைப் பார்த்து விட்டு, அடுத்து புதுப்பேட்டை ஆரிப்; அவர்களையும் பார்த்து விட்டு வருவது வழக்கம். இவரும் ஒரு முன்னாள் மாணவர். பழகுவதற்கு இனிமையானவர். எந்தத் தேவை என்று சென்றாலும் 10 ஆயிரம் ரூபாய்க்கு செக் கொடுத்து விடுவார். நான் அவர்களைப் பற்றி பேசும் போது 10 ஆயிரம் ஆரிப் என்றே அடை மொழியிட்டு அழைப்பேன். தான் படித்த பள்ளியின் வளர்ச்சியில் தனியாத ஆர்வம் உடையவர்.
மயிலாடுதுறை சுற்று வட்டாரப் பகுதிககளில் புகழ் பெற்ற ஒரு மனிதர், கவிஞர், கட்டுரையாசிரியர், சிந்தனைச் சித்தர்;, அல்ஹாஜ் நீடூர் A.M. சயீத் அண்ணன் அவர்கள். இவர்கள் இல்லாமல் ஓரியண்டல் அரபிப் பள்ளியில் ஒரு விழாவும் நடை பெற்றதில்லை. எனக்கு ஞான ஆசிரியர். நல்ல வழிகாட்டி.
பள்ளிவாசல் கட்டுவதிலிருந்து இன்று வரை எனக்கு தோளோடு தோள் நின்று உதவிகள் செய்து வரும் என் சகோதரர் ஆக்கூர் சின்ன மேலத் தெரு N.J.A.அமீனுத்தீன் அவர்களுக்கு நான் பெரிதும் கடமைப் பட்டுள்ளேன்.முன்னாள் மாணவர்களாகிய சென்னை I.அஹமது முஸ்தபா, மற்றும் அவரது சகோதரர் I.ஷேக் இஸ்மாயில், ஆக்கூர் M.R.ஹாஜா கமால், எனது மச்சான் M.அப்துல்லா,முன்னாள் தாளாளர் O.Aஅபூபக்கர், எனது தம்பி A.குத்புத்தீன். A.P.அப்துல் ரஷீது, M.M. ஜக்கரிய்யா, பள்ளப்பட்டி சதக்கத்துல்லா, சிப்கத்துல்லா, ஹாஷிம், அஜீஜுர்ரஹ்மான், ஆகிய யாவரும் நிர்வாகத்திற்கு உதவிகள் செய்தும் ஆலோசனைகள் வழங்கியும் வருகின்றனர். இவர்கள் அனைவருமே எனது நன்றிக்கு உரித்தானவர்கள்.
எனக்குத் தாளாளர் பொறுப்புக் கொடுத்து, நிர்வாகத்தை செம்மையாக நடத்தத் தேவையான முழு ஒத்துழைப்பும் கொடுத்து வரும், ஆக்கூர் முஸ்லிம் ஜமாஅத் நிர்வாக சபைத் தலைவர் A.சிகாபுத்தீன் அவர்களுக்கும் நிர்வாக சபை உறுப்பினர்கள், ஜமாஅத்தார்கள் அனைவருக்கும், ஆக்கூரின் பெயரையும் புகழையும் தமிழ் கூறும் நல்லுலகம் அறியச் செய்த ஓரியண்டல் பள்ளி நிறுவனர் மர்ஹூம் M.S.Mஷரீப் அவர்களின் குடும்பத்தாருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்பான வேண்டு கோள்
இறையருளால் வகுப்பறைகள் பூர்த்தி அடைந்து விட்டாலும் இன்னும் ஏராளமான பணிகள் பூர்த்தி அடைய வேண்டியுள்ளன. நூலகம் 400 சதுர அடியில் தான் உள்ளது. இது போதாது. குறைந்த மாணவர்களே பயன்பெறுகின்றனர். 800 சதுர அடியில் அஸ்திவாரம் போடப்பட்டு இது பொன் விழா ஆண்டிலேயே பூர்த்தி அடைய வேண்டும். அல்லாஹ் உதவி செய்வானாக. நூலகமும் மற்றும் +2 படித்துச் செல்லும் மாணவர்களுக்குத் தகவல் அறியும் மையமும் சேர்ந்து இருக்க வேண்டும் என எண்ணுகிறேன்.
கணிப் பொறி மையம், தற்போது 6 கணிப்பொறியுடன் 400 சதுர அடியில் இயங்கி வருகிறது. அதுவும் 800 சதுர அடியில் விரிவுபடுத்தப்பட்டு, அதிகமான கணிப் பொறிகள் வாங்கப்பட வேண்டும்.
தற்சமயம் நடத்தப்பட்டு வரும் மேல் நிலைப் பள்ளியை முழுமையான தங்கும் வசதியுடன் கூடிய பள்ளியாக மாற்ற வேண்டும். அதற்கான கட்டடங்கள், உணவு விடுதிகள், மாணவர்கள் தங்கும் அறைகள் கட்டப்பட வேண்டும். மாணவர்கள் நல உதவி மையமும் ஏற்படுத்தப்பட வேண்டும்.
கேளுங்கள் கொடுக்கப்படும். நாம் கேட்டதெல்லாம் கிடைக்குமா? ஆம் எல்லாம் கிடைக்கும். நாம் கேட்பதற்கு உறு துணையாக உறுதியான நம்பிக்கையும்,அயராத உழைப்பும், தளராத முயற்சியும் இருக்கு மானால் இன்ஷா அல்லாஹ் எல்லாம் கிடைக்கும்.
-------------------------------------------------------

27.9.07

பொன் விழா மலர் முன்னுரை

நம் பள்ளியின் பொன் விழா நினைவாக வெளியிடப்பட்டுள்ள சிறப்பு மலரில் பள்ளியின் இந்நாள் தாளாளர் அல்ஹாஜ் முஹம்மது இக்பால் அவர்கள் எழுதியுள்ள
முன்னுரை
அல்ஹாஜ் முஹம்மது இக்பால்
செயலாளர் மௌலானா அபுல் கலாம் ஆஸாத் கிராமக் கமிட்டி
தாளாளர் ஆக்கூர் ஓரியண்டல் அரபி மேல் நிலைப் பள்ளி ஆக்கூர்
-------------------------------------------
மனிதனைப் படைத்து அவனுக்கு அறிவின் சக்திகளை வழங்கி பூமியில் அவனுக்குத் தன் பிரதிநிதித்துவப் பெருமையளித்து அவனுக்கு வழி காட்டுவதற்காகத் தூதுவர்களை அனுப்பி, வேதங்களை அருளி, நிறை ஞானத்துடனும், அளவிலா அருளுடனும் ஆட்சி புரியும் அண்டங்களின் ஒரே படைப்பாளனும் அதிபதியும் அதிகாரியுமாகிய இறைவனுக்கே எல்லாப் புகழும்.
இப்பள்ளியானது ஆக்கூர் ஜமாஅத்திற்குக் கட்டுப்பட்ட பள்ளியாக இருப்பதால், தாளாளர்கள் ஜமாஅத்தார்களால் தேர்ந்தெடுக்கப்படுவதால் தாளாளர்கள் அவரவர் தகுதி மற்றும் அனுபவத்திற்கு ஏற்ப பள்ளியின் வளர்ச்சியில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டு 53 வருடத்தில் எந்த அளவுக்கு வளர்ச்சி அடைய வேண்டுமோ அந்த அளவுக்கு வளர்ச்சி பெறவில்லை.
கல்வியை விட மனிதனுக்கு சிறப்பும் பாதுகாப்பும் தரக்கூடியது வேறெதுவும் இல்லை. காலத்திற்கேற்ப மாற்றங்கள் எப்பொழும் செய்துக் கொண்டே இருக்க வேண்டும். அரபி முக்கிய மொழியாக இருப்பதால் அதன் பாடத்திட்டத்தில் தனிக் கவனம், கற்றல் கற்பித்தல், மற்றும் மதிப்பீடு, கல்விக் கூட உள் கட்டமைப்பு வசதிகள் செய்தல், நிர்வாகம், வழிகாட்டுதல் மாணவர்களுக்கு உதவி, மற்றும் மாணவர்களைக் கண்காணித்தல், போன்றவைகள் ஒரு தாளாளருக்கு இருக்க வேண்டிய சிறப்பம்சங்களாகும். இந்தத் தொலை நோக்கோடு செயல் படும்போது பள்ளியின் வளர்ச்சியும் பெருமைப்படும் அளவுக்கு மாறுகிறது.
1994 ஆம் ஆண்டில் முன்னாள் தாளாளர் அண்ணன் அபூபக்கர் அவர்களின் பொறுப்பில் 3000 சதுர அடியில் மாணவர் விடுதியும் 1999 ஆம் ஆண்டில் 1600 சதுர அடியில் ஆக்கூர் கொடை வள்ளல் அண்ணன் அப்துல் ரஷீது அவர்கள் மூலம் உணவுக்கூடமும் கட்டி முடிக்கப்பட்டது.
நான் 2000 ஆம் ஆண்டில் பொறுப்பேற்ற போது ஓர் இறுக்கமான சூழ்நிலையின் அனுபவம் ஏற்பட்டது. 50 வருட பழங்கால ஓட்டுக் கட்டடங்கள் மாணவர் வியர்வையைத் துடைத்துக் கொண்டே பாடங்களைப் படித்தல், சரியான கழிவறைகள் இல்லாமை, விடுதியின் சுகாதாரமற்ற நிலை, மாணவர்களுக்கு உணவு வழங்குவதில் ஏற்றத் தாழ்வு,என்ற சூழ் நிலை.
பொருளாதாரத்தில் மிகவும் வளர்ச்சி பெற்ற ஒரு நாட்டில் 25 வருடங்கள் வேலை செய்து விட்டு வந்த நான், பிறந்த ஊரில் நடந்து வரும் தமிழகத்தின் முதல் ஓரியண்டல் பள்ளியின் நிலையைப் பார்த்து பெரிதும் மனம் வருந்தினேன். அதன் விளைவாகப் பல கல்வியாளர்களை பள்ளிக்கு அழைத்து வந்து ஆய்வு செய்தேன். பல கட்டங்களில் செய்த ஆலோசனைப்படி, முதல் வேலையாக பள்ளியின் உள் கட்டமைப்பு வசதிகளை மாற்றி அமைப்பது. அடுத்து பள்ளிக் கூடத்தை கணிணி மயமாக்குதல் என முடிவு செய்தேன்.
கடந்த 7 வருடங்களில் புதிய வகுப்பறைகள், ஆய்வகங்கள், கணிணிவசதி, நூலக வசதிகள், புதிய பள்ளிவாசல், டைனிங் ஹால், கட்டில் வசதியுடன் கூடிய உறையுள், வார்டன் மற்றும் இமாம்களுக்கு தனித்தனி கட்டடங்கள் ஆகியவை உருவாகின. சுகாதார வசதிகள் மேம்படுத்தப்பட்டன. எல்லா மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான தரமான உணவு பரிமாற ஏற்பாடு செய்யப்பட்டது.
பல ஆண்டுகளாக ஆக்கிரமித்துக் கொண்டிருந்தவர்களை மிக்க சிரமத்துடன் வெளியேற்றியும், புதிதாக இடம் வாங்கியும் விளையாட்டு மைதானம் விரிவு படுத்தப்பட்டது.பொறுப்பேற்ற ஆண்டிலேயே அரசிடம் விடா முயற்சி செய்து சத்துணவு திட்டம் கொண்டு வரப்பட்டு, அதன் மூலம் உள்ளூர் மாணவ மாணவியர் 200 பேர் பயன் பெறுகின்றனர்.
அரபிப் பாடத் திட்டத்தில் காலத்திற்கேற்ப மாற்றம் செய்ய, புதுக் கோட்டை நிஜாம் ஓரியண்டல் அரபி உயர் நிலைப் பள்ளிக்கு நமது அரபி ஆசிரியர்களை அனுப்பியும், மற்ற ஓரியண்டல் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் உலமாப் பெருமக்களுடன் கலந்து ஆலோசித்தும் சமச்சீர் கல்வி மூலம் முடிவெடுக்க ஒரு குழு அமைக்கப்பட்டது.பள்ளி நிர்வாகம் சீர் செய்யப்பட்டு கணிணி மயமாக்கப்பட்டது.
பள்ளிக்கு நன்கொடை வழங்குபவர்கள் அரசாங்கத்திற்கு வரி செலுத்துபவர்களாக இருந்தால், அவர்கள் வழங்கும் நன் கொடைக்கு 15 சதவிகிதம் வரி விலக்கு அளிக்கும் 80-ஜி யில் அவர்களுக்கு பில் கொடுக்கப்படுகிறது.
கல்விச் சேவை செய்து வரும் எழுத்தாளர்கள், கல்வியாளர்கள், பத்திரிக்கையாளர்கள் ஆகியோரில் ஒருவர் கல்விக் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆண்டு தோறும் கௌரவிக்கப்படுகிறார். இது வரை ரங்கூன் சுலைமான், தத்துவக் கவிஞர் பதுருத்தீன், சீதக்காதி டிரஸ்ட் தக்கலை பஷீர், நீடூர் அல்ஹாஜ் சயீத், கவிஞர் பத்திரகையாளர் சோது குடியான் ஆகியோர் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.
திருச்சியிலுள்ள பி.எச்.ஈ.எல். நிறுவனம் இத்தனை ஆண்டுகள் ஆகியும் அதிக லாபகரமாச் செயல்படுகிறது. 10 ரூபாய் பங்கு 2500 ரூபாய்க்கு விற்றுக் கொண்டுள்ளது. அந்நிறுவனம் முதன் முதலாகத் தொடங்கிய போது அவர்கள் செய்தது பயிற்சி மையத்தைத் தொடங்கியது தான். முதலில் உற்பத்திக் கூடத்தை தொடங்கவில்லை. முதலில் தொடங்கியது மனித வள மேம்பாட்டு மையம். 1960 ஆம் ஆண்டுகளில் முதல் இரண்டு ஆண்டுகள் வேலையே நடைபெறவில்லை. பயிற்சி மட்டும் தான் நடந்தது. பயிற்சி அவ்வளவு முக்கியம்.அதனால் தான் அந்நிறுவனம் இன்று வரை நிலைத்து நிற்கிறது.
இது போன்றே நம் பள்ளி தொடங்கிய காலத்திலிருந்து மாணவர் மன்றம் ஏற்படுத்தப்பட்டு வாரம் ஒரு நாள் பேச்சுப் பயிற்சி அளிக்கப்படுகிறது. மாணவர் மன்றத்தின் மூலம் பயிற்சி பெற்று பின்னாளில் தலை சிறந்த மேதைகளாகவும், பேச்சாளர்களாகவும், அல்ஹாஜ் ஹிதாயத்துல்லா, முத்துப்பேட்டை அப்துல் ரஹ்மான், பள்ளப்பட்டி சதக்கத்தல்லாஹ், பேராசிரியர் நிஃமத்துல்லாஹ், போன்றோர் உருவாகினர்;.
தற்சமயம் இப்பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட பல்சமய மாணவ மாணவியர் உட்பட, அனைத்து சமயத்தைச் சேர்ந்த சுமார் 450 மாணவ மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர். இவர்களில் அதிகமானோர் முஸ்லிம் மாணவியராக இருப்பதால் அவர்கள் தொழுவதற்கும் மார்க்கக் கல்வி பயில்வதற்கும் புதிதாக கட்டப்பட்டுள்ள தக்வா பள்ளி என்னும் இறையில்லத்தின் மேல் தளம் விரிவாக்கப்பட வேண்டும்.
இப்பள்ளியின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியாக இருந்த பலரில் குறிப்பிட்டுச் சிலரை நான் இந்த நேரத்தில் குறிப்பிட்டாக வேண்டும். நான் பொறுப்பேற்று 7 வருடங்களாகத் தொடர்ந்து, நம் பள்ளியின் முன்னாள் மாணவர் அல்ஹாஜ் ஹிதாயத்துல்லாஹ் அவர்களின் வழிகாட்டுதலில் நான் மன உறுதியுடன் செயல்பட்டு வருகிறேன். எந்த நேரத்தில் போன் செய்தாலும், எப்பொழுது சென்று பார்த்தாலும் இன்முகத்தோடு வரவேற்று காரணத்தைக் கேட்டு, தக்க ஆலோசனைகள் வழங்கி, உதவி செய்துக் கொண்டு இருப்பவர்.
வார்த்தைச் சித்தர் வலம்புரி ஜான் அவர்கள், இவரைப் பற்றி எழுதியதை இங்கே குறிப்பிடுவது சாலப் பொருந்தும் என்றும் நினைக்கிறேன்.
குறிக்கோள் உடைய வாழ்க்கையை முன் வைத்து அறநெறி தவறாமல் மாத்திரமே வாழ வேண்டும் என்கிற உயர்ந்த எண்ணத்தில் தமது நாட்களை நகர்த்துகிறவர் ஹிதாயத்துல்லாஹ் அவர்கள். இவரோடு தொடர்புடைய பலர் ஒன்று இவரை முற்ற முழுக்க அறிந்துக் கொள்ளவில்லை, அல்லது அறிந்;துக் கொண்டதை வெளிப்படுத்துகிற விசால மனம் பெற்றிருக்க வில்லை. எவ்வளவு கசந்தாலும் இது தான் உண்மை.

முன்னுரை தொடரும் இன்ஷா அல்லாஹ்

15.9.07

ஓரியண்டல் வரலாற்றில் ஒரு மைல்கல்

இறையருளால் கடந்த 22-07-2007 ஞாயிறு அன்று ஆக்கூர் ஓரியண்டல் அரபி மேல் நிலைப் பள்ளியின் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய அற்புதப் பொன் விழா அருமையாக நடந்தேறியது.
காலை நிகழ்ச்சியாக முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி மிகுந்த கோலாகலமாகத் தொடங்கியது. ஓய்வு பெற்ற முன்னாள் ஆசிரியர்களாகிய வி.முருகேசன் அய்யா, அப்துல் காதிர் மரைக்காயர் உமரி, இக்பால் சார் ஆகியோர் மேடையில் வீற்றிருக்க அருகருகே முன்னாள் மாணவப் பெருந்தகைகள் பலர் மேடையை அலங்கரிக்க விழா சிகழ்ச்சிகள் இனிதே ஆரம்பமாயின.
முன்னாள் மாணவர் (ஆக்கூர்) முஹம்மது ஜக்கரிய்யா அவர்கள் விழாவுக்குத் தலைமை வகித்தார். (பள்ளப்பட்டி) முஹம்மது சதக்கத்துல்லாஹ் அவர்கள் தம் தேனினும் இனிய குரலில் திருமறை வசனத்தை ஓத அரங்கமே நிசப்தமாக அற்புதக் கிராஅத்தில் இலயித்துப் போனது.
இந்நாள் தலைமை ஆசிரியர் திரு சி.சம்பத் குமார் அவர்கள் விழாவுக்கு வந்திருந்தோரை வரவேற்று வரவேற்புரை நிகழ்த்தினார். தொடர்ந்து முன்னாள் மாணவர்கள் தங்கள் மலரும் நினைவுகளை மனம் திறந்து பகிர்ந்துக் கொள்ள ஆரம்பித்தனர்.
முதலில் முன்னாள் மாணவர் (இராமநாதபுரம்) முஹ்யித்தீன் அப்துல் காதர் உரையாற்றினார். இவரைத் தெர்டர்ந்து மேடை ஏறியவர் பேராசிரியர் நிஃமத்துல்லாஹ் அவர்கள். பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லுஸரியில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணிபுரியும் இவர் ஆற்றிய உரையில் ஓரியண்டலில் பயின்ற போது 'ஏறாத மரங்கள் இல்லை திருடாத மாங்காய்கள் இல்லை' என்று ஒளிக்காமல் மறைக்காமல் உரைத்த போது அரங்கமே சிரித்தது.
மதுரையில் பெரும் தொழில் அதிபராகத் திகழும் முன்னாள் மாணவராகிய பள்ளப்பட்டி முஹம்மது சதக்கத்துல்லாஹ் அவர்கள் ஓரியண்டலில் கல்வி கற்றதால் அடைந்த உயர்வுகளைக் குறிப்பிட்டார்.
காஷ்மீரிலிருந்து கண்ணியாகுமரிவரை மாணவர்கள் வந்து இங்கு பயின்றுள்ளனர் என்பதற்கு உதாரணமாக கண்ணியாகுமரி கோட்டாரிலிருந்து ஆரம்பக் காலத்தில் வந்து பயின்ற முன்னாள் மாணவர் உரை நிகழ்த்திய பின்னர், சென்னையிலிருந்து முஹம்மது முஸ்தபா அவர்களும், அவரைத் தொடர்ந்து திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் அரபிப் பேராசிரியராகப் பணியாற்றும் இராஜபாளையம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் அவர்களும், இன்னும் பல முன்னாள் மாணவர்களும் தங்கள் இனிய நினைவுகளை எடுத்துரைத்தனர்.
முன்னாள் தலைமை ஆசிரியர் வி.முருகேசன் அய்யா அவர்கள் தாம் தலைமை ஆசிரியராகப் பதவி வகித்த நாட்களையும் இப்போது இப்பள்ளி அடைந்திருக்கும் முன்னேற்றங்ளையும் ஒப்பிட்டு ஆற்றிய உரை மிகவும் அற்புதமாக இருந்தது.
அப்துல் காதிர் மரைக்காயர் ஹஜ்ரத் அவர்கள் தாம் பள்ளியில் 1971 ஆம் ஆண்டு ஆசிரியராகச் சேர்ந்தது முதல் ஓய்வு பெரும் வரை ஓரியண்டலில் கழித்த நாட்களை நினைவு கூர்ந்தார்.
மாணவர்களின் இதயங்களைக் கொள்ளைக் கொண்ட இக்பால் சார் அவர்கள் ஓரியண்டலில் தாம் பட்ட சிரமங்களை மிகவும் நகைச்சுவையாக எடுத்துரைத்தது எல்லோரையும் கவர்ந்தது. கிட்டத்தட்ட 34 ஆண்டு காலத்தில் நடந்த நிகழ்ச்சிகளில் எவற்றை எடுத்துச் சொல்வது எவற்றை விடுவது? என்று இக்பால் சார் சொன்ன போது அவரது கண்களில் மட்டுமல்ல நமது கண்களிலும் நீர்;த்திவலைகள்.
நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்த முன்னாள் மாணவர் ஆக்கூர் முஹம்மது ஜக்கரிய்யா அவர்கள் ஓரியண்டலின் வரலாற்றை இரத்தினச் சுருக்கமாக எடுத்து வைத்து ஆற்றிய உரை மிகவும் பயனுள்ளச் செய்திகளைத் தாங்கியிருந்தது.
அடுத்து எழுந்தவர் முத்துப் பேட்டை அப்துல் ரஹ்மான். படிக்கும் காலத்திலேயே இலக்கிய மன்றக் கூட்டங்களைக் கலக்கியவர். புலவர் இராமானுஜம் சார் அவர்களிடம் பயிற்சி பெற்று பல்வேறு பேச்சுப் போட்டிகளில் பங்கு பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்தவர். பேச்சுக்கு சொல்லவா வேண்டும்? காலை நிகழ்ச்சிக்கு முத்தாய்ப்பாக இருந்தது இவரது பேருரை. இன்னும் கொஞ்ச நேரம் பேசியிருக்கக்; கூடாதா? என்று கேட்டவர்களை ஏங்க வைத்த இவர் உரையை அப்படியே ஒலிஒளிக் கோப்பாக இந்த வலைப்பதிவில் வெளியிடுவோம் இன்ஷா அல்லாஹ்.
நம் பள்ளியின் எல்லா முன்னேற்றங்களுக்கும் முதற்படியாக அனைத்து உதவிகளும் செய்து வரும் தமிழகம் அறிந்த அரசியல் பிரமுகர் ஹிதாயத்துல்லாஹ் அவர்கள் காலை நிகழ்ச்சியின் நிறைவுரை ஆற்றினார். தாம் அடிக்கடி ஓரியண்டல் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதாலும், துபாயிலிருந்து இந்த விழாவுக்காகவே வருகை தந்துள்ள முத்துப்பேட்டை அப்துல் ரஹ்மானுக்கு அதிக முக்கியத்துவம் தரவேண்டும் என்பதற்காகவும் தன் நிறைவுரையைச் சுருக்கமாக முடித்துக் கொண்ட அல்ஹாஜ் ஹிதாயத்துல்லாஹ் அவர்கள் அரசியல்வாதிகளில் தனித்தன்மை வாய்ந்தவர்.
இவர் தம் உரையில் தாம் ஓரியண்டல் விழாவில் கலந்து கொள்ளும் போது, இந்தப்பள்ளியின் ஒரு முன்னாள் மாணவராக மட்டுமே நிற்கிறேன் என்று சொன்ன போது இவரின் தன்னடக்கம் பளிச்சிட்டது.
பிற்பகல் 2 மணிக்கு காலை நிகழ்ச்சிகள் இனிதே நிறைவுற்றன.
மாலை 4 மணிக்கு மாபெரும் பொன் விழா இனிதே தொடங்கியது.
பள்ளித் தாளாளர் அல்ஹாஜ் முஹம்மது இக்பால் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.தொடர்ந்து

நீடூர் வழக்குரைஞர் அல்ஹாஜ் சயீத் அவர்கள்

நீடூர் மிஸ்பாஹுல் ஹுதா அரபிக் கல்லூரி முதல்வர்
சங்கைக்குரிய அப்துல் காதிர் பாக்கவி அவர்கள்,

உலகத் தமிழ் பண்பாட்டுக் கழகத் தலைவர்
ரபீவுத்தீன் அவர்கள்,

துபாய் ஈமான் சங்க துணைத் தலைவர்
(முன்னாள் மாணவர்) முத்துப்பேட்டை அப்துல் ரஹ்மான் அவர்கள்,

இஸ்லாமிய இலக்கிக் கழகச் செயலர்
(முன்னாள் மாணவர்) ஹிதாயத்துல்லாஹ் அவர்கள்,

திரு மணவானராமானுஜம் அவர்கள்,
மாவட்டக் கல்வி அலுவலர் மயிலாடுதுறை

திரு ராமநாதன் அவர்கள்,
பவானி சட்டமன்ற உறுப்பினர்

திரு ராஜகுமார் அவர்கள்,
மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர்

திரு மு.க. பெரிய சாமி அவர்கள்,
பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர்

ஆகியோர் சிறப்புரை ஆற்றிய பின்னர்
மாண்பு மிகு வணிக வரித்துறை அமைச்சர்
சி.நா. மீ உபயதுல்லா அவர்கள் விழா நிறைவுப் பேருரை நிகழ்த்தினார்

விழாவில் பள்ளியின் வளர்ச்சிக்கு அருந்தொண்டாற்றிய பல்வேறு முன்னாள் மாணவர்கள் அமைச்சர் அவர்களால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.

விழாவில் பொன் விழா சிறப்பு மலர் வெளியிடப்பட்டது.

பொன் விழா நினைவாகக் கட்டப்பட்ட வகுப்பறைகள் சமுதாயப் புரவலர்களால் திறந்து வைக்கப்பட்டன.
பள்ளியின் வளர்ச்சியில் அதிக அக்கரை கொண்ட முன்னாள் மாணவர்கள் குறிப்பாக குவைத் பைனான்ஸ் ஹவுஸ் அப்துல் ரஜாக் (திருநெல்வேலி) போன்றவர்கள் பள்ளிக்கு செய்த பொருளாதார உதவிகள் முன்னாள் மாணவர்களுக்கு மிகச் சிறந்த முன்னுதாரணம்.

தமிழமெங்குமிருந்து சுமார் 60 க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் விழாவுக்கு வருகை தந்து சிறப்பித்தனர். அல்ஹம்து லில்லாஹ்.
ஆக்கூர் ஓரியண்டலில் பயின்ற எண்ணற்ற முன்னாள் மாணவர்கள் அரபு நாடுகளிலும் இன்னுல் பல்வேறு மேலை நாடுகளிலும் பரவி வாழ்கின்றனர் என்பது உண்மை தான். போதிய அவகாசம் இல்லாமல் அவசரமாகச் செய்யப்பட்ட விழா ஏற்பாடுகளால் இந்த அற்புத விழாவில் பங்கு பெற இயலவில்லையே என்னும் ஆதங்கம் கடல் கடந்து வாழும் எம்மைப் போன்ற முன்னாள் மாணவர்களுக்கு இருக்கிறது.
தமிழகத்திலேயே இருக்கும் இன்னும் ஏராளமான முன்னாள் மாணவர்களே நீங்கள் எங்கே போனீர்கள்? நம்மை வளர்த்து ஆளாக்கி அறிவையும் ஆற்றலையும் தந்த நமது ஆக்கூர் ஓரியண்டலில் நடைபெற்ற இந்தப் பொன் விழா, வரலாற்று ஏடுகளில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒரு விழா அல்லவா? இப்படிப்பட்ட அரிய விழாவில் கலந்துக் கொள்ளும் ஆசை உங்களுக்கு ஏன் இல்லாமல் போனது? ஆயிரம் அலுவல்கள் இருக்கலாம். அவற்றை எல்லாம் ஒரு நாள் மட்டும் ஒதுக்கி வைக்க உங்களுக்கு முடியவில்லையா?
விழாவுக்கு வந்து தமது கடந்த கால வாழ்க்கையை மலரும் நினைவுகளாக மனதில் அசை போட்டு, மறக்க முடியாத மகிழ்ச்சியுடன் திரும்பிச் சென்ற இந்த 60 க்கும் மேற்பட்ட மாமனிதர்களைக் கேட்டுப் பாருங்கள். தாங்கள் அடைந்த பேரின்பத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்வார்கள்.
இன்ப நினைவுகளுடன் புத்துணர்வு பெற்று, புளகாங்கிதம் அடைந்து, புதிய தெம்புடன் புறப்பட்டுப் போனவர்கள் இந்தப் பள்ளியில் இன்று நடபெற்ற இந்தப் பொன் விழா நிகழ்ச்சிகளை என்றென்றும் தங்கள் இதயத்தில் தேக்கி வைத்திருப்பார்கள். அடுத்து ஒரு விழா இனி எப்போது? என்று இவர்களுடன் நாமும் சேர்ந்து ஏங்குகிறோம்.
நம்மை வளர்த்து உருவாக்கி நமக்கு அறிவைப் புகட்டிய நமது ஆக்கூர் ஓரியண்டல் மேல் நிலைப் பள்ளி மேலும் வளர்ந்து இன்னும் ஆயிரமாயிரம் அறிஞர் பெருமக்களை உருவாக்கவும், இப்பள்ளியின் சேவை சமுதாயத்திற்கு பயனளிக்கவும் இறைவனை இறைஞ்சுவோம்.

பொன் விழா நிகழ்ச்சி குறுந்தகடுகள் மற்றும் பொன் விழா சிறப்பு மலர் ஆகியவை சவூதி அரேபியாவில் தேவைப்படுவோர் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி masdooka@hotmail.com

13.9.07

புனித ரமளான் நல்வாழ்த்துக்கள்

அகிலமெங்கும் வாழும் ஆக்கூர் ஓரியண்டல் முன்னாள் மாணவர்கள், மற்றும் அவர்கள்தம் குடும்பத்தினர், நண்பர்கள், உற்றார் உறவினர் அனைவருக்கும் சங்கமிகு ரமளான் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்தப் புனித ரமளானின் நற்பயனை அடைந்தவர்களாக நம் அனைவரையும் எல்லாம் வல்ல அல்லாஹ் ஆக்கியருள்வானாக. ஆமீன்.ஓரியண்டலில் நாம் பயின்ற காலகட்டத்தில் நாம் உண்ட உணவையும், அந்த உணவை உண்டு நாம் நோற்ற நோன்புகளையும் கொஞ்சம் நினைத்துப் பார்ப்போம்.

இன்று இறையருளால் நம்மில் பலர் மிகுந்த வசதி வாய்ப்புகளுடன் வாழ்கிறோம். ஆனால் நாம் பயின்ற பள்ளியில் இன்றும் வசதி குறைந்த எண்ணற்ற மாணவர்கள் நோன்பு நோற்கின்றனர். அவர்களையும் கொஞ்சம் நினைத்துப் பார்ப்போமா?நம்மில் எத்தனையோ பேர் பல ஆண்டுகள் இலவச உணவை உண்டோம். அதற்கு என்ன கைம்மாறு செய்தோம்? இப்போதாவது நம்மால் இயன்ற உதவிகளைச் செய்வதற்கு இன்னுமா நமது மணம் இடம் கொடுக்கவில்லை?

தங்களால் இயன்ற உதவிகளைச் செய்யுங்கள். அதனால் பயன் பெறும் மாணவர்கள் தங்களுக்காக துஆச் செய்வார்கள். மார்க்கக் கல்வி பயிலும் அந்த மாணவர்களின் துஆ இம்மையிலும் மறுமையிலும் நமக்கு பயனளிக்கும். இன்ஷா அல்லாஹ்.

3.9.07

மகத்தான விழா

ஆக்கூர் ஓரியண்டல் தனது இலட்சியப் பயணத்தில் எத்தனையோ தாளாளர்களைக் கண்டிருக்கிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் பொறுப்பேற்ற தாளாளர்கள் பல்வேறு இக்கட்டான சூழ்நிலைகளிலும் பக்குவமாக இந்தப் பள்ளியை வழிநடத்திச் சென்றுள்ளனர். அவர்களில் எவரது உழைப்பையும் குறைத்து மதிப்பிட முடியாது. அவரவர் காலத்திற்கும் சூழ்நிலைக்கும் ஏற்ப அவர்களது பங்களிப்பைத் திறம்பட நல்கி ஓரியண்டல் வரலாற்றில் தத்தமது முத்திரையை பதித்தனர்.
தற்சமயம் தாளாளர் பொறுப்பில் இருக்கும் கண்ணியத்திற்குரிய அல்ஹாஜ் A.முஹம்மது இக்பால் அவர்கள் பள்ளியின் பெருமையை பாரெங்கும் பரவச் செய்ய மேற்கொண்டு வரும் முயற்சிகள் அனைத்தும் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை.பள்ளியின் முன்னேற்றத்தில் அதிக கவனமும் அக்கரையும் கொண்ட அன்னாரின் தூய திருப் பணிகள் அனைத்திலும் அல்லாஹ் வெற்றியைத் தருவானாக! ஆமீன்.
முன்னேற்றத்தின் ஒரு படியாக ஓரியண்டல் வரலாற்றில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தும் ஒரு மகத்தான விழா இறையருளால் கடந்த 22-07-2007 ஞாயிறு அன்று நடந்தேறியது. ஆம் நம் பள்ளியின் பொன் விழா நிகழ்ச்சி தான் அது.
அன்றைய தினம் இனிய காலைப் பொழுதில், பல்வேறு முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்ட கலந்துரையாடல் நிகழ்ச்சியும், பொன் அந்தி மாலைப் பொழுதில் ஆன்றோர்கள் சான்றோர்கள் அறிஞர் பெருமக்கள் கலந்து கொண்ட மாபெரும் மாநாடும் இறையருளால் இனிதே நடந்தேறியது. அல்ஹம்து லில்லாஹ். விழா பற்றிய விரிவான செய்திகளும் வர்ணனைகளும் வெகு விரைவில் நமது இந்த வலைப் பதிவில் இடம் பெறும் இன்ஷா அல்லாஹ்.
உலகெங்கும் வாழும் ஆக்கூர் ஓரியண்டல் நண்பர்களை ஒருங்கினைக்கும் இந்த வலைப் பதிவுக்கு, பதிவு தொடங்கிய ஒரு மாத காலத்தில் 400க்கும் அதிகமானோர் உலகின் பல பாகங்களிலிருந்தும் வருகை தந்திருப்பதும், பதிவைப் பாராட்டி மின்னஞ்சல் மூலம் பலர் வாழ்த்தியிருப்பதும் நமக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகின்றது. புகழும் பெருமையும் இறைவனுக்கே சொந்தம்.
தொடர்ந்து நமது வலைப் பதிவைப் பார்வையிடும் ஓரியண்டல் நண்பர்கள் தங்களுடன் சம காலத்தில் பயின்ற பிற நண்பர்களுக்கும் இந்த வலைப் பதிவை அறிமுகம் செய்யும் படியும்,பதிவைப் பார்வையிட்டு இதில் உள்ள குறை நிறைகளை அந்தந்த கட்டுரைகளுக்கு அடியிற் காணப்படும் கமெண்ட்ஸ் பகுதியில் தங்கள் கருத்துக்களை எழுதும்படியும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
பொன் விழா நிகழ்ச்சிகள் அடங்கிய 5 குறுந்தகடுகள், மற்றும் பொன்விழா மலர் ஆகியவையும் சவூதி அரேபியாவில் வசிக்கும் ஓரியண்டல் நண்பர்களுக்கு இலவசமாக கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ரியாத் மாநிலம்
உபைதுர்ரஹ்மான் (பள்ளப்பட்டி)
செல்0564382984
தம்மாம் மாநிலம்
சகோதரர் அப்துல் காலிக் (இளங்காகுறிச்சி)
செல் 0569150570
பிற பகுதிகள்

A.அப்துஸ்ஸலாம் மஸ்தூக்கா (திருப்பந்துருத்தி)
1976 ஆம் ஆண்டு ஓ.எஸ்.எல்.சி மாணவர்
செல்: 0551038865
சவூதி அரேபியா
மின்னஞ்சல் முகவரி masdooka@hotmail.com

நமது பள்ளி

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்...

ஓரியண்டல் அரபி மேல் நிலைப் பள்ளி
ஆக்கூர் 609 301 நாகை மாவட்டம்

'உங்களில் உள்ள விசுவாசிகளுக்கும் கல்வி அறிவு கொடுக்கப்பட்டோருக்கும் அல்லாஹ் பதவிகளை உயர்த்துவான்.. அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கு அறிந்தவனாக இருக்கிறான்' (திருக்குர்ஆன் 58:1)

ஆக்கூர் ஓரியண்டல் அரபி மேல் நிலைப்பள்ளி, முதன் முதலாக 25-08-1947ல் தேசப்பற்று மிக்கவரும், சுதந்திரப் போராட்ட வீரரும், மௌலானா அபுல் கலாம் ஆஸாத் மற்றும் மகாத்மா காந்தியின் கொள்கையில் பிடிப்பு கொண்டவருமான மர்ஹூம் எம்.எஸ்.எம் ஷரீப் அவர்களால் நடு நிலைப் பள்ளியாக ஆரம்பிக்கப்பட்டது. இப்பள்ளியை நிர்வகிப்பதற்காக மர்;ஹூம் எம்.எஸ்.எம் ஷரீப் அவர்கள் மௌலானா அபுல் கலாம் ஆஸாத் கிராம கமிட்டியை ஏற்படுத்தினார்கள். இந்தக் கமிட்டி சொசைட்டி ஆக்டின் படி 25-02-1955ல் Act XXI of 1860 S.No 20F 1955 எண்ணில் பதிவு செய்யப்பட்டது.

பின்பு மௌலானா அபுல் கலாம் ஆஸாத் கிராமக் கமிட்டியின் ஆலோசனைப்படி அரசு அங்கீகாரம் பெற்ற எமது பள்ளி 1955ல் அரபியை முதன் மொழியாகக் கொண்டு உலகக் கல்வியையும் இஸ்லாமிய மார்க்கக் கல்வியையும் படித்துக் கொடுக்கக் கூடிய தமிழ் நாட்டின் முதல் ஓரியண்டல் அரபி உயர் நிலைப் பள்ளியாக 1964ல் உயர்த்தப் பெற்று நிலை நிறுத்தப்பட்டது. இன்று சாதி, மத பேதமின்றி அனைத்து தரப்பைச் சேர்ந்த மாணவ மாணவியர்களுக்கும் கல்வி கற்றுக் கொடுக்கப்படுகிறது. மத நல்லிணக்கம் பயிற்று விக்கப்படுகிறது.

உலகக் கல்வியையும் இஸ்லாமிய மார்க்கக் கல்வியையும் கற்றுத் தரும் ஒரே பள்ளியாக, ஆக்கூர் ஓரியண்டல் அரபி உயர் நிலைப் பள்ளி இருந்தமையால் தமிழ் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும், பல்வேறு மாநிலங்களிலிருந்தும்,வெளி நாட்டிலிருந்தும் மாணவர்கள் ஆக்கூர் ஓரியண்டல் அரபி உயர் நிலைப் பள்ளியைத் தேடி வந்து கல்வி கற்றுச் சென்றார்கள். இன்று அவர்களில் பலர் மார்க்கப்பற்றுடன் உயர்ந்த பதிவிகளிலும் அந்தஸ்திலும் உள்ளனர்.
ஆம்பூர், புதுக்கோட்டை, விழுப்புரம்,உளுந்தூர்பேட்டை, சென்னை வண்டலூர், கும்பகோணம், கம்பம், பள்ளப்பட்டி போன்ற ஊர்களில் ஓரியண்டல் அரபிப் பள்ளிக் கூடங்கள் அமைவதற்கு நமது ஆக்கூர் ஓரியண்டல் அரபி உயர் நிலைப் பள்ளி தான் முன் மாதிரியாக அமைந்தது.

மிகக் குறைந்த மாணவர்களை மட்டும் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பள்ளி இன்றைய நிலையில் 450 மாணவ மாணவியர் படிக்கும் பள்ளியாக வளர்ச்சி அடைந்துள்ளது. சுய நிதி கல்வித் திட்டத்தின் கீழ் நமது பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக மாற்ற நிதிப் பற்றாக்குறையின் காரணமாக பல ஆண்டுகளுக்குப் பிறகே அரசு ஆணை நாள் 22-0-8-2002ல் மேல் நிலைப் பள்ளியாக உயர்த்தப்பட்டு வளர்ச்சி அடைந்துள்ளது.

நமது பள்ளில் நாட்டுப்பற்று, தேசிய ஒருமைப்பாடு, மத நல்லிணக்கம் ஆகியவைகள் போதிக்கப்படுவதுடன் இஸ்லாமிய ஒழுக்க மாண்புகளுக்கு முக்கித்துவம் கொடுக்கப்பட்டு இஸ்லாமிய மார்க்கக் கல்வி கற்றுக் கொடுக்கப்படுகிறது. மேலும் இஸ்லாமிய முறைப்படி வாழப் பயிற்சியும் அளிக்கப்படுகிறது. எமது பள்ளியில் மாணவ மணவியர்களுக்கு தனித்தனி வகுப்பறைகளில் அரபி, ஆங்கிலம், தமிழ் ஆகியவற்றுடன் திருக் குர்ஆன் ஹதீஸ் மற்றும் பிக்ஹுச் சட்டங்களும் பயிற்றுவிக்கப்படுகின்றன. மேலும் உள்ளூர் பெண்களுக்கு தினமும் காலையில் திருக்குர்ஆன் ஓதவும் அரபி எழுதவும் கற்றுத் தரப்படுகின்றது.

பள்ளி வளாகத்தில் உள்ள மாணவர் விடுதியில் 150 முஸ்லிம் மாணவர்கள் தங்கிப் படிப்பதுடன் பள்ளி வளாகத்தில் உள்ள பள்ளிவாசலில் ஐந்து வேளைத் தொழுகையும் ஜமாத்தாக தொழுதும் வருகின்றனர். 1955 ஆம் ஆண்டு முதல் ஏழை அநாதை மாணவர்கள் சுமார் 100 பேர் தனியே இப்பள்ளி நிர்வாகத்தின் கீழ் உணவு, உடை, உறையுள் ஆகியவை இஸ்லாமியக் கொடையாளிகள் மற்றும் முன்னாள் மாணவர்களிடமிருந்து பெறப்படும் நிதியைக் கொண்டு பராமரிக்கப்படுகின்றனர்;.
இப்பள்ளிக் கூடத்தின் அனைத்துக் கட்டடங்களும் (மாணவர் விடுதி, பள்ளிக் கட்டடம், பள்ளிவாசல் உட்பட) ஓட்டுக் கட்டங்களாக இருந்தன. அந்த இடங்களில் உறுதியான நிரந்தரக் கட்டடங்கள் இஸ்லாமியப் புரவலர்கள், மற்றும் முன்னாள் மாணவர்களால் அளிக்கப்பட்ட நன்கொடைகளின் மூலம் 1994 முதல் கட்டப்பட்டு வருகிறது.

1.மாணவர் விடுதி 3000 ச.அடி - 1994
2.சமையல் மற்றும் உணவுக்கூடம் 1600 ச.அடி - 1999
3. 4 வகுப்பறைகள் (கீழ் தளம்) 2800 ச.அடி - 2002
4 வகுப்பறைகள் (முதல் தளம்) 2800 ச.அடி - 2003
4 வகுப்பறைகள் (இரண்டாம் தளம்) 2800 ச.அடி - 2004
4. பரிசோதனைக் கூடம் (கீழ் தனம்) 1000 ச.அடி - 2000
பரிசோதனைக் கூடம் (முதல் தனம்) 1000 ச.அடி - 2000
5. பள்ளிவாசல் கீழ் தளம் (ஆண்கள்) 2500 ச.அடி - 2004
பள்ளிவாசல் முதல் தனம் (பெண்கள்) 2500 ச.அடி - 2005
(தற்சமயம் கட்டுமான நிலையில் உள்ளது)
6. உணவு விடுதி 800 ச.அடி - 2005
7. மாணவர் விடுதி 1000 ச.அடி - 2005
8. மாணவர் விடுதி 400 ச.அடி - 2006
9. சைக்கிள் ஸ்டாண்டு 700 ச.அடி - 2006
10. வார்டன், இமாம் ரூம்,ஸ்டோர் ரூம் 600 ச.அடி - 2007
11. 4 வகுப்பறைகள் 2800 ச.அடி - 2007
12. டோட்டார் சைக்கிள் ஸ்டாண்ட் 200 ச.அடி- 2007
--------------------------------------------------
அன்பான வேண்டுகோள்
குறைந்த மாணவர்களைக் கொண்டு துவக்கப்பட்ட நமது பள்ளியில் நடப்பு 2005-2006 ஆம் ஆண்டில் 450 மாணவ மாணவியர்கள் படிக்கும் பள்ளியாக வளர்ச்சி அடைந்துள்ளது. எதிர்காலத்தில் மேலும் வளர்ச்சி அடைய வேண்டிய நிலையில் உள்ள நமது பள்ளிக்கு நிதிப் பற்றாக்குறை ஒரு பெரும் சவாலாக உள்ளது.

நமது பள்ளியை நிர்வகிக்கும் மௌலானா அபுல் கலாம் ஆஸாத் கிராம கமிட்டிக்கு 1955 ஆம் ஆண்டு முதல் கொடையுள்ளம் கொண்ட இஸ்லாமிய மக்கள், முன்னாள் மாணவர்கள் கொடுக்கும் நிதியைக் கொண்டு நமது பள்ளி வளர்ச்சி அடைந்து வருகிறது. அல்ஹம்து லில்லாஹ் எனினும் மேலும் வளர்ச்சி அடைய வேண்டிய எமது பள்ளிக்கு போதிய நிதி ஆதாரங்கள் இல்லாததால் இஸ்லாமிய நல்லோர்களிடமிருந்து நன்கொடையாக எதிர்பார்க்கிறது.

அல்லாஹ்வுடைய பாதையில் தங்களுடைய செல்வங்களை எவர் செலவு செய்கின்றார்களோ அத்தகையோரின் உதாரணம் ஒரு தானிய விதையைப் பயிரிடுவது போன்றதாகும்.அதிலிருந்து ஏழு கதிர்கள் முளைக்கின்றன. ஒவ்வொரு கதிரும் நூறு தானிய மணிகளைக் கொண்டுள்ளது. இவ்வாறு அல்லாஹ் தான் நாடுவோருக்கு அவர்களுடைய நற்செயல்களின் பயன்களை பன்மடங்காக்குகிறான்.அல்லாஹ் மிக்க விசாலமானவன். யாவற்றையும் அறிகிறவன். (திருக்குர்ஆன் 2:261)

1.9.07

OUR SCHOOL

In the name of Allah the Most Beneficent and most Merciful

ORIENTAL ARABIC HIGHER SECONDARY SCHOOL

AKKUR 609 301 NAGAPPATTINAM. Dist
---------------------
---

.....'Allah will Raise up to (suitable) ranks (And degree), those of you have believe and who have been granted knowledge and Allah is well-acquinted with all ye do" (Quran 58:11)

Akkur Oriental Arabic Higher secondary School was founded by Marhoom M.S.M.SHARIF on 25-08-1947 immediately after the independance of India in the name of SANMARKA KALA NILAYAM as middle school. Marhoom M.S.M.Sharif who was a follower of Abul Kalam Azad and Mahatma Gandhi, formed a committee named Moulana Abul Kalam Azad Grama Committee to govern and to develop the institution. Later Moulana Abul Kalam Azad was registered under the Society Act XXI of 1860 in S.No. 2 of 1955 in the year 1955.

After deep thinking Moulana Abul Kalam Azad Grama Committee approached the government for the change of syllabus in which they succeeded in the year 1955 and ARABIC was taught as a first language under the ORIENTAL syllabus. Thus the SANMARKA KALA NILAYAM had a change and become ever first ORIENTAL ARABIC SCHOOL in which Arabic language was though along the ISLAMIC studies. The school was upgraded as a high school in the year 1964. This school has all section of societies cutting out Caste, And creed, our school promoters a secular outlook among the students.

AKKUR ORIENTAL ARABIC HIGH SCHOOL was only institution in Tamil Nadu where the Islamic subject were taught, and for this particular reason students from various part of Tamil Nadu and even from other states of India and from foreign country came to Akkur Oriental Arabic High School and were successful in obtaining their goal of Islamic studies along with regular subject. Many of the students who have studied at this great institution have attained very high position in society, some of them are in command of power and wealth along with Muslim character, Akkur Oriental Arabic High School is the role model which inspired so many people to start Oriental Arabic High School in towns like Ambur, Pudukkottai, Villupuram, Ulundurpet, Chennai Vandalur, Kumbakonam, Cumbam, Pallappatti and other places in Tamil Nadu.

The Institution which started with just a handful number has grown to a strength of 450 students at present which comprises of Boys and Girls. Under self financing scheme the institution was offered to upgrade as a higher secondary school by the Educational Department Due to the severe financial crisis the up gradation was delayed for long period and with great efforts on 22-08-2002 the school was upgraded as a HIGHER SECONDARY SCHOOL by G.O.N.M.No. 6106/WII/2002.

In our institution National Integrity and Communal Harmony is taught, much importance is given to Islamic studies and culture and also make them to practice the way of true Islamic life. Boys and Girls are taught Arabic, Tamil and English along with Quran, Hadees and Fiqh in separate class rooms. Moreover girl students of the local village are taught Quran to read and write Arabic in the morning hours.

Around 150 Boy students are given shelter in the hostel situated within the campus and they pray five time 'salah" in the mosque regularly. Since 1955 poor and orphans around 100 in number are provided shelter, food and cloths through the funds received from philanthropists and old students.

Since the building (Mosque, Class rooms and students Hostel) became old due to age and found to be unsafe the management has embarked on building of concrete floored structures from 1994, all the below mentioned projects have been undertaken with the help of the funds received from Philanthropists, and Old students.

1. Hostel Block Ground Floor 3000 Sq.ft - 1994
2. Kitchen and Dining Hall Ground Floor 1600 Sq.ft - 1999
3. Class Rooms - Ground Floor (4) 2800 Sq.ft - 2002
Class Rooms - First Floor (4) 2800 Sq.ft - 2003
Class Rooms - Second Floor (4) 2800 Sq.ft - 2004
4. Laboratory - Ground Floor 1000 Sq.ft - 2000
Laboratory - First Floor 1000 Sq.ft - 2004
5. Mosque Ground Floor (for Boys) 2500 sq.ft - 2004
Mosque - First Floor (for Girls) 2500 Sq.ft - 2005
(Under construction)
6. Kitchen 800 Sq.ft - 2005
7. Hostel 1000 Sq.ft - 2005
---------------------------------------------------------------------------------



HEARTY APPEAL
The Institution stsrted with a few students has grown to a strength of 450 students consisting boys and girls in the year 2005-2006. Moulana Abul Kalam Azad Grama Committee which governs the Institution to progress, the funds received are not sufficient to meet the requirements, the committee makes a request and pleads for more funds from all well wishers to contribute to their best ability for a good cause.
''The parable of those who spend their substance in the way of ALLAH is that of a grain of corn: It growth seven ears, and each a ear Hath a hundred grains. ALLAH giveth manifold increase to whom He pleaseth: And ALLAH careth for all and He knoweth all things."
(The Quran 2:261)